Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மக்கள் வரவேற்பு தொடர்கிறது மலிவு விலை உணவகத்தில் கீழ்ப்பாக்கத்துக்கு முதலிடம்

Print PDF
தினகரன்         05.03.2013

மக்கள் வரவேற்பு தொடர்கிறது மலிவு விலை உணவகத்தில் கீழ்ப்பாக்கத்துக்கு முதலிடம்


சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள மலிவு விலை உணவகம் மக்கள் ஆதரவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 
மாநகராட்சி சார்பில் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதலில் 15 மண்டலங்களிலும் தலா ஒரு உணவகம் திறக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பிப்ரவரி 24ம் தேதி மேலும் 24 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இம்மாத இறுதிக்குள் மேலும் 161 மலிவு விலை உணவகங்களை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிதாக திறக்கப்பட்ட உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5க்கு விற்கப்படுகிறது. இந்த உணவகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சில உணவு கூடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பிடுகின்றனர். இதனால், உணவு கூடங்களில் சிறிது நேரத்தில் பொருட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. இதைதொடர்ந்து கூடுதலாக உணவு தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

உணவகங்களில் விற்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை எந்தவிதத்திலும் குறையக்கூடாது என மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவ்வப்போது, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவின் தரத்தை பரிசோதனை செய்து வருகின்றனர். மக்களின் ஆதரவில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மலிவு விலை உணவகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மலிவு விலை உணவகங்களுக்கு தமிழக அரசு 1 கிலோ அரிசியை ரூ.1க்கு வழங்கி வருகிறது. தற்போது வழங்கப்படும் அரிசி தரம் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு உணவு கூடம் உள்பட 3 இடங்களுக்கு அனுப்பப்பட்ட அரிசியில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 

தாய்-சேய் நல விடுதி கட்டும் பணி:நகராட்சித் தலைவர் ஆய்வு

Print PDF
தினமணி         05.03.2013

தாய்-சேய் நல விடுதி கட்டும் பணி:நகராட்சித் தலைவர் ஆய்வு


திருவள்ளூரில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் தாய்-சேய் நல விடுதிப் பணிகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் சிவி. நாயுடு சாலை ராஜம்மாள்தேவி பூங்கா அருகே நகராட்சி சார்பில் புதிதாக ரூ.10 லட்சம் செலவில் தாய்-சேய் நல விடுதி கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் திடீரென ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், துரிதமாகவும் முடிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.

துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொறியாளர் நீலநாராயணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் நகராட்சி சார்பில் வி.எம்.நகர் பகுதியில் ரூ.34 லட்சம் செலவில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையையும் அவர் பார்வையிட்டார்.
 

துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு

Print PDF
தினமணி         05.03.2013

துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு


துப்புரவு பணிகளை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதென வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம், புதன்கிழமை நடந்தது. பேரூராட்சித் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட பாடுபட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான முறையில் சுகாதாரப் பணிகளை செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் துப்புரவு பணிகளை ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 


Page 225 of 841