Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காந்திபுரம் பஸ் நிலையத்தில் மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு

Print PDF
தினகரன்     27.03.2013

காந்திபுரம் பஸ் நிலையத்தில் மேயர், கமிஷனர் திடீர் ஆய்வு


கோவை: கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் மேயர் செ.ம.வேலுசாமி, மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் அதிகாரிகள் குழுவுடன் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தின் அனைத்து தளங்களிலும் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் தடையற்ற தண்ணீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதி அமைத்துக்கொடுக்க உத்தரவிட்டனர்.

மின்சேமிப்பை கருத்தில்கொண்டு சோலார் மின்விளக்குகளை பொருத்தவும் பரிந்துரைசெய்தனர். மழைநீர் வடிகால் சுத்தப்படுத்தவும், மூடி அமைக்காத இடத்தில் உடனடியாக மூடி அமைக்கவும், ஒவ்வொரு தளத்திலும் பயணிகள் அமர்வதற்கு வசதியாக கான்கிரீட் பெஞ்சுகள் அமைக்கவும் உத்தரவிட்டனர்.
 

ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Print PDF
தினமணி         26.03.2013

ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்


சிவகங்கை நகராட்சி பகுதிகளில் ஆதார் அட்டைக்குப் புகைப்படம் எடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

அரசு நலத்திட்ட உதவிகள், அரசு சலுகைகளைப் பெறுவதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காகவும் நாடு முழுவதும் குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது.

இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் புகைப்படம் எடுக்கும் பணி முடிவடைந்தது. தற்போது நகர்ப்புறங்களில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

சிவகங்கை நகராட்சி பகுதியில் முதல் கட்டமாக மூன்று வார்டு பகுதி மக்களுக்கு ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது. இது குறித்து சிவகங்கை நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் கூறுகையில், சிவகங்கை கே.ஆர் மேல்நிலைப் பள்ளியில் முதல் வார்டுக்கும், மருதுபாண்டியர் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டு பகுதி மக்களுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த வார்டு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் மையங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் இந்த மூன்று வார்டு பகுதிகளிலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து நகராட்சியைச் சேர்ந்த பிற வார்டுகளில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.

சிவகங்கை மருதுபாண்டியர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார் நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் பணியைப் பார்வையிட்டனர்.
 

"அம்மா' உணவகமானது மலிவு விலை உணவகம்

Print PDF
தினமலர்                     25.03.2013

"அம்மா' உணவகமானது மலிவு விலை உணவகம்

சென்னை:அரசு அனுமதி கிடைத்து விட்டதால், மாநகராட்சி மலிவு விலை உணவகங்களின் பெயர், "அம்மா உணவகம்' என, பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர் பயன்பெறும் வகையில், சென்னையில், மலிவு விலை உணவகங்களை மாநகராட்சி திறந்துள்ளது. இதுவரை, 73 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.இந்த உணவகங்களுக்கு, "அம்மா உணவகம்' என, பெயர் வைக்க வேண்டும் என, மாநகராட்சி கடந்த மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.தமிழக அரசு, அதற்கு அனுமதியளித்து, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இதை தொடர்ந்து, மலிவு விலை உணவகங்களின் பெயர், "அம்மா உணவகம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடைகள் முன் இருந்த பெயர் பலகைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள், 200 உணவகங்கள் திறக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
 


Page 219 of 841