Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கடைகளை செயல்படுத்த முயற்சி செய்யாததால்... ஹம்மிங்வே வணிக வளாகத்தில் அம்மா உணவகம்

Print PDF
தினமலர்                 24.05.2013

கடைகளை செயல்படுத்த முயற்சி செய்யாததால்... ஹம்மிங்வே வணிக வளாகத்தில் அம்மா உணவகம்


ஈரோடு: மரப்பாலம் பகுதியில் மீன் வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட ஹம்மிங்வே வணிக வளாகம், கடந்த ஆட்சியில் குடியிருப்பாகவும், தற்போது அம்மா உணவகமாக மாற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாயை அதிகாரிகள் அழித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சியில் ஈ.வி.என்.,ரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில், 10க்கும் மேற்பட்ட ரோட்டோர மீன்கடைகள் உள்ளன. வியாழன், ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக ரோட்டினை ஆக்ரமித்து மீன்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

மாலையில் மீன்கடைகளின் கழிவுகளை ஒட்டுமொத்தமாக ஸ்டோனி பிரிட்ஜ் பெரும்பள்ளம் ஓடையில் கொட்டுகின்றனர். தேங்கும் மீன் கழிவுகளால் ஓடையை ஒட்டிய பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் அடிக்கிறது.

பொதுமக்களுக்கு சுகாதாரமான இறைச்சி வழங்கிடும் நோக்கில், மீன்கடைகளுக்கு என தனி மார்க்கெட் ஏற்படுத்த, கடந்த தி.மு.க., ஆட்சியில் மரப்பாலம் பகுதியில் ஹம்மிங்வே வணிக வளாகம் கட்டப்பட்டது. முன்புறம் வணிக வளாக கடைகளும், பின்புறம் மீன் கடைகள் வைக்க கட்டப்பட்டது.

ஸ்டேனி பிரிட்ஜ் பகுதியில் இருந்த மீன்கடைக்காரர்கள், ஹம்மிங்வே வணிக வளாகத்துக்கு இடம் பெயர மறுத்ததால், இவ்வளாகம் திறக்கப்படாமல் கிடந்தது.

இதனிடையே மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி வீடு கட்டும் வரையில் மீன்கடைகளை இணைத்து கட்டி, வீடாக மாற்றி குடியிருந்து வந்தனர்.

அவர்களுக்கம் தனியாக வீடுகள் கட்டி திறக்கப்பட்டதால், இவ்விடத்தை அவர்கள் காலி செய்தனர். இதனை அடுத்து மீன் மார்க்கெட் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீன் மார்க்கெட்டுக்காக கட்டிய கட்டிடத்தை ஒன்றாக இணைக்கும் வகையில் தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில், 10 இடங்களில் ஏற்படுத்த உள்ள அம்மா உணவக திட்டத்தில், மரப்பாலம் பகுதியில், ஹம்மிங்வே வணிக வளாகம் தேர்வு செய்யப்பட்டு, உணவகம் அமைக்க கட்டிடம் மாற்றியமைக்கும் பணி நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரமான மீன் இறைச்சி வழங்கவும், கழிவுகள் ஓடையில் கொட்டுவதை தடுக்க, மரப்பாலம் பகுதியில் ஹம்மிங்வே மீன்கடைகள் கட்டப்பட்டது. 15 கடைகள் வைக்கவும், கட்டப்பட்ட கடைகள் குடியிருப்பாகவும், தற்போது உணவகமாக மாறி வருகிறது.

கடைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருந்தால், மாநகராட்சிக்கு வாடகை, முன்செலுத்து தொகை என பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். மூன்றாண்டுகள் திறக்காமல் கிடப்பில் போட்டு, தற்போது முழுமையாக வீணடித்துள்ளனர்.

ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் உள்ள மீன்கடைகளுக்கு இனி விமோச்சனம் கிடைக்க வாய்ப்பில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
 

மலிவு விலை உணவகங்களில் பரீட்சார்த்த முறையில் பொங்கல் வினியோகம் நாளை லெமன், கருவேப்பிலை சாதம்

Print PDF

தமிழ் முரசு              24.05.2013

மலிவு விலை உணவகங்களில் பரீட்சார்த்த முறையில் பொங்கல் வினியோகம் நாளை லெமன், கருவேப்பிலை சாதம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை:மாநகராட்சி மலிவு விலை உணவகத்தில் பரீட்சார்த்த முறையில் இன்று பொங்கல் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகங்களில்  காலை 7 முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ரூ.1&க்கும், மதிய உணவாக நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை  சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து, மற்ற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில்  தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் இட்லியும் 60 ஆயிரம் சாம்பார் சாதம், 35 ஆயிரம் தயிர் சாதம்  விற்பனையாகிறது. சில நேரங்களில் இது அதிகரித்தும் காணப்படுகிறது. பொதுமக்கள் ஆதரவை தொடர்ந்து, மலிவு விலை  உணவகத்தில் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கல் ரூ.5&க்கும், மதிய உணவில் எலுமிச்சை சாதம் அல்லது  கருவேப்பிலை சாதம் ரூ.5&க்கும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த 15&ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மலிவு விலை உணவகத்தில் பொங்கல், எலுமிச்சை, கருவேப்பிலை சாதம் வழங்குவதற்கான  நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். இதற்கு தேவையான பாத்திரங்கள் மற்றும்  பொருட்கள் கொள்முதல் செய்யும் பணி முடிந்துள்ளது. வரும் திங்ககிழமை முதல் புதிய மெனு அமலுக்கு வரும் என்று  தெரிகிறது.இந்நிலையில், அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் இன்று காலை பரீட்சார்த்த முறையில் பொங்கல்  தயாரிக்கப்பட்டது. இதை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், காலையில் இட்லி சாப்பிட வந்த  அனைவருக்கும் சிறிதளவு பொங்கல் இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல், நாளை அனைத்து உணவகத்திலும் எலுமிச்சை,  கருவேப்பிலை சாதம் பரீட்சார்த்த முறையில் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர்.   

மாலை நேரத்தில் 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் அல்லது குருமா ரூ.3&க்கு விற்பனை செய்யும் திட்டம் செப்டம்பர்  மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அம்மா உணவகம், நேரடி பயிற்சிக்கு சென்னை சென்ற மகளிர் சுயஉதவி குழுவினர், அலுவலர்கள் உணவை ருசி பார்த்தனர்

Print PDF
தினத்தந்தி       24.05.2013

அம்மா உணவகம், நேரடி பயிற்சிக்கு சென்னை சென்ற மகளிர் சுயஉதவி குழுவினர், அலுவலர்கள் உணவை ருசி பார்த்தனர்
 


சென்னையில் நடைபெறும், அம்மா உணவகத்தில் நேரடி பயிற்சி பெற சென்ற மகளிர் சுய உதவிக்குழுவினரும், அலுவலர்களும் அங்கு காலை, பகல் உணவை சாப்பிட்டு ருசி பார்த்து விட்டு வேலுர் திரும்பினார்கள்.

அம்மா உணவகங்கள்

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சாப்பிடும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அந்த உணவகங்களில் காலை உணவாக இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் வேலூர், மதுரை, திருச்சி உள்பட 9 மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் முதல் கட்டமாக தலா 10 உணவகங்கள் திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

140 பேர்


அதன்படி வேலூர் மாநகராட்சியில் மலிவு விலை அம்மா உணவகங்கள் அமைக்க 10 இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 இடங்களில் கட்டிட வசதி உள்ளது. மீதம் உள்ள 6 இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது.

10 அம்மா உணவகங்களிலும் சமையல் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்ய மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதாவது ஒரு உணவகத்திற்கு 14 பேர் வீதம் மொத்தம் 140 பேர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அது தவிர நிர்வாகப்பணியில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்களும், துப்புரவு ஆய்வாளர்களும் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நேரடி பயிற்சிக்கு...

சென்னையில் நடைபெறும் அம்மா உணவகங்கள் எப்படி இயங்குகிறது, காலை எத்தனை மணிக்கு உணவு தயாரிக்க தொடங்க வேண்டும், சாம்பார் சாதம். தயிர் சாதம் ருசியாக தயாரிக்கும் முறை எப்படி? என்பதையும், நிர்வாக தரப்பில் என்னென்ன பணிகள் இருக்கிறது என்பதை நேரடியாக சென்னை சென்று அங்கு முகாமிட்டு பயிற்சி பெற அந்த பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கமிஷனர் ஜானகி உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், லூர்துசாமி, பாலமுருகன் மற்றும் வருவாய் அலுவலர்கள் குமரவேல், மூர்த்தி, பாலசந்தர், கணேஷ்வரன் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 20 பெண்கள் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து தனி வேன் மூலம் புறப்பட்டு சென்னை சென்றனர். சென்னை அம்பத்தூருக்கு காலையில் சென்ற அவர்கள் அங்கு செயல்படும் 2 உணவகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

சாப்பிட்டு ருசி பார்த்தனர்

துப்புரவு ஆய்வாளர்கள் அங்கு பராமரிக்கப்படும் சுகாதாரம், உணவின் தரம், அளவு போன்றவற்றை யும், வருகைப் பதிவேடு மற்றும் பணிகளையும், வருவாய் ஆய்வாளர்கள் காலை, பகல் உணவுக்கு அன்றாடம் என்னென்ன காய்கறிகள், பொருட்கள் வாங்க வேண்டும் என்பதையும் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அதுபோல மகளிர் சுயஉதவி குழுவினர் காலை டிபன் மற்றும் பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை ருசியாக தயாரிப்பது எப்படி? என்பதை நேரடியாக பார்த்ததுடன் அதுபற்றி குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் கூறும்போது, வேலூரில் இருந்து சென்ற அனைவரும் காலை டிபன், பகல் உணவை அம்மா உணவகத்திலேயே சாப்பிட்டோம், ருசியாக இருந்தது எனக்கூறினார்.

வேலூரில் அம்மா உணவகங்கள் சுகாதாரத்துறையின்கீழ்தான் செயல்பட உள்ளது அந்த துறையின் பொறுப்பாளராக உள்ள நகர் நல அலுவலர் பிரியம்வதா மற்றும் அலுவலர்கள் விரைவில் அம்மா உணவகங்களை பார்வையிட சென்னை செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Page 183 of 841