Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

17-ல் தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்தல்

Print PDF

தினமணி                12.04.2013

17-ல் தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்தல்


தெற்கு தில்லி மாநகாரட்சியின் வார்டு கமிட்டி தேர்தல் இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வார்டு கமிட்டிகளின் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் 17-ம் தேதியன்று மாநகராட்சியின் தலைமை அலுவலகமான டாக்டர் எஸ்பிஎம் சிவிக் சென்டரில் லாலா ஹன்ஸ்ராஜ் குப்தா அரங்கில் தேர்தல் நடைபெறும்.

தெற்கு மண்டலத்துக்கு நண்பகல் 12 மணிக்கும், நஜஃப்கர் மண்டலத்துக்கு பிற்பகல் 1 மணிக்கும், மத்திய மண்டலத்துக்கு பிற்பகல் 2 மணிக்கும், மேற்கு மண்டலத்துக்கு பிற்பகல் 3 மணிக்கும் தேர்தல் நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.

வடக்கு தில்லியில் 18-ல் தேர்தல்: இதனிடையே வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் தேர்தல் இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வடக்கு தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  "நிலைக்குழு தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் டாக்டர் எஸ்பிஎம் சிவிக் சென்டரிலுள்ள சத்யா நாராயணன் பன்சல் அரங்கில் 18-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.

 

தஞ்சை மாநகராட்சி அறிவிப்புக்குப் பாராட்டு

Print PDF
தினமணி        12.04.2013

தஞ்சை மாநகராட்சி அறிவிப்புக்குப் பாராட்டு


தஞ்சை நகரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதற்கு இரு சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சொர்ணா. அறிவழகன் தெரிவித்தது:

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது, பெருவுடையார் கோவிலுக்கு ரூ. 51 லட்சத்தில் தேர் வழங்குவது, புறவழிச்சாலைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு, அரசுக் கால்நடை கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து தஞ்சை நகரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி.

இதன் மூலம் தஞ்சை வளர்ச்சி அடையவும், விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் தஞ்சையில் தொழில் வளர்ச்சி அடையச் செய்யவும் உதவும். இதேபோல, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் முருகு. வீரமணி தெரிவித்திருப்பது:  தஞ்சை மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில் தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு நன்றி.
 

மாநகராட்சியாக திண்டுக்கல் அறிவிப்பு: பொதுமக்கள் வரவேற்பு

Print PDF
தினமணி        11.04.2013

மாநகராட்சியாக திண்டுக்கல் அறிவிப்பு: பொதுமக்கள் வரவேற்பு


திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சியாக நிலை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார். இது குறித்து திண்டுக்கல் நகர மக்களின் கருத்து:

நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ்: கடந்த 149 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் நகராட்சி, தமிழகத்தின் பழமையான நகராட்சியாகவும் விளங்கியது. இந்நிலையில், மாநகராட்சியாக நிலை உயர்த்தக் கோரி 2 மாதங்களுக்கு முன் நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக முதலவர், இன்று சட்டப்பேரவையில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன்மூலம், திண்டுக்கல் நகர மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படும். அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, திண்டுக்கல் நகர மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நகராட்சி உறுப்பினர் தனபால் (பாஜ.க.): மாநகராட்சியாக அறிவித்த தமிழக முதல்வருக்கு பா.ஜ.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேலாவது, கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நகரின் அனைத்துப் பகுதியிலும் தரமான சாலைகள் கிடையாது. குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்கிறது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து, நகரின் வளர்ச்சிக்கு உதவி செய்யவேண்டும் என்றார்.

ஏ.பி.சி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் க. மணிவண்ணன்: திண்டுக்கல்லுக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை வரவேற்கிறோம். ஆனால், நகரின் அடையாளமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்படும் வகையில், மாநகராட்சியின் செயல்பாடு அமையவேண்டும். நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவேண்டும். குறிப்பாக, நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, குறுகலானப் பாதைகளை ஒருவழிப் பாதையாகவும் மாற்றி அமைக்க வேண்டும். மேலும், திண்டுக்கல்லின் அடையாளமாக இருந்த பூட்டுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தும், மலைக்கோட்டையை சிறப்பான சுற்றுலாத் தளமாக மாற்றியும் திண்டுக்கல்லின் முக்கியத்துவம் காக்கப்பட வேண்டும் என்றார்.

கல்லூரி மாணவி பி.சாந்தி: மாநகராட்சி அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நகர மக்களுக்கு குடிநீர் விநியோகம், 15 நாளுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. இதனை சரி செய்வதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நகரப் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

மாநகராட்சி பேருந்து நிலையத்தின் நிலை இப்படி இருந்தால், அது திண்டுக்கல்லுக்கு மிகவும் அவமானமாக இருக்கும். எனவே, மாநகராட்சி நிர்வாகத்தின் முதல் நடவடிக்கையாக பேருந்து நிலையம் சீர்செய்யப்பட வேண்டும் என்றார்.

ஆட்டோ ஓட்டுநர் கே.சுப்பிரமணி:

மாநகராட்சி அறிவிப்பு, அரசின் நிதி நிலையை பெருக்குவதற்கே வழிவகை செய்யும். இதனால், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் பன்மடங்கு அதிகரிக்கும். நகர மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதேபோல், நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 


Page 206 of 841