Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF
தினமணி        04.06.2013

கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம்


கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சை.வாப்பு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 பேரூராட்சி செயல் அலுவலர் பழனி முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் ஜெக தீஸ் மாதாந்திர அறிக்கை வாசித்தார்.

 அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

 நடராஜ் (திமுக): பவானி ஆற்றில் கலக்கும் டானிங்டன் ஆறு, கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

 மேலும், ஆற்றின் அருகில் ஆக்கிரமிப்பால் நீரோடை குறுகியுள்ளது. இந்த ஆற்றைத் தூர்வாரி, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

 சிவகுமார் (தேமுதிக): காமராஜர் சதுக்கம்-கோட்டஹால் ரோட்டில் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். இதற்குத் தடை விதிக்க வேண்டும்.

 ராஜேஸ்வரி வடிவேல்: காம்பாய் கடை அருகில் உள்ள ஆற்றைத் தூர்வார வேண்டும். மேலும், பேருந்து நிலையம்-காம்பாய் கடை செல்லும் வழியில் நீரோடைகள் உள்ள பகுதிகளில் சிலர் ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.

 முகமது ஜாபர் (திமுக): கோத்தகிரி பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. வாகன நிறுத்தத்திற்கு பேரூராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கட்டணம் வசூலிக்க வேண் டும்.

 தலைவர் சை.வாப்பு: டானிங்டன் மற்றும் காம்பாய் கடை நீரோடைகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, போக்குவரத்துக் காவல் துறைக்கு தகவல் கொடுத்து நடைபாதையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தப்படும்.

 சுகாதார ஆய்வாளர் கண்ணன் பணியிட மாற்றத்தில் பேரூராட்சி நிர்வாகம் தலையிடாது. தேவைப்பட்டால் கவுன்சிலர்களும், சுகாதார ஆய்வாளரும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.

 இதில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் கெüரவிக்கப்பட்டார். துணைத் தலைவர் சுந்தரி நன்றி கூறினார்.
 

மதுரையில் அம்மா உணவகம் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?

Print PDF
தினமணி        04.06.2013

மதுரையில் அம்மா உணவகம் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா?


மதுரையில் துவங்கப்பட்டுள்ள மலிவு விலை உணவு விநியோக அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சென்னையைப் போல, மதுரையிலும் வார்டுகள்தோறும் அம்மா உணவகங்களைத் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விற்பனை அளவையும் அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, மதுரை உள்ளிட்ட மற்ற மாநகராட்சிகளிலும் பொதுமக்களுக்கு மலிவுவிலையில் உணவு வழங்கும் அம்மா திட்ட உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை துவங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம், பழங்காநத்தம், மேலவாசல், சிஎம்ஆர் சாலை, புது ராமநாதபுரம் சாலை, ராமராயர் மண்டபம், காந்திபுரம், ஆனையூர், ஆரப்பாளையம், கே.புதூர் ஆகிய 10 இடங்களில் இந்த உணவகங்கள் துவங்கப்பட்டன. இங்கு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் விற்பனை துவங்கியது.

உணவகங்கள் திறப்பதற்கு முன்பே ஏராளமானோர், அங்கு கூடியிருந்ததால் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் இட்லி, சாம்பார் வாங்கி ருசித்தனர்.

சுமார் 1 மணி நேரத்தில் இட்லி விற்று தீர்ந்தது. 300 பேருக்கு மட்டுமே இட்லி தயாரிக்கப்பட்டிருந்ததால், தாமதமாக வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இட்லி, சாம்பார் ருசியாக இருந்ததாகவும், தொடர்ந்து இதே தரத்தில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பகல் 12 மணிக்கு உணவகங்கள் முன் ஏராளமானோர் திரண்டதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வரிசையில் நின்று சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டனர். 1 மணி நேரத்தில் அவையும் விற்றுத் தீர்ந்ததால் உணவகம் மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஹோட்டல்கள் மட்டுமின்றி, பிளாட்பார உணவகங்களில் கூட இட்லி ரூ. 5 முதல் ரூ.10-க்கும், சாம்பார், தயிர் சாதங்கள் தலா ரூ. 20 முதல் ரூ. 25-க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படுவதால், வயிறார உணவு கிடைப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது.

அதேசமயம், உணவகத்தில் 300 பேருக்கு மட்டுமே உணவுகள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோருக்கு உணவு கிடைக்காத நிலை இருக்கிறது. எனவே, இந்த எண்ணிக்கையை 500 வரை அதிகரிக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை போன்று கூடுதல் உணவு பதார்த்தங்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும், அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உணவகங்கள் கட்டுவதற்கு அரசு நிதி கொடுக்க வேண்டும். எனவே, உணவகங்களை அதிகரிப்பது குறித்து அரசு உத்தரவிட்டால், உடனடியாக தேவைப்படும் உணவகங்களை திறக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. அதேசமயம், பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து, கூடுதலாக உணவுகளைத் தயாரிக்கவும், உணவுப் பதார்த்தங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆய்வு செய்து ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
 

அம்மா உணவக புதிய வகைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு: ஒரேநாளில் 33 ஆயிரம் பொங்கல் விற்பனை

Print PDF
தினமணி        04.06.2013

அம்மா உணவக புதிய வகைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு: ஒரேநாளில் 33 ஆயிரம் பொங்கல் விற்பனை


சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஒரே நாளில் மட்டும் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கூடுதலாக பொங்கல், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றின் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.இதனையடுத்து காலையில் வழங்கப்படும் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் வழங்கப்படும் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கருவேப்பில் அல்லது எலுமிச்சை சாதமும் வழங்கப்படுகிறது.ஏற்கனவே ஏழை மற்றும் தொழிலாளர்கள் அம்மா உணவகங்களுக்கு அமோக வரவேற்பு அளித்து வந்தனர். இப்போது கூடுதல் உணவு வகைகள் அளிக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்த விற்பனை, திங்கள்கிழமை முதல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை 200 அம்மா உணவகங்களிலும் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மேலும் மதிய வேளையில் 18,146 கருவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கருவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்படும். இன்று முதல் நாள் என்பதால் இரண்டு சாத வகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் புதிய சாத வகைகளின் விற்பனை தொடங்கப்பட்டதால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை சரிந்துள்ளது. இந்த உணவகங்களில் வழக்கமாக சுமார் 3.30 லட்சம் இட்லிகளும் 30,000 தயிர் சாதங்களும் 60,000 சாம்பார் சாதங்களும் விற்பனை ஆகும். புதிய உணவு வகைகளின் அறிமுகத்தால், சுமார் 2.50 லட்சம் இட்லிகளும், 35,000 சாம்பார் சாதங்களும், 28,000 தயிர் சாதங்களும் மட்டுமே விற்பனையாகியுள்ளன.அம்மா உணவகங்கள் தொடங்கியபோதே, கூடுதல் உணவு வகைகள் வழங்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Page 168 of 841