Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி               19.06.2013 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில், மக்கள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில், பா.ம.க. மாநகர் மாவட்டச் செயலர் சு. ஹரிகரன் தலைமையில் அக் கட்சியினர் மேயரை சந்தித்து அளித்த மனு:

கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 593 மாணவிகளில் 588 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 11-ம் வகுப்பில் 450 மாணவிகளுக்கு மட்டுமே வகுப்பறை வசதி இருப்பதால் 138 மாணவிகளின் நிலைமை பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் பிற உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவிகளும் இப்பள்ளியில் பிளஸ்-1 சேர விண்ணப்பித்துள்ளனர்.

எனவே, இப் பள்ளியில் மேலும்  238 மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அம்மா உணவகம் தேவை: திருநெல்வேலி டேர் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தர்ராஜன், மேயரை சந்தித்து அளித்த மனு:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1500 உள்நோயாளிகள் உள்ளனர். மேலும் 10 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர். இங்கு சிகிச்சை பெறுபவர்கள் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். எனவே, மருத்துவமனை வளாகத்தில் அம்மா மலிவு விலை உணவகம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

எல்.ஐ.சி. காலனி மற்றும் பி அன்ட் டி காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் செயலர் டி. சாமுவேல் ஐசக் தலைமையில் மேயரிடம் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் குப்பைத் தொட்டிகள், தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயருக்கு நன்றி

Print PDF

தினமணி               19.06.2013

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயருக்கு நன்றி

கருணை அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மேயர் சௌண்டப்பனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்களின் வாரிசுகள் தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வலியுறுத்தி, கடந்த ஜூன் 11-ஆம் தேதி மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, தகுதியுடையவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என மேயர் சௌண்டப்பன் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 15-ம் தேதி அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற விழாவின் போது, தகுதியுடைய 118 பேருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் மேயர் சௌண்டப்பனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 21ல் நடைபெறுகிறது

Print PDF

தினகரன்                 18.06.2013 

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூன் 21ல் நடைபெறுகிறது

மதுரை, : மாநகராட்சி ஆசிரியர்களுக்கு வரும் 21ம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகராட்சி, அண்ணா மாளிகையில் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் வரும் 21ம் தேதி நடக்கிறது.

அன்று காலை 10.30 மணிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 11.30 மணிக்கும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 3 மணிக்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 3.30 மணிக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

பணி மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் விண்ணப்ப படிவத்தை 19ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிட விபரம் மற்றும் பணிமூப்பு பட்டியல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது என கல்வி அலுவலர் மதியழகராஜ் தெரிவித்துள்ளார்.
 


Page 159 of 841