Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: 263 பேர் விண்ணப்பம்

Print PDF
தினமணி         24.03.2013

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: 263 பேர் விண்ணப்பம்


புதுக்கோட்டை நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் இலவசத் தொழில் நுட்ப பயிற்சி பெற 160 ஆண்கள் 103 பெண்கள் உள்பட மொத்தம் 263 பேர் வெள்ளிக்கிழமை  விண்ணப்பித்தனர்.

மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் கணினியில், டாலி, டிடிபி, ஹார்டுவேர், பிபிஓ, எம்.எஸ். ஆபீஸ், இன்டர்நெட், சாப்ட்ஸ்கில், கம்யூட்டர் அப்ளிக்கேஷன், உணவக விடுதியில் விருந்தோம்பல் பண்பாட்டுத்திறன் மேம்படுத்தல் போன்ற பயிற்சிகளை கோர், நேஷனல் அகாதெமி, இந்தியா ஸ்கில், டிசிபிஎஸ் போன்ற நிறுவனங்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இதில் சேர 18 வயது முதல் 35 வயதுக்குள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள இருபால் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் சேரும் ஒரு நபருக்கு ரூ. 6,100 மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் பயிற்சியும் கிடைக்கிறது. கடந்த 2009 முதல் புதுகை நகராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1200 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற தேர்வு முகாமுக்கு, நகராட்சித்தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் தலைமை வகித்து விண்ணப்ப விநியோகத்தை தொடக்கி வைத்தார்.

2012-13 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் கட்டப்பயிற்சிக்காக தற்போது இளைஞர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர். ஏற்பாடுகளை சமுதாய அமைப்பாளர் ஆர். ராக்கு குழுவினர் செய்திருந்தனர்.
 

தேவகோட்டை நகராட்சி புதிய கட்டிடத்திற்கு சோமசுந்தரம்மாளிகை பெயர் சூட்ட முடிவு

Print PDF

தினமணி              23.03.2013

தேவகோட்டை நகராட்சி புதிய கட்டிடத்திற்கு சோமசுந்தரம்மாளிகை பெயர் சூட்ட முடிவு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்திற்கு அந்த இடத்தை தானமாக வழங்கிய பி.எஸ்.எஸ் சோமசுந்தரம் மாளிகை என பெயர் சூட்ட தமிழக அரசுக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக நடைபெற்ற அவசர கூட்டம் வியாழக்கிழமை தலைவி சுமித்ராரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுந்தரலிங்கம், ஆணையர் சரவணன், பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க உறுப்பினர் கேசவன் ஏற்கெனவே இது குறித்து தீர்மானம் முந்தைய நகர்மன்ற தலைவர் வேலுச்சாமி மூலமாக நிறைவேற்றப்பட்டு அரசுகக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமுதல் இங்கு சோமசுந்தரம் மாளிகை என பெயர்பலகை வைக்கப்பட்டது. ஆனால் புதிய கட்டிடத்தில் அந்த பெயர் இல்லாமல் நகராட்சி அலுவலகம், தேவகோட்டை என பொறிக்கப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய ஆணையாளர் சரவணன் அரசு விதிப்படி தனியார் ஒருவர் பெயரை வைக்க ஒப்புதல் தெரிவித்து ஆணையிட்டபிறகுதான் பெயரை எழுத முடியும். தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.

பிறகு அ.தி.மு.க உறுப்பினர் முத்தழகு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த நல்ல தண்ணீர் கிணறு காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடித்து தர வேண்டும்.  நான் பல வருடங்களாக இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகிறேன். இதற்கு பதில கூறிய நகராட்சி பொறியாளர் செல்வராஜ் அந்த கிணறு குறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர் கூட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Saturday, 23 March 2013 10:41
 

போடி நகராட்சியில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி

Print PDF
தினமணி           21.03.2013

போடி நகராட்சியில்  தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி


போடி நகராட்சியில் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள எண் கொண்ட தேசிய அடையாள அட்டை ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான புகைப்படம் எடுக்கும் பணி, போடி வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

போடி நகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் முதல் கட்டமாக 6 வார்டுகளில் இப்பணி நடைபெற்று வருகிறது. 1 ஆவது வார்டுக்கு புதூர் காமாட்சியம்மன் கோவில் மண்டபத்திலும், 4, 5 வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்திலும், 6 ஆவது வார்டுக்கு கள்ளர் ஆரம்பப் பள்ளியிலும், 28, 29 ஆவது வார்டுகளுக்கு விக்னேஷ்வரா ஆசிரியர் பயிற்சி மையத்திலும் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெறும் இப்பணியில் புகைப்படம், கை விரல் ரேகைகள், கருவிழித்திரை ஆகியவை பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் அதற்கான சிறப்பு அடையாள எண்ணுடன் கூடிய ஒப்புதல் சீட்டும் வழங்கப்படுகிறது.

புகைப்படம் எடுக்கும் பணிகளை, போடி வட்டாசியர் பெ. முருகன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, போடி நகராட்சி ஆணையர் எஸ். சசிகலா, பொறியாளர் ஆர். திருமலைவாசன், மேலாளர் ப. பிச்சைமணி, கணக்காளர் முருகதாஸ், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
 ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் ஆணையர் கூறுகையில், இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வருகிறோம். பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். குறைந்தபட்சம் ஒரு வார்டுக்கு 4 நாள்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் நாள்கள் ஒதுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் புகைப்படம் எடுக்க வேண்டும். வெளியூரில் உள்ளவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக புகைப்படம் எடுக்கப்படும் என்றார்.
 


Page 221 of 841