Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கரூர் நகராட்சிக்கு குடிநீர் கட்டண நிலுவை ரூ. 4 கோடி

Print PDF
தினமணி        08.04.2013

கரூர் நகராட்சிக்கு குடிநீர் கட்டண நிலுவை ரூ. 4 கோடி


கரூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் ரூ. 4. 14 கோடி வசூலிக்கப்படாமல் உள்ளது.

கரூர் நகராட்சியில் கரூர் நகரம், தாந்தோணிமலை, இனாம் கரூர், சணப்பிரட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாங்கல், நெரூர் ஆகிய பகுதிகளில் காவிரியிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

நகராட்சி முழுவதும் குடிநீர் வழங்கும் பொதுக் குழாய்களைத் தவிர, வீடுகள்,  ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு தனிப்பட்ட இணைப்பு மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்படி, கரூர் நகராட்சியில் மொத்தம் 37 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியில் குடிநீர் கட்டணம் பெருமளவில் வசூலிக்கப்படவில்லை. ஆள் பற்றாக்குறை உள்ளிட்டவை இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதுகுறித்து நகர்மன்றக் கூட்டங்களில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, அனைத்து நிலுவைக் கட்டணங்களையும் விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.  

கருர் நகராட்சியைப் பொருத்தவரை கடந்த மார்ச் 31 வரை வசூலிக்கப்படாமல் உள்ள குடிநீர் கட்டண விவரம்:

குடியிருப்புகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரிகள் - ரூ. 4,03,38,682.  அரசு அலுவலகங்கள் - ரூ.  10,76,732.  வழக்குத் தொடர்பாக நிலுவையில் உள்ள ரூ. 51,270  என மொத்தம் ரூ. 4,14,66,684. இந்தத் தொகையை வசூலிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Last Updated on Tuesday, 09 April 2013 07:09
 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒயிலாட்டம், மேளதாளத்துடன் வீதி, வீதியாக பயணம்

Print PDF
தினமலர்        08.04.2013

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒயிலாட்டம், மேளதாளத்துடன் வீதி, வீதியாக பயணம்


தூத்துக்குடி தூத்துக்குடியில் ஒயிலாட்டம், தெருநாடகம் மூலம் போல்பேட்டை கிழக்குப்பகுதி முழுவதும் பேரணியாக சென்று டெங்கு விழிப்புணர்வு நடந்தது. இதனை ஒட்டி நடந்த மருத்துவ முகாமில் 250 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.தூத்துக்குடி மாநகராட்சி மூலம் டெங்கு விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கை பணிகள் மேயர் சசிகலாபுஷ்பா உத்தரவின் பேரில் கமிஷனர் மதுமதி தலைமையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு அவ்வளவாக இல்லாத நிலை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக இதன் தடுப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாகபல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு இடைவிடாது அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுக்கு கமிஷனர் மதுமதி உத்தரவிட்டுள்ளார். இதனால் மாநகராட்சியில் இது போன்ற விழிப்புணர்வு நடந்து வருகிறது. போல்பேட்டை கிழக்கு பகுதி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணிக்கு முன்பாக மேள தாளம், ஒயிலாட்டம், தெரு நாடகம் போன்றவை நடத்தப்பட்டு டெங்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பேரணியை மாநகராட்சி கமிஷனர் மதுமதி துவக்கி வைத்தார்.

சுகாதார அதிகாரி (பொ) டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் ஜெயந்திமச்சோடா, டாக்டர் தேவகுமாரி, சுகாதார ஆய்வாளர் திருமால்சாமி, மாநகராட்சி சமுதாய அலுவலர் சரவணபாமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடர்ந்துபோல்பேட்டை நர்சிங் கல்லூரியில் மாநகராட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
 

துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

Print PDF
தினமணி       07.04.2013

துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்


துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நகரம் தூய்மையாக இருக்கும் என்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

திருப்பூர் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம், தெற்கு ரோட்டரி சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன், சுகாதாரக் குழுத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினார்.

முகாமை துவக்கி வைத்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நகரம் தூய்மையாக இருக்கும். முகாமில் பரிசோதனை செய்து கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனைகள் அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனையில் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை செய்து கொள்ளலாம்.இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் ரூ.6,500 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. துப்புரவுப் பணியாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரமான நகரை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மண்டலத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி நகரமைப்பு நிலைக் குழுத் தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி, மாநகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 


Page 212 of 841