Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவையில் 10 இடங்களில் ரூ.2¾ கோடி செலவில் ‘அம்மா’ உணவகங்கள்

Print PDF
தினத்தந்தி       22.05.2013

கோவையில் 10 இடங்களில் ரூ.2¾ கோடி செலவில் ‘அம்மா’ உணவகங்கள்


கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், ரூ.3–க்கு தயிர்சாதம் உள்ளிட்ட உணவுகளை வழங்குவதற்காக 10 இடங்களில் ரூ.2 கோடியே 70 லட்சம் செலவில் ‘அம்மா’ உணவகங்களை திறக்க மாநகராட்சி கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்ப்பட்டது.

1.கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம், 2. ஆர்.எஸ்.புரம், பூமார்க்கெட் ஏலமையம், 3.மணியக்காரன்பாளையம், 4. குறிச்சி மாநகராட்சி அலுவலகம், 5. ராமநாதபுரம் 80 அடிரோடு, மாநகராட்சி கட்டிடம், 6. வெரைட்டிஹால்ரோடு, திருமால் வீதி, திருமண மண்டபம், 7.மேட்டுப்பாளையம்ரோடு, பஸ்நிலையம், 8.மசக்காளிபாளையம் பள்ளி வளாகம், 9.சரவணம்பட்டி, அம்மன்நகர், 10.குனியமுத்தூர்.

ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 900 பேருக்கு இட்லி, சாம்பார்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை மலிவு விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இட்லி அடக்கவிலை – 3 ரூபாய் 64 பைசா, சாம்பார் சாதம் அடக்கவிலை 14 ரூபாய் 73 பைசா, தயிர் சாதம் அடக்கவிலை 7 ரூபாய் 44 பைசா. இந்த விலைகளில் தயாரித்து, இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மலிவு விலை உணவகத்தின் மூலம் ஒரு உணவகத்துக்கு மாதத்திற்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் வீதமும், ஒரு ஆண்டுக்கு ரூ.27 லட்சம் வீதமும், மொத்தம் 10 உணவகங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் அளவுக்கு மாநகராட்சிக்கு கூடுதல் செலவினம் ஆகும் என்றும், இந்த செலவினத்தை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் இந்த மாத இறுதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.
 

மலிவு விலை உணவுதயாரிக்க பயிற்சி

Print PDF
தினமலர்       22.05.2013

மலிவு விலை உணவுதயாரிக்க பயிற்சி
 

திருப்பூர்:""மலிவு விலை உணவு தயாரிப்பது குறித்து மகளிர் குழுவினருக்கு சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்படும்,'' என நகர் நல அலுவலர் செல்வக்குமார் பேசினார்.திருப்பூரில் 10 இடங்களில் அம்மா உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு மலிவு விலை உணவு தயாரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர் நல அலுவலர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

இட்லி, தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் தயாரிப்பது தொடர்பாக, சமையல் கலை நிபுணர் சிலம்பரசன் விளக்கினார்.நகர் நல அலுவலர் பேசியதாவது: மாநகராட்சியில் 10 இடங்களில், அம்மா உணவகங்கள் அமைய உள்ளன. அவற்றை நடத்தும் பொறுப்பு, மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். அதற்காக, சம்பளம் வழங்கப்படும். அரிசி உள்ளிட்ட அனைத்து சமையல் பொருட்களையும், இதர பாத்திரங்களையும் மாநகராட்சி வழங்கும்.

அம்மா உணவகங்களில், உணவு தயாரிப்பது குறித்து, மகளிர் குழுவினருக்கு சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.உணவு தயாரித்து, அவற்றை டோக்கன் முறையில் விற்பனை செய்வதே குழுவினரின் பணி. ஓட்டல் அல்லது சமையல் அனுபவம் உள்ள குழுவினருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இட்லியும், சாம்பாரும் தலா ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கப்படும். சப்பாத்தி மற்றும் பொங்கல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. மக்களிடம் கிடைக்கும் வரவேற்புக்கேற்ப, உணவு தயாரிப்பை படிப்படியாக அதிகரிக்கலாம், என்றார்.
 

முதல்வருக்கு திருச்செங்கோடு நகராட்சி நன்றி

Print PDF
தினமணி         22.05.2013

முதல்வருக்கு திருச்செங்கோடு நகராட்சி நன்றி


திருச்செங்கோடு நகரில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 7.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்செங்கோடு நகர்மன்றக் கூட்டம்  அதன் தலைவர் பொன். சரஸ்வதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் (பொ) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர்  பொன். சரஸ்வதி பேசியது:

திருச்செங்கோடு நகராட்சியில் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 96,431  பேருக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் பொன்விழா ஆண்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின்  மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தற்போதுள்ள பொன்விழா ஆண்டு குடிநீர்  மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மேல்நிலைத் தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ. 7.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிக்கு கடந்த 9-ஆம் தேதி, சென்னையில் காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றியை நகர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்வு நிலை நகராட்சியான திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டுள்ளது.  இதன் ஆண்டு வருவாய் ரூ. 12.74 கோடி ஆகும். செலவு ரூ. 12.70 கோடி ஆகும். நகராட்சியின் வருவாயைப் பெருக்க காலி இடங்களில்  நிரந்தரக் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டால் வருமானம் கூடும். ஆகவே, சந்தைப்பேட்டையின் கிழ்புறம் உள்ள காலி இடத்தில் கடைகளுடன் கூடிய வணிக வளாகம்  ரூ. 20.10 கோடியில் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அரசின் நிர்வாக அனுமதி, நிதி ஒதுக்கீடு மானியம் மற்றும் கடன் உதவி  கோரி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பிரேரணை  அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதே  போல, எஸ்எஸ்டி சாலையில் தினசரி நாளங்காடி அருகில்  ரூ. 12.60 கோடியில் வணிக வளாகம் கட்டவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார் பொன். சரஸ்வதி.

பிறகு, உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
 


Page 186 of 841