Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது இட்லி, சாதத்தை ருசித்து சாப்பிட்டனர்

Print PDF
தினதந்தி       03.06.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தில் கூட்டம் அலைமோதுகிறது இட்லி, சாதத்தை ருசித்து சாப்பிட்டனர்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அம்மா உணவகத்தில் நேற்று கூட்டம் அலைமோதியது. இட்லி, சாதத்தை வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

அம்மா உணவகம்


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை வீடியோ காண்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.நேற்று முதல் முழுவீச்சில் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலையில் உணவகத்தில் இட்லி விற்பனை செய்யப்பட்டது. ஒரு இட்லி ரூ.1–க்கு விற்பனை செய்தனர்.

மக்கள் கூட்டம்

இதனால் காலை முதல் உணவகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.பல உணவகங்களில் காலை 8 மணிக்குள் இட்லி விற்று தீர்ந்தது. சில உணவகங்களில் சுமார் 10 மணி வரை விற்பனையானது.நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 882 இட்லி விற்பனையாகி உள்ளது. அதே போன்று மதியம் தயிர்சாதம், சாம்பார் சாதம் விற்பனை நடந்தது. அப்போதும் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உணவை வாங்கி சாப்பிட்டனர்.
 

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

Print PDF
தினதந்தி       03.06.2013

நெல்லை மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு


நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் நேற்று அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.

அம்மா உணவகம்

சென்னையில் ஏழை–எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சென்னை மாநகராட்சி பகுதியில் மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கினார்.ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர்சாதம் ஆகியவை அங்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்துக்கு சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

நெல்லையிலும் தொடங்கப்பட்டது


நெல்லை மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் தொடக்கப்பட்டு உள்ளது.மேலப்பாளையம் வார்டு அலுவலகம் அருகே, அரசு ஆஸ்பத்திரி அருகே, தச்சநல்லூர் மண்டல அலுவலகம், பேட்டை மாநகராட்சி மருத்துவமனை வளாகம், டவுன் தொண்டர் சன்னதி அருகே உள்ள வார்டு அலுவலகம், வையாபுரிநகர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அருகே, பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை ஆஸ்பத்திரி வளாகம்.

அம்பேத்கார் காலனி, திம்மராஜபுரம் வார்டு அலுவலகம், நெல்லை சந்திப்பு கணேசபுரம் தொடக்கபள்ளி கட்டிடம் ஆகிய 10 இடங்களில் இந்த அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணவகத்தில் உணவு தயார் செய்யும் பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த உணவகங்களை சென்னையில் இருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வீடியோகான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அமைச்சர் செந்தூர் பாண்டியன்

மேலப்பாளையம் வார்டு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு இருந்த அம்மா உணவகத்தில் நடந்த விழாவுக்கு மேயர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் சி.சமயமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், டாக்டர் துரையப்பா, முத்துச்செல்வி, துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் பி.செந்தூர்பாண்டியன் கலந்து கொண்டு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். உணவுடன் சர்க்கரை பொங்கல் இலவசமாக வழங்கப்பட்டது.தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் ஆர்.முருகையாபாண்டியன், நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மோகன், எம்.சி.ராஜன், ஹைதர்அலி, தச்சை மாதவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல் முருகன், மாணிக்கராஜ், மாநகராட்சி ஆணையாளர் த.மோகன், என்ஜினீயர் ஜெய் சேவியர், உதவி ஆணையாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், தாசில்தார் சேதுராமலிங்கம், யூனியன் தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், பேரவை செயலாளர் சுதா பரமசிவன், துணை செயலாளர் தச்சை கணேசராஜா, பொருளாளர் ஆர்.பி.ஆதித்தன், பகுதி செயலாளர் எஸ்.டி.காமராஜ், கவுன்சிலர்கள் பரணி சங்கரலிங்கம், ஆறுமுகம், பரமசிவன், கட்சி நிர்வாகிகள் மகபூப்ஜான், கணபதிசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2780 தயிர்சாதம் விற்பனை அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம்

Print PDF
தினதந்தி       03.06.2013

அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2780 தயிர்சாதம் விற்பனை அரைமணி நேரத்தில் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம்


அம்மா உணவகத்தில் முதல் நாளில் 10 ஆயிரம் இட்லி, 3,568 சாம்பார் சாதம், 2,780 தயிர்சாதம் விற்பனையாயின. தொடங்கிய அரைமணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததால் சாப்பிட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அம்மா உணவகம்

மதுரை நகரில் 10 இடங்களில் அம்மா உணவகத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து இந்த உணவகங்கள் நேற்று காலை முதல் செயல்படத் தொடங்கின.

அங்கு 1 இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த உணவகம் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இட்லி விற்றது

நேற்று காலை 7 மணிக்கு உணவகங்கள் திறந்த சில நிமிடங்களில், மக்கள் கூட்டம் அலைமோதியது. இட்லிக்கு டோக்கன் பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள் அணிவகுத்து நின்றனர். ஆனால் ஒவ்வொரு உணவகத்திலும் சுமார் 1,000 இட்லி என்ற அளவிலேயே தயார் செய்யப்பட்டு இருந்தது.

எனவே கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரை மணி நேரத்திலேயே அனைத்து உணவகங்களிலும் இட்லி விற்றுப் போனது.

மாணவர்கள்

இதனால் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். அதே நிலை தான் பகலிலும் நடந்தது.

பகல் 12 மணிக்கு சாம்பார், தயிர் சாதம் விற்பனை தொடங்குவதற்கு முன்பே, ஏராளமான மக்கள் உணவகத்தை முற்றுகையிட்டு நின்றனர். விற்பனை தொடங்கியவுடன், கூட்டம் அலைமோதியது. புதூர் உணவகத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.

1 மணி நேரத்தில்...

இதே போல் நகரின் மற்ற உணவகங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரிசையாக நின்று டோக்கன் பெற்று உணவு அருந்தினர். சுமார் 1 மணி நேரத்தில் அனைத்து உணவகங்களிலும் சாம்பார், தயிர் சாதம் காலியானது. இதனால் விற்பனை முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

10 உணவகங்களிலும் காலையில் 9 ஆயிரத்து 930 இட்லிகள் விற்பனையாயின. பகலில் 3 ஆயிரத்து 568 சாம்பார் சாதமும், 2 ஆயிரத்து 780 தயிர் சாதமும் விற்பனையாயின.

மாநகராட்சி பதில்

அம்மா உணவகத்திற்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து உள்ளதால், இட்லி மற்றும் சாம்பார்–தயிர் சாதங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதிகளிலும் எழுந்து உள்ளது.

ஆனால் ஒவ்வொரு உணவகத்திலும் காலையில் இட்லி 300 பேருக்கும், சாம்பார் சாதம் 300 பேருக்கும், தயிர் சாதம் 300 பேருக்கும் என்ற அளவில் தயார் செய்வதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேயர் ஆய்வு

முன்னதாக நேற்று திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் மேயர் ராஜன் செல்லப்பா திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவு வகைகளை தினமும் தரமாக, சுகாதாரமாக தயாரித்து வழங்க வேண்டும் என மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் மேயர் தெரிவித்தார்.
 


Page 173 of 841