Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி இரண்டாவது நவீன மின்சார மயானம் 12ம்தேதி திறப்பு

Print PDF
தினகரன்       08.04.2013

ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி இரண்டாவது நவீன மின்சார மயானம் 12ம்தேதி திறப்பு


அனுப்பர்பாளையம்:  திருப்பூர் மாநகராட்சி  அனுப்பர்பாளையத்தில் திருப்பூர் லயன்ஸ் மின்மயான அறக்கட்டளை சார்பில்,  ஆத்துப்பாளையம் ரோட்டில்  கட்டப்பட்டுள்ள இரண்டாவது நவீன மின்சார மயானம் ஏப்ரல் 12ம் தேதி  மாலை 5 மணிக்கு  திறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவுக்கு, திருப்பூர் லயன்ஸ் மின்மயான அறக்கட்டளைத் தலைவர் மெஜெஸ்டிக் கந்தசாமி தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி குத்துவிளக்கேற்றி வைக்கிறார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  விழாவில் கலந்து கொன்டு நவீன் மின்சார மயான கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் முதல்நிலை மின் அடுப்பையும், அரிமா  மாவட்ட ஆளுநர் எஸ். பரமசிவம் இரண்டாம் நிலை மின் அடுப்பையும் திறந்து வைக்கின்றனர்.  திருப்பூர் தொகுதி எம்.பி. சிவசாமி, ஆம்புலன்ஸ்-ஐ அர்ப்பணித்து துவக்கி வைக்கிறார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் மின் மயான பவர் ஹவுஸ்-ஐ திறந்து வைக்கிறார். முதலாவது மன்டலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பணியாளர் விடுதியை திறந்து வைக்கிறார்.

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், இரண்டாவது மண்டலத்தலைவர் ஜான்,முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், முன்னாள் மேயர் செல்வராஜ், 15-வேலம்பாளையம்  முன்னாள் தலைவர் எஸ்.பி. மணி, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தங்கவேல், அரிமா  ஆளுநர்கள் சண்முகம் ,ஆறுமுகம்மணி, மாநகராட்சி கவுன்சிலர் கல்பனா ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.  

நவீன மின்சார மயானம்  கட்டிடப்பணிகள் நிறைடைந்து உள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு, நேற்று  அனைத்து ஆகம நெறிமுறைப்படி வேள்விக்குண்டம் வைத்து, சிவாச்சாரியார்கள்  புண்ணியார்ச்சனை நடத்தினர். பின்னர்   கூட்டு வழிபாடுகளும், பேரொளி வழிபாடுகளும் நடைபெற்றது.  இதில், திருப்பூர் லயன்ஸ் மின்மயான அறக்கட்டளை சேர்மன் செல்வராஜ், தலைவர் மெஜெஸ்டிக் கந்தசாமி, துணைதலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மயில்சாமி, பொருளாளர் ஜீவானந்தம், துணைச்செயலாளர் மூர்த்தி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. மணி, கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், எஸ். பொன்னுசாமி, ஆர். பொன்னுசாமி, ரகுபதி, சுப்பிரமணியம்  மற்றும் திருப்பூர் அரிமாசங்கம், மத்திய அரிமா சங்கம், டாலர் சிட்டி, மெல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம், வடக்கு அரிமாசங்கம், நிட்சிட்டி அரிமா சங்கம், மிட் டவுன் அரிமா சங்கம், கிழக்கு அரிமா சங்கம், கிரேட்டர் அரிமா சங்கம், ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர், கொல்லம்பாளையத்தில் 4 மலிவு விலை உணவகம் திறப்பு

Print PDF
தினகரன்       08.04.2013

சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர், கொல்லம்பாளையத்தில் 4 மலிவு விலை உணவகம் திறப்பு


ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர் மற்றும் கொல்லம்பாளையம் ஆகிய 4 இடங்களில் தமிழக அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட உள்ளதாக மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. மலிவு விலை உணவகத்தில் ஒரு இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என குறைந்த விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் தற்போது தமிழகத்திலுள்ள பிற மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதைதொடர்ந்து தமிழகத்திலுள்ள 10 மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இடம் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 4 மண்டலங்களில் தலா ஒரு மலிவுவிலை உணவகம் வீதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாம் மண்டலத்தில் சூரியம்பாளையம், இரண்டாம் மண்டலத்தில் சூளை, மூன்றாம் மண்டலத்தில் பெரியார் நகர், நான்காம் மண்டலத்தில் கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை அருகே என மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் அனைத்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகம் விரைவில் துவங்கப்பட உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் சூரியம்பாளையம், சூளை, பெரியார் நகர் மற்றும் கொல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் மலிவு விலை உணவகம் துவங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏழைகள், கூலித்தொழிலாளர் நிறைந்த பகுதிகளில் மலிவு விலை உணவகம் துவக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதால் இந்த 4 இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தின் ஆலோசனையின் பேரில் தேர்வு செய்துள்ளோம்.

குறிப்பிட்ட 4 இடங்களிலும் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள் தேர்வு செய்து அங்கு மலிவு விலை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில் அமைய உள்ள இந்த உணவகத்தில் டோக்கன் வழங்கப்பட்டு, பபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும். இந்த உணவகத்தில் ஒரு இட்லி ரூ.1, தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என முதற்கட்டமாக 3 அயிட்டங்கள் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

படிப்படியாக கூடுதல் உணவு வகைகள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலிவுவிலை உணவகங்களை திறக்கும் தேதி குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.
 

அம்மா உணவகத்துக்கு அமோக வரவேற்பு

Print PDF

தினமணி                  08.04.2013

அம்மா உணவகத்துக்கு அமோக வரவேற்பு

சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் இடையே அமோக வரவேற்பு காணப்படுகிறது.

குறைந்த விலையில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் விதமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 15 உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். இப்போது 200 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் இட்லி ரூ. 1-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும், தயிர் சாதம் ரூ. 3-க்கும் விற்கப்படுகின்றன.  பெரும்பாலும் ஏழை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் இவற்றுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

காலை 7 மணி முதல் 10 மணி வரையில் இட்லி, பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நாளுக்கு நாள் பெருகிவரும் கூட்டத்தால் காலை 9 அல்லது 9.30 மணிக்குள் இட்லிகள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மதியம் 2 மணிக்கே சாத வகைகள் தீர்ந்துவிடுகின்றன. இதனால் தாமதமாக வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள்: சென்னையில் தொடங்கப்பட்டுள்ள 200 உணவகங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு உணவகத்துக்கு 10 முதல் 12 பெண்கள் வரை பணியில் உள்ளனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ. 300 வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

அதிகாரிகள் விளக்கம்: இந்த உணவகங்களில் குறைகள் ஏதும் இல்லை என்று இங்கு வழக்கமாக உண்பவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊறுகாய், அப்பளம் போன்ற பொருள்கள் கொடுக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்போது அம்மா உணவகங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உண்பவர்களும் சுகாதாரமான முறையில் உடலுக்கு கேடு விளைக்காத பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊறுகாய் மற்றும் அப்பளம் போன்றவற்றில் உப்பு, காரம், புளிப்பு சுவை அதிகமாக இருக்கும். இந்த மூன்றும் உடல்நலத்துக்கு பெரிதும் கேடு விளைப்பவை. இதன் காரணமாகவே இவை வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் கூடுதலாக உணவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று தெரிவித்தனர்.

பெரும்பாலான பொதுமக்கள், அம்மா உணவகத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் சில இடங்களில் உணவு சுகாதாரமாக இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  சிறப்பான ஒரு திட்டத்தை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 பேர் கண்காணிப்புக் குழு

அம்மா உணவகத்தில் எந்தவித சுகாதா சீர்கேடும் நடைபெறாத வண்ணம் தடுக்க 4 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இந்தக் குழுவில் ஒரு சுகாதார அலுவலர், ஒரு சுகாதார அதிகாரி மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தென் சென்னையில் ஒருநாள், வடசென்னையில் ஒரு நாள் என தினமும் இந்த குழு ஆய்வு செய்யும்.

ஒவ்வொரு நாளும் ஆய்வு தொடர்பான அறிக்கையை மாநகராட்சி ஆணையரிடம் இந்தக் குழு சமர்ப்பிக்கும்.

நாள்தோறும்  2.5 லட்சம் இட்லி விற்பனை

அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதுவதால் அனைத்து உணவகங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் இட்லிகளும், 60 ஆயிரம் சாம்பார் சாதங்கள் மற்றும் 40 ஆயிரம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

சராசரியாக ஓர் உணவகத்தில் சுமார் 1,500 இட்லிகள் விற்கப்படுகின்றன. ஒரு இட்லியில் 110 கலோரியும், சாம்பார் சாதத்தில் 258 கலோரியும், தயிர் சாதத்தில் 117 கலோரியும் இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விலை ஏற்றினாலும் பரவாயில்லை

ஜெகநாதன் (தனியார் துப்புரவு நிறுவன ஊழியர்): அம்மா உணவகத்தில் எந்த பிரச்னையும் இல்லை. சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதங்களுக்கு ஊறுகாய், அப்பளம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இட்லிக்கு சட்னியும் கொடுக்கலாம்.

இட்லியை சூடாக சாப்பிடும்போது மிருதுவாக உள்ளது. ஆனால் சூடு ஆறிய நிலையில் சாப்பிட்டால் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. மதியத்தில் சாம்பார் சாதம் குழைகிறது. ஆனால் வெளியில் சாப்பிடும் உணவைவிட இங்கு சுவையாக இருக்கிறது.

சாம்பார் மற்றும் தயிர் சாதம் இன்னும் ரூ. 2 அல்லது 3 உயர்த்தினால்கூட பரவாவில்லை. அப்பளம், வடை போன்றவற்றை வழங்கலாம். இப்போது பெரும்பாலானவர்கள் வெளியில் இருந்து வடை, ஊறுகாய் வாங்கி வருகின்றனர். அவற்றை உணவகத்திலேயே வழங்கினால் பணம் மிச்சமாகும். கூட்டம் அதிகமாக உள்ளதால் காலை 9.30 மணிக்கே இட்லி தீர்ந்து விடுகிறது.

நடுத்தர மக்களையும் ஈர்க்க ராமபத்திரன் (ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி): இங்கு வெளியில் அதிக விலையில் விற்கப்படும் இட்லியைவிட நல்ல இட்லி கிடைக்கிறது. தட்டுக்கள் சுத்தமாக கழுவி வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தரை மற்றும் மேஜை ஆகியவற்றில் சிந்தும் சாம்பார், சாதங்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் ஈக்கள் மொய்க்கின்றன. சில வார்டுகளில் சுகாதாரமற்ற இடங்களில் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு ரூபாய்க்கு யாராலும் இட்லி கொடுக்க முடியாது. ஆனால் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தரை மற்றும் மேஜையில் சிந்தும் உணவுப் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்தால் நடுத்தர மக்களையும் இந்த உணவகங்கள் கவரும். உணவகங்களை மேலும் தரம் உயர்த்த வேண்டும்.

நல்ல திட்டம்

சாய்நாதன் (லேத் பட்டறை தொழிலாளி): அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிடுகிறேன். அனைத்து உணவு வகைகளும் நன்றாக உள்ளன. ஒரு ரூபாய்க்கு இட்லி யார் தருவார்கள். ஆனால் இடத்தை சுத்தமாக வைத்திருந்தால் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இது ஒரு நல்ல திட்டம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை ரமேஷ் (பிரிண்டிங் பிரஸ் தொழிலாளி):கடந்த ஒரு மாதமாக வேலைக்குச் செல்லும்போது உணவு கொண்டு செல்வதில்லை. காலையிலும் வீட்டில் சாப்பிடுவதில்லை. தினமும் அம்மா உணவகத்தில்தான் சாப்பிடுகிறேன்.

ஊறுகாய், வடை போன்றவற்றை உணவகத்திலேயே வழங்கினால் சிறப்பாக இருக்கும். இவையும் வெளியில் கிடைப்பதைவிட சுத்தமாக கிடைக்கும்.

உணவகத்துக்கு வரும் பொதுமக்கள் ஆங்காங்கே தட்டுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் சிலர் உணவகம் அருகிலேயே சிறுநீர் கழித்துவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு தேவை.

Last Updated on Monday, 08 April 2013 07:26
 


Page 211 of 841