Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Print PDF

தினத்தந்தி               19.06.2013

பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சூலூர் ஒன்றியம் பள்ளபாளையம் பேரூராட்சியில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தொடங்கி வைத்தார். பாரதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் அனைத்து வார்டுகள் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகதை அடைந்தது. ஊர்வலத்தின் போது மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.பிரகாஷ், செயல் அலுவலர் ரா.சுந்தர்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ஆனந்தகுமார், குமாரசாமி, பிரேமாகுமார், செல்வி, வசந்தகுமார், ரவிச்சந்திரன், மற்றும் அலுவலக பணியாளர்கள், ஆசிரிய–ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

போட்டி நிறைந்த உலகில் ‘தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும்’ பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை

Print PDF

தினத்தந்தி               19.06.2013

போட்டி நிறைந்த உலகில் ‘தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும்’ பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை

http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/sylendrababu.jpg

போட்டி நிறைந்த உலகில் தொடர்ந்து போராடினால் வெற்றி உங்களை தேடி வரும் என்று பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

பரிசளிப்பு விழா

 கோவை மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வில் முதல் 3 இடங்கள் மற்றும் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதல் 3 இடங்களை பிடித்த 21 மாணவ–மாணவிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் பரிசளிப்பு விழா கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் கடலோர காவல் படை கூடுதல் டி.ஜி.பி சி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சாதனை படைக்க ஆசை

உங்கள் மனதில் பெரிய சாதனை படைக்க ஆசை உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் 10 யானை களுக்கு சமமாக உள்ளீர்கள். ஆகவே சாதனை படைக்க ஆசைப்படுங்கள். தற்போது போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. ஆகவே நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். அப்போது தான் வெற்றி உங்களை தேடி வரும்.

வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம். அதில் நீங்கள் போர்வீரர்களாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். நீங்கள் சாதாரண ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. சாதனை படைக்க முடியும். ஏழையாக பிறப்பதில் தவறு கிடையாது. ஆனால் ஏழையாக பிறந்து வளர்ந்து இறந்து போவது தான் மிகப்பெரிய தவறு. ஏழை சாதிப்பதில் எந்த தடையும் இருப்பதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.

பதவிகள் காத்திருக்கிறது

அரசு பள்ளியில் படிப்பதால் சாதனை படைக்க முடியாது என்று எண்ணக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட அரசு பள்ளியில் படித்தவர் தான். திறமையுள்ள மாணவர்களுக்கு உயர்ந்த பதவிகள் காத்திருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. நீங்கள் நன்றாக படித்தால், உங்கள் பெற்றோர்தான் முதலில் சந்தோஷம் அடைவார்கள். எனக்கு தெரிந்த மாணவர் ஒருவர் ஓட்டல் கடையில் வேலை பார்த்து, அதிக மதிப்பெண் பெற்று, தற்போது ஆந்திராவில் ஐ.ஏ.எஸ் பணியில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் ஜி.லதா, போலீஸ் துணை சூப்பிரண்டு (மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு) பாலாஜி சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தனியார் அமைப்பின் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், செயலாளர் எம்.என்.பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனை

Print PDF

தினமணி               19.06.2013 

16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனை

திருநெல்வேலி மாநகராட்சியில் அம்மா மலிவு விலை உணவகங்களில் கடந்த 16 நாள்களில் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனையாகியுள்ளன. மேலும், தலா 51 ஆயிரம் தயிர் சாதங்கள் மற்றும் சாம்பார் சாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டன. இவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து மேயர் விஜிலா சத்தியானந்த், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இம் மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. 7 உணவகங்கள் நிரந்தர கட்டடங்களிலும், வையாபுரிநகர், அம்பேத்கர் நகர், திம்மராஜபுரம் ஆகிய இடங்களில் மட்டும் தாற்காலிக இடங்களிலும் உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த மூன்று உணவகங்களும் வியாழக்கிழமை (ஜூன் 20) முதல் நிரந்தரக் கட்டடங்களில் இயங்கும். மேலப்பாளையம் மண்டல அலுவலக வளாகம், பாளையங்கோட்டை மணக்காவலன்பிள்ளை மருத்துவமனை அருகே, வையாபுரி நகர், தொண்டர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உணவுகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 1200 இட்லி, 300 தயிர் சாதம், 300 சாம்பார் சாதம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில கடைகளில் விற்பனை சற்று குறைவாக உள்ளது. அந்த உணவகங்களில் இருந்து உணவு அருகில் உள்ள மற்ற உணவகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இப்போது மதியம் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள உணவகங்களில் வழங்கப்படும் சப்பாத்தி உள்ளிட்ட இதர உணவு வகைகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படும்.

அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், உணவகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் அனுமதி பெற்று விரிவுபடுத்தப்படும் என்றார் மேயர்.

1.92 லட்சம் இட்லிகள் விற்பனை:திருநெல்வேலியில் மலிவு விலை உணவகங்கள் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டன.  முதல் நாளில் காலை உணவான இட்லி விற்பனை செய்யப்படவில்லை. மதியம் தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. 3-ம் தேதி முதல் தான் இட்லி விற்பனை தொடங்கியது.

அதன்படி செவ்வாய்க்கிழமை வரை கடந்த 16 நாள்களில் 10 உணவகங்களிலும் மொத்தம் 1.92 லட்சம் இட்லிகள் விற்பனையாகியுள்ளன. 2-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 17 நாள்களில் 10 உணவகங்களிலும் சேர்த்து 51 ஆயிரம் தயிர் சாதங்கள், 51 ஆயிரம் சாம்பார் சாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 


Page 158 of 841