Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நாளை முதல் அம்மா உணவகத்தில் பொங்கல், சப்பாத்தி, எலுமிச்சை சாதம்

Print PDF
தினமணி        01.06.2013

நாளை முதல் அம்மா உணவகத்தில் பொங்கல், சப்பாத்தி, எலுமிச்சை சாதம்


சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில்  நாளை(ஜூன் 2) முதல் மலிவு விலையில் பொங்கல், சப்பாத்தி, எலுமிச்சை சாதம் வழங்கப்படுகிறது.இதனை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம்  நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை, மதுரை உள்பட 4 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.

சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு இட்லியும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர்சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை  சுமார் ஒரு கோடியே 85 லட்சம் இட்லிகளும், 37 லட்சம் சாம்பார் சாதங்களும், 25 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அம்மா உணவகத்துக்கு மக்கள் அளித்து வரும் அமோக வரவேற்பு காரணமாக, சென்னையில் காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியத்தில் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும், மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன் படி புதிய உணவு வகைகள்  நாளை முதல் அம்மா உணவகத்தில் அமல்படுத்தப்பட  உள்ளது.
 

மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு ஓரிரு நாளில் திறக்க முடிவு

Print PDF
தினகரன்                 31.05.2013

மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் உணவு தயாரிப்பு ஓரிரு நாளில் திறக்க முடிவு


ஈரோடு,  :  ஈரோடு மாநகராட்சி பகுதியில் அமையவுள்ள மலிவு விலை உணவகத்தில் சோதனை முறையில் நேற்று உணவு தயாரிப்பு பணி நடந்தது. இன்னும் ஓரிரு நாளில் உணவத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம், சூளை, காந்திஜிரோடு, வ.உ.சி.பூங்கா, பெரியஅக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம், பஸ் ஸ்டேண்ட், சூரம்பட்டி ஆகிய 10 இடங்களில் மலிவு விலை உணவகம் திறக்கப்படவுள்ளது. இதில் முதல்கட்டமாக ஆர்.என்.புதூர், சூளை, காந்திஜிரோடு, கொல்லம்பாளையம், ஏ.பி.டி.ரோடு வ.உ.சி.பூங்கா ஆகிய 5 இடங்களில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை அருகில் மலிவு விலை உணவங்கள் இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது உணவுகளுக்கான தயாரிப்பு செலவு மட்டும் 2 கோடியே 4 லட்ச ரூபாயாகவும், இதில் விற்பனை மூலம் பெறப்படும் வருவாய் ரூ.65.70 லட்சமாகவும், பற்றாக்குறையாக ஒருகோடியே 38 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி பொது நிதியில் இருந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் இல்லாத பகுதிகளில் 5 புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. இதற்காக ஒரு கட்டிடத்திற்கு 20 லட்ச ரூபாய் வீதம் ஒருகோடி ரூபாயும், சமையல் பாத்திரங்கள், இதர தளவாட சாமான்கள் வாங்கவும் 60 லட்ச ரூபாய் மாநகராட்சி பொதுநிதியில் இருந்து பயன்படுத்தப்படவுள்ளது.

உணவுகள் தயாரிக்க தேவைப்படும் அரிசியை கிலோ ஒரு ரூபாய்க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து பெறப்படவுள்ளது.

மிளகாய், புளி, மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, கடுகு, வெந்தயம் ஆகியவற்றை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் கொள்முதல் செய்யவும், காய்கறிகள், தேங்காய், தக்காளி மற்றும் வெங்காயத்தை அன்றாடம் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான சமையல் கேஸ் சிலிண்டர்களை கூட்டுறவு பண்டக சாலை எரிவாயு விற்பனை நிலையத்தில் இருந்து நேரடியாக பெறும் வகையில் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் தொடங்கப்படவுள்ள மலிவு விலை உணவகத்தில் தற்போது ஆர்.என்.புதூர், கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை அருகில் என 2 இடங்களில் விரைவில் திறக்கப்படவுள்ளது.

இதற்காக சமையல் அறைகள் தயார் நிலையில் உள்ளது. நேற்று சமையல் அறைகளில் பொருத்தப்பட்டுள்ள அடுப்புகளில் உணவுகளை தயாரித்து பார்த்தனர். மேலும் வெளியில் இருந்து மாவு வாங்கி வந்து இட்லி வேக வைத்து சரியாக செயல்படுகிறதா என்பது குறித்தும் சோதனை முறையில் பரிசோதித்து பார்த்தனர். இன்னும் ஓரிரு நாளில் மலிவு விலை உணவகம் திறக்கப்படவுள்ள நிலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
 

மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம்

Print PDF
தினமணி       31.05.2013

மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம்


வேலூர் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட உள்ள மலிவு விலை உணவகத்தில் உணவு தயாரிப்புக்கான முன்னோட்டத்தை மேயர் பா. கார்த்தியாயினி வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு கஸ்பா பகுதி நெடுந் தெருவில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளது. அங்கு உணவு தயாரிப்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இதை மேயர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், நெடுந்தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

துணை மேயர் வி.டி. தர்மலிங்கம், ஆணையர் ஜானகி, மாநகர நல அலுவலர் பிரியம்வதா, மாமன்ற உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 


Page 177 of 841