Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேலூரில் அம்மா உணவகம் 10 இடங்களில் திறப்பு காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினதந்தி         02.06.2013

வேலூரில் அம்மா உணவகம் 10 இடங்களில் திறப்பு காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்


வேலூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை காணொலி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அம்மா உணவகம்

முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வேலூர் மாநகராட்சி உள்பட 9 மாநகராட்சி பகுதிகளில் மலிவு விலை அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது.

வேலூர் அண்ணாசாலை எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகம் மற்றும் காட்பாடி டான்பாஸ்கோ பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் முகம்மது ஜான், கலெக்டர் சங்கர், மேயர் கார்த்தியாயினி, துணை மேயர் வி.டி.தருமலிங்கம், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, நகர்நல அலுவலர் பிரியம்வதா, பொறியாளர் தேவக்குமார், நகரமைப்பு அலுவலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

10 இடங்களில்...

முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் காணொலி மூலம் திறந்த வைத்த அடுத்த சில நிமிடங்களில் வேலூரில் அம்மா உணவகம் செயல்பட தொடங்கியது. பொது மக்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கொசப்பேட்டை மார்க்கெட் பள்ளி அருகிலும், கஸ்பா நெடுந்தெரு, விருபாட்சிபுரம் பழைய வணிக வளாகம் பின்புறம், பாகாயம் பள்ளி அருகிலும், சத்துவாச்சாரி பீடி தொழிலாளர் குடியிருப்பு, கலெக்டர் அலுவலகம் எதிரில், அலமேலுமங்காபுரம், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகமும் திறந்து வைக்கப்பட்டது. இதனை மேயர் கார்த்தியாயினி பார்வையிட்டார்.

10 இடங்களிலும் இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் 11 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்பட உள்ளது.
 

ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினதந்தி       02.06.2013

ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ஈரோடு மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா உணவகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அம்மா உணவகம்


தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் ஏழை–எளிய பொதுமக்கள், கூலித்தொழிலாளர்கள் குறைந்த விலையில் தரமான உணவு சாப்பிடும் வகையில் அம்மா உணவகங்களை திறக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், வ.உ.சி. பூங்கா, சூளை, நாச்சியப்பா வீதி, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மரப்பாலம், காந்திஜி ரோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்

இதனைத்தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்சிங் மூலம் ஈரோடு ஆர்.என்.புதூரில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து ஆர்.என்.புதூர் அம்மா உணவகத்தில் உணவு விற்பனையை ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சி என்ஜினீயர் ஆறுமுகம், நகர் நல அதிகாரி டாக்டர் அருணா, 1–வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு, அரசு வக்கீல் துரைசக்திவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் விற்பனை என்பதால் ஆர்.என்.புதூர் உள்பட அனைத்து உணவகங்களிலும் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

இதேபோல் ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்பட்ட மீதம் உள்ள அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. அம்மா உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் ரூ.5–க்கும், தயிர் சாதம் ரூ.3–க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

திருச்சியில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன பொதுமக்கள் அமோக வரவேற்பு

Print PDF
தினதந்தி       02.06.2013

திருச்சியில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன பொதுமக்கள் அமோக வரவேற்பு

திருச்சியில், அம்மா உணவகங்களை காணொலி காட்சி மூலம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்த உணவகங்கள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அம்மா உணவகங்கள்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக தரமான உணவு வகைகள் மலிவு விலையில் நாள்தோறும் கிடைக்கும் வண்ணம் சென்னையில் அம்மா உணவகங்களை திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் 200 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா

அதன்படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் தலா 10 அம்மா உணவகங்களை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், நெல்லை, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சியிலும் அம்மா உணவகங்கள் திறக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றன.

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 10 இடங்களில் அம்மா உணவகங்கள் உருவாக்கப்பட்டன. இந்தநிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் உருவாக்கப்பட்ட அம்மா உணவகங்களை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை சென்னையில் இருந்த காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ்ரோட்டில் அமைக்கப்பட்ட அம்மா உணவகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பூனாட்சி கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ., கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன், குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் பரஞ்சோதி, சிவபதி, மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சாந்தி, கோட்ட தலைவர்கள் மனோகரன், சீனிவாசன், கவுன்சிலர்கள் அய்யப்பன், சகாதேவபாண்டி, டாக்டர் தமிழரசி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநகராட்சியில் மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உணவகங்களும் செயல்பட தொடங்கின.

பொதுமக்கள் வரவேற்பு திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ்ரோட்டில் முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகத்தில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் உணவுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன. அம்மா உணவகம் குறித்து சாப்பிட வந்த பொதுமக்கள் தங்கள் வரவேற்பை தெரிவத்தனர்.

திருச்சியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜமுனா கூறுகையில், “அம்மா உணவகம் மிகவும் வரவேற்கதக்க விஷயம். ஏழை மக்களுக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். பெரிய ஓட்டல்களில் ஒரு இட்லி ரூ.12–க்கு விற்பனை செய்கிறார்கள். சாப்பாடு ரூ.40, 50–க்கு விற்கப்படுகிறது. ஆனால் அம்மா உணவகத்தில் 5 ரூபாய்க்கு சாம்பார் சாதமும், 3 ரூபாய்க்கு தயிர்சாதமும் வழங்குகிறார்கள். இந்த திட்டம் ரெயில் நிலையங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் கொண்டு வந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்“ என்று கூறினார்.

மனநிறைவாக உள்ளது

திருச்சியை சேர்ந்த அமீர்ஜான் கூறுகையில்,“அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள் அதன் பயனை அனுபவித்து வருகிறார்கள். உண்மையிலேயே இந்த திட்டம் வரவேற்புக்குரியது. நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். ஆனால் நல்லது செய்யும்போது, அதனை நிச்சயம் வரவேற்க வேண்டும்“ என்று கூறினார்.

திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் கூறும்போது, “அம்மா உணவகத்தில் சாப்பாடு மிகவும் மனநிறைவாக இருக்கிறது. தயிர்சாதமும், சாம்பார் சாதமும் வாங்கி உள்ளேன். ஆனால் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது“ என்று கூறினார். இதே கருத்தையே அம்மா உணவகத்துக்கு வந்த பெரும்பாலான பொதுமக்கள் கூறினார்கள்.
 


Page 175 of 841