Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போதிய விற்பனை நடைபெறாத அம்மாஉணவகங்களை இடம்மாற்றஆலோசனை

Print PDF

தினகரன்             20.06.2013 

போதிய விற்பனை நடைபெறாத அம்மாஉணவகங்களை இடம்மாற்றஆலோசனை

மதுரை, : போதிய அளவில் விற்பனை நடைபெறாத 3 அம்மா உணவகங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மலிவு விலை (அம்மா) உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தினமும் தலா 300 பேருக்கு காலையில் ஒரு இட்லி ரூ.1 விலையில் 4 இட்லி, மதியம் ஒரு சாம்பார் சாதம் (ரூ.5), ஒரு தயிர் சாதம் (ரூ.3) வீதம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உணவகங்கள் புதூர், ராம்நகர், மேலவாசல், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், ராமராயர் மண்டபம், சிஎம்ஆர் ரோடு, ஆரப்பாளையம், பழங்காநத்தம், காந்திபுரம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

இதில் காந்திபுரம், பழங்காநத்தம், சிஎம்ஆர் ரோடு ஆகிய 3 உணவகங்களில் போதிய அளவு விற்பனை இல்லை. இதனால் இங்கிருந்து உணவுப்பொருட்கள் வெளியே கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றன.

அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவு, குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை ஆகாமல் இருந்தால், அந்த உணவை ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று இலவசமாக வழங்க வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் உணவகத்தை விட்டு வேறு இடத்தில் கொண்டு சென்று விற்பனை செய்யக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்மா உணவகம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த 3 உணவகங்களையும் பொதுமக்கள் கண்டுபிடிப்பது கடினம்.

உணவகம் திறக்கப்பட்டது முதல் விற்பனை சரியாக இல்லை என கணக்கெடுப்பில் தெரியவந்தது. ஆனால் திறந்த உணவகத்தை என்ன செய்வது என்பதில் முடிவு எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இங்கு தயாரிக்கப்படும் உணவு, வெளியே விற்பனை செய்யப்படுவதை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் திகைத்துள்ளனர். இதனால் விற்பனை இல்லாத மூன்று உணவகங்களையும், பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு மாற்றலாமா என ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

ஈரோட்டில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி             20.06.2013 

ஈரோட்டில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்


ஈரோட்டில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்கவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

ஈரோடு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் விஜயலட்சுமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனா பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, Ôநிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பாற்றும் வகையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மாவட்டம் முழுவதும் நிறைவேற்றப்படும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீதி நாடகங்கள் நடத்தியும் பிரசாரம் செய்யப்படும்Õ என்றார்.

துண்டு பிரசுரங்கள்

மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பிரப் ரோடு, சவீதா சந்திப்பு, எம்.ஜி.ஆர். சிலை, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர், பார்க் ரோடு வழியாக ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஈரோடு அரசு மகளிர் பள்ளிக்கூடம், மாநகராட்சி காமராஜர் மேல்நிலைப்பள்ளி, ரெயில்வே காலனி மாநகராட்சி பள்ளிக்கூடம், இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கூடங் களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினார்கள்.

பல்வேறு கோஷங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திச்சென்றனர். ஊர்வலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், மாநகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

மேயர், துணை மேயர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடந்து சென்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மழைநீர் சேகரிப்பு மாதிரி வடிவம் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், விஜயகுமார், ரவிச்சந்திரன், மாநகர நல அதிகாரி டாக்டர் அருணாதேவி மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Print PDF

தினமணி             20.06.2013 

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

ஆம்பூர் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

இதில் நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி தலைமை வகித்து பேசியது: குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாமே ஒரு காரணம்.  ஏனெனில் மழைநீரை சேகரிக்காமல் விட்டுவிடுகிறோம்.  சாலைகள் அனைத்தும் சிமென்ட் சாலைகள், தார் சாலைகளாக மாறியுள்ளன. மழைநீர் பூமியில் ஊராமல் கழிவுநீர்க் கால்வாயில் சென்றுவிடுகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் கவர்களாலும் மழைநீர் பூமிக்குள் செல்லாமல் மேற்பரப்பிலேயே தங்கி ஆவியாகிவிடுகிறது. ஆகவே நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மழைநீரை சேகரிப்பதில் பொறுப்பு, கடமை உள்ளது.  ஆகவே அந்தப் பொறுப்பை, கடமையை முழுமையாக கடைப்பிடித்து மழைநீரை சேகரித்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார், துப்புரவு அலுவலர் பாஸ்கரன், ஷபீக் ஷமீல் சமூக சேவை சங்கத் தலைவர் பிர்தோஸ் கே. அஹமத்,  துப்புரவு ஆய்வர்கள் சிவகுமார், பாலசந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் பி.கே.மாணிக்கம், காசிநாதன், சீனிவாசன், சரவணன், ஆகில் அஹமத், அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மழைநீரை சேகரிக்கும் முறை குறித்து படக்காட்சி காண்பிக்கப்பட்டது.

 


Page 156 of 841