Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF
தினமணி        07.04.2013

அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக் கூட்டம்


அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஹரிராம் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பிளவுக்கல்விளையில் ரூ. 8 லட்சம் செலவிலும், குறத்தியறையில் ரூ. 4 லட்சம் செலவிலும், அழகியபாண்டியபுரத்தில் ரூ. 3.30 லட்சம் செலவிலும், கேசவன்புதூரில் ரூ. 6 லட்சம் செலவிலும் குடிநீர்த் திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

புத்துயிர் பெறுமா ஈரோடு மாநகராட்சி?

Print PDF
தினமணி      05.04.2013

புத்துயிர் பெறுமா ஈரோடு மாநகராட்சி?

ஈரோடு மாநகராட்சிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்களை உருவாக்கி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளுக்கு அடுத்து, 2008-ஆம் ஆண்டில், மாநிலத்தின் 7-ஆவது மாநகராட்சியாக உருவானது ஈரோடு மாநகராட்சி. அதைத் தொடர்ந்து திருப்பூர், வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன.

அவசரகதியில் உருவாக்கப்பட்ட புதிய மாநகராட்சிகளில் அப்போதைய நகர்மன்றத் தலைவர்களே முதல் மேயர்களாகப் பதவியேற்றனர். இம்மாநகராட்சிகளில் ஆணையர் பதவியில், நகராட்சிகளின் இணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இவை மாநகராட்சியாக மாறிய நாளில் இருந்தே பல குழப்பமான நடைமுறைச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. சொத்துவரி விதித்தல், குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்டவற்றில் ஆள் பற்றாக்குறை காரணமாக, மக்கள் அளிக்கும் மனுக்கள் தேங்கிக் கிடக்கின்றன.

மாநிலத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், இம்மாநகராட்சிகளுடன் சில உள்ளாட்சிகள் முறைப்படி இணைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முறையான மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

முதலில் இருந்த 6 மாநகராட்சிகளிலும் ஆணையர் பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், துணை ஆணையர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலான அதிகாரிகளும், உதவி ஆணையர்கள் பொறுப்பில் முதல்நிலை நகராட்சி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரிகளும் உள்ளனர்.

ஆனால், ஈரோடு உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில், இப்போது நகராட்சிகளின் இணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகளும், உதவி ஆணையர் பொறுப்பில் உதவி செயற்பொறியாளர் அந்தஸ்திலான அதிகாரிகளும் தான் உள்ளனர். துணை ஆணையர் பதவியே இல்லை.

அதிலும் அதிகாரிகளில் சிலர் இரண்டு அல்லது மூன்று பதவிகளைக் கொண்டிருக்கின்றனர். இதனால், அவர்களால் முழுமையாக தங்களது பணிகளைச் செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேபோல துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும்  மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதியில் 1,000 மக்களுக்கு 3 துப்புரவாளர்கள் இருக்க வேண்டும். ஈரோட்டில் 2,000 பேருக்கு 3 துப்புரவாளர் என்ற நிலை தான் உள்ளது.

ஈரோடு நகராட்சியாக இருந்தபோது 620 துப்புரவாளர்கள் இருந்தனர். இப்போது காசிபாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், கங்காபுரம், எல்லப்பாளையம், திண்டல், வில்லரசம்பட்டி, முத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகள் இணைந்த பின்னர்- மாநகராட்சியின் பரப்பு அதிகரித்த பின்னரும், 640 துப்புரவாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சியில் நாளொன்றுக்கு 275 டன் முதல் 300 டன் வரை குப்பைகள் வெளியாகின்றன. இதில் 60 சதவிகித குப்பைகளை மட்டுமே மாநகராட்சியால் அகற்ற முடிகிறது. இதனால், தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் தினமும் புலம்புகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 4 லட்சத்து 99 ஆயிரத்து 121 பேர் உள்ளனர். 109.52 சதுர கி.மீ. பரந்துவிரிந்துள்ள இந்த மாநகராட்சிக்கு, இப்போதுள்ள மக்கள்தொகை எண்ணிக்கையின் படி குறைந்தபட்சம் 1,400 துப்புரவாளர்கள், 60 துப்புரவு ஆய்வாளர்கள், 60 மேஸ்திரிகள் தேவை. இல்லையெனில் குப்பையை முழுமையாக அகற்ற முடியாது.

இதுகுறித்து ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறியது:

ஈரோடு மாநகராட்சிக்குத் தேவையான கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கமும் கொண்டுசென்றுள்ளார். கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவாளர்களை நியமிக்க உரிய அனுமதி விரைவில் கிடைக்கும் என்றார்.

ஈரோடு மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளும் ஆள் பற்றாக்குறையால் நெருக்கடியான நிலையில் தவித்து வருகின்றன. இந்தப் புதிய மாநகராட்சிகளுக்கு மாநில அரசு புத்துயிர் கொடுப்பது அவசர அவசியம்.
 

நகராட்சி இடங்களை ஆக்கிரமிக்க கூடாது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்கமிஷனர் எச்சரிக்கை

Print PDF
தினமலர்        04.04.2013

நகராட்சி இடங்களை ஆக்கிரமிக்க கூடாது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்கமிஷனர் எச்சரிக்கை


பழநி:பழநி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் ஆக்கிரமிப்பு பகுதிகளை, அவர்களாகவே அகற்றவேண்டும். இல்லையெனில் போலீஸ் மூலம் கிரிமினல் வழக்கு தொடரப்படும். என கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை செய்துள்ளார். பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையினர், தேவஸ்தானம், நகராட்சி நிர்வாகம் இணைந்து, கிரிவீதி, சன்னதிவீதி, அடிவாரம் ரோடு, பழநி-திண்டுக்கல் ரோடு, பஸ் ஸ்டாண்டு பகுதி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றினர்.

ஆனால் அகற்றப்பட்ட சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள், கொட்டகை, உருவாகியுள்ளன. தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்," நகரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற ஏப்ரல் 5ல் அனைத்து அதிகாரிளும் சேர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. மீண்டும், மீண்டும் எச்சரிக்கை செய்தும், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் மூலம் கிரிமினல் வழக்கு தொடரப்படும். இதுகுறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்,'' என்றார்.
 


Page 213 of 841