Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அவசரக் கூட்டம்

Print PDF
தினமணி                 12.03.2013

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அவசரக் கூட்டம்


கரூர் நகராட்சிப் பகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் அமைப்பது, புதிய குடிநீர் தொட்டிகள் நிறுவுவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளை நிறைவேற்றுவது தொடர்பான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் (பொ)  எல். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வறட்சி நிவாரணத் திட்டம் 2012-13-ன் கீழ் ரூ. 2.36 கோடியில் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள், புதிதாக குடிநீர் தொட்டிகளை அமைப்பது தொடர்பாக வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தில் குறைந்த ஒப்பந்தப் புள்ளிகள் அளித்துள்ளவர்களின் ஒப்பந்தப் புள்ளிகள ஏற்கலாம், மேற்கண்ட பணிகளுக்கு மதிப்பீட்டை விடக் கூடுதலான செலவுத் தொகைக்கு நிர்வாக அனுமதியும், செலவுத் தொகையை நகராட்சி குடிநீர் வடிகால் நிதியிலிருந்து செலவு செய்யவும், கூடுதல் செலவினத்தை 2012-13-ம் ஆண்டுக்கான திருத்திய வரவு - செலவுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிமுகம்: கரூர் நகராட்சியின் நகர்நல அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள ஹேமச்சந்த் காந்தி கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் 2006 முதல் 2010 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராகப் பணிபுரிந்தார்.  இதையடுத்து 2 ஆண்டு சென்னையில் மேல்படிப்பு படித்துவிட்டு. தற்போது கரூர் நகராட்சி நகர் நல அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.

விவாதம்:  ஸ்டிபன் பாபு (காங்கிரஸ்):  புதிய நகர் நல அலுவலரை வரவேற்கிறோம். இனாம் கரூர் பகுதியில் அதிகளவில் இறைச்சிக் கடைகள் உள்ளன.  சுகாதாரமற்ற பல இறைச்சிக் கடைகளால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நகர் நல அலுவலர் இனாம்கரூர் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைவர்: கரூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அவர் பணியாற்றுவார்.

ஏகாம்பரம் (அதிமுக): நகர்மன்றக் கூட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யப்படும்  வரவு - செலவு, பிறப்பு, இறப்புக் கணக்குகள் அண்மைக் காலமாக தாக்கல் செய்யப்படுவதில்லை.

தலைவர்: கரூர் நகராட்சியில் ஒவ்வொரு மாதமும் வரவு, செலவு தாக்கல் செய்யும் வழக்கம் இல்லை.

இருந்தாலும் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்த பேசி முடிவு எடுக்கப்படும்.

ராஜேஷ் (காங்கிரஸ்): திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள வடிகாலில், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

தலைவர்: நானே நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

இதையடுத்து கூட்டம் நிறைவுற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் நன்றி கூறினார்.
 

தேசிய அடையாள அட்டைக்கு பதிவு முகாம் இன்று தொடக்கம்

Print PDF
தினமணி          09.03.2013

தேசிய அடையாள அட்டைக்கு பதிவு முகாம் இன்று தொடக்கம்


மதுரை மாநகராட்சி 80 முதல் 84 ஆவது வார்டுகள் மற்றும் வார்டு 64 பகுதிகளில் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுத்தல் மற்றும் பதிவு முகாம் மார்ச் 9 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய அடையாள அட்டைக்குப் புகைப்படம் எடுத்தல் மற்றும் பதிவு முகாம் வார்டுகள் வாரியாக நடைபெறுகிறது. 2013 ஆம்  ஆண்டு புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு இந்த தேசிய அடையாள அட்டையைக் கொண்டு கணக்கெடுப்பு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

வார்டு 80 முதல் 82-க்குள்பட்ட பகுதிகளில் மார்ச் 9 முதல் 13 ஆம் தேதி வரை  முகாம்கள் நடைபெறுகின்றன. வார்டு 80-க்கு திருவிக சாலை மங்கையர்க்கரசி  நடுநிலைப் பள்ளி, மணி நகரம் தொழிலாளர் நலச்சங்க மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 81-க்கு கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 82-க்கு சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளி, தைக்கால் 1 ஆவது தெரு சமுதாயக்கூடத்திலும் முகாம்கள் நடைபெறும்.

வார்டு 83-க்கு மார்ச் 14 முதல் 18 ஆம் தேதி வரை வடக்குமாசி வீதி  டிஎம்ஆர் மேல்நிலைப் பள்ளி, மணியம்மை ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.

வார்டு 84-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை, வடக்கு ஆவணி மூல வீதி மாநகராட்சிப் பள்ளி, வடக்கு ஆவணி மூல வீதி பொன்னு அய்யங்கார்  பள்ளி ஆகிய இடங்களிலும், வார்டு 66-சொக்கிகுளம் பகுதிக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மறைமலை அடிகளார் மாநகராட்சிப் பள்ளி, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.

முகாம்களில் பதிவுக்கு செல்வோரின் புகைப்படம், கைரேகை மற்றும் கண்ணின் கருமணிகள் ஆகியவை கணினி மூலம் பதிவு செய்யப்படும். குடும்பத்திலுள்ள 5 வயதுக்குள்பட்ட அனைவரும் இப்பதிவை செய்து கொள்ள வேண்டும்.

முகாமுக்கு செல்வோர் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட குடும்ப ஒப்புகைச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
 

வீதிகளில் புதிய பெயர்ப்பலகை: திண்டிவனம் மக்கள் வரவேற்பு

Print PDF
தினமணி           08.03.2013

வீதிகளில் புதிய பெயர்ப்பலகை: திண்டிவனம் மக்கள் வரவேற்பு

திண்டிவனம் நகராட்சி சார்பில், நகரின் முக்கிய வீதிகளில் புதிய பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் வரவேற்றுள்ளனர்.

திண்டிவனம் நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதேபோல் நகரில் முக்கிய வீதியான நேரு வீதி, காலேஜ் ரோடு, செஞ்சி ரோடு என பல வீதிகள் உள்ளன.

இதற்கு முன் நடந்த திமுக ஆட்சி காலத்தில் நடந்த திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் செங்கல்லினால் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன.

ஆனால் அவை அனைத்தும் சுமார் 1 வருடம் கூட முழுமையாக மக்களுக்கு பயன் அளிக்க முடியாமல் இடிந்து விழுந்தும், பெயிண்டால் எழுதப்பட்ட வரிகள் அழிந்தன.

தற்போது செயல்பட்டும் வரும் நகராட்சி நிர்வாகம் நகரின் 30 முக்கிய இடங்களில் 5 லட்சம் மதிப்பில் ஸ்டில் பைப்பிலான ஒளியை பிரதிபலிக்கும் புதிய பெயர்ப் பலகைகளை வைத்துள்ளது.

நீண்டகாலம் அழியாமலும் துருப்பிடிக்காமலும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட இப்பெயர் பலகைகள், நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து நகர்மன்றத் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் கூறுகையில், நகர எல்லையின் நான்கு திசைகளிலும், 33 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இதே போன்ற பெயர்ப்பலகைகள் ரூ.9 லட்சம் செலவில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
 


Page 223 of 841