Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமம்: மானாமதுரை பேரூராட்சி சார்பில் ஏலம்

Print PDF
தினமணி        11.04.2013

சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூலிக்கும் உரிமம்:  மானாமதுரை பேரூராட்சி சார்பில் ஏலம்


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் வைக்கப்படும் கடைகளுக்கு வாடகை வசூல் செய்துகொள்ளும் உரிமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முதல்முறையாக புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

மானாமதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது வைகையாற்றுக்குள்ளும் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்படும். மேலும் வைகையாற்றுக்குள் பொழுதுபோக்கு அம்சமாக ராட்டினங்கள் அமைக்கப்படும். கடந்தாண்டு இந்த கடைகளுக்கும், ராட்டினங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேரடியாக வாடகை வசூல் செய்யப்பட்டது.

இந்தாண்டு சித்திரைத் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூல் செய்துகொள்ளும் உரிமத்தை ஏலம் விட, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 16-ஆம் தேதி மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவில் திருவிழாவும், இதைத் தொடர்ந்து வீரஅழகர் கோவில் திருவிழாவும் நடைபெறுகிறது.

இந்த இரு கோவில்களிலும் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழா கடைகளுக்கு வாடகை வசூல் செய்து கொள்வதற்கான உரிமம் ஏலம் விடப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சஞ்சீவி ஏலத்தை நடத்தினார். இதில் தலைவர் ஜோசப்ராஜன் கலந்து கொண்டார். ஏலம் எடுப்பதில் போட்டி நிலவிய நிலையில் இறுதியாக ரூ. ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறுக்கு கடைகள் ஏலம் போனது. பேரூராட்சி நிர்ணயித்த கட்டணம் மட்டும் தான் வாடகையாக வசூலிக்க வேண்டும் என ஏல நிபந்தனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வடக்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி: தலைவர், துணைத் தலைவர் தேர்வு

Print PDF
தினமணி        11.04.2013

வடக்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி:  தலைவர், துணைத் தலைவர் தேர்வு


வடக்கு தில்லி மாநகராட்சியின் வார்டு கமிட்டிகளுக்கான தலைவர் மற்றும், துணைத் தலைவர் புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வடக்கு தில்லி மாநகாராட்சியின் நிலைக்குழுக் கூட்டத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வார்டு கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்:

சிட்டி மண்டலம்-அலாய் முகமது இக்பால் (தலைவர்), இம்ரான் ஹுசைன் (துணைத் தலைவர்); சாதர் பகார் கஞ்ச்-நீலம் திமான் (தலைவர்), லதா சோதி (துணைத் தலைவர்); சிவில் லைன்ஸ் மண்டலம்-மாதவ் பிரசாத் (தலைவர்), ரீமா கெüர் (துணைத் தலைவர்); கரோல் பாக் மண்டலம்-ஷியாம் பாலா (தலைவர்) - ராஜ்குமார் லாம்பா (துணைத் தலைவர்), பாரத் பூஷண் மதன் (நிலைக்குழு உறுப்பினர்); ரோகிணி மண்டலம்-சுரேந்தர் மோகன் பாண்டே (தலைவர்), ரேணு கம்போஜ் (துணைத் தலைவர்), தேவேந்தர் சோலங்கி (நிலைக்குழு உறுப்பினர்); ரேலா மண்டலம்-ஜக் ரோஷிணி (தலைவர்) ரீடா (துணைத் தலைவர்), கேஷ் ராணி (நிலைக்குழு உறுப்பினர்).
 

தஞ்சை மாநகராட்சியில் 8 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு

Print PDF
தினமணி        11.04.2013

தஞ்சை மாநகராட்சியில் 8 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தஞ்சை மாநகராட்சியில் நகராட்சியைச் சுற்றியுள்ள 8 ஊராட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முதல் நகராட்சியாக தஞ்சை நகராட்சி 1866 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பழைமையான நகராட்சிகளில் இதுவும் ஒன்று.

இந்த நகராட்சி 16.10.1943 அன்று முதல் நிலை நகராட்சியாகவும், 16.10.1963-ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 5.9.1983-ல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனத் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார்.

தற்போது, தஞ்சை நகராட்சியில் 2,22,619 பேர் வசிக்கின்றனர். மக்கள்தொகை 3 லட்சமாக இருந்தால்தான் மாநகராட்சி அந்தஸ்தை எட்ட முடியும் எனக் கூறப்படுகிறது.

எனவே, ஏற்கெனவே நகராட்சியில் உள்ள 51 வார்டுகள் மட்டுமல்லாமல், நகராட்சியைச் சுற்றியுள்ள புதுப்பட்டினம், நாஞ்சிக்கோட்டை, நீலகிரி, மேலவெளி, பிள்ளையார்பட்டி, ராமநாதபுரம், விளார், இனாத்துக்கான்பட்டி ஆகிய 8 ஊராட்சிகளும் சேர்க்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இதன் மூலம், மக்கள்தொகை 3,20,828 என அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோல, நகராட்சி பரப்பளவு 36.33 சதுர கிலோமீட்டராக உள்ள நிலையில், சுற்றியுள்ள ஊராட்சிகளையும் சேர்க்கும்போது 110.27 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கும். மேலும், நகராட்சியில் ஆண்டு வருமானம் ரூ. 36.98 கோடியிலிருந்து ரூ. 41.19 கோடியாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
எப்போது அந்தஸ்து:
 
இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்ட பிறகுதான் மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற முடியும். இந்த ஆணை வெளியிடப்படுவதற்குச் சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு மேயர் என்ற அந்தஸ்தை நகர் மன்றத் தலைவரும், துணை மேயர் அந்தஸ்தை துணைத் தலைவரும், மாமன்ற உறுப்பினர்கள் அந்தஸ்தை நகர் மன்ற உறுப்பினர்களும் பெறுவர்.

மேலும், மாநகராட்சியில் ஊராட்சிகள் சேர்க்கப்படுவதற்கு முன்பு அந்தந்த ஊராட்சி பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

மாநகராட்சியில் ஊராட்சிகளைச் சேர்த்தாலும் கூட அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை ஊராட்சிகள் வழக்கம் போல செயல்படும் எனவும், அதுவரை வரி உயர்வு இருக்காது என்றும் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
பயன்கள்:
 
மாநகராட்சி அந்தஸ்து பெற்றால் நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை சேவைகள் திட்டம், ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் மத்திய அரசின் நிதியுதவி ஏராளமாகக் கிடைக்கும். இதன் மூலம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வாய்ப்பாக அமையும். ஆனால், மாநகராட்சி அந்தஸ்தை தமிழக அரசு வழங்கினாலும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும்.

இதன் மூலமே, நிதியுதவி மட்டுமல்லாமல், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வும், மாநகராட்சிப் படியும் கிடைக்கும். இவற்றின் மூலம், ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தபட்சம் ரூ. 1,000 கிடைக்க வாய்ப்புள்ளது.
 
அதிமுக கொண்டாட்டம்:
 
அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் முன் அதிமுகவை சார்ந்த நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால், துணைத் தலைவர் கே. மணிகண்டன், நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல, நகராட்சி அலுவலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 


Page 207 of 841