Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவுப் பணி: ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

Print PDF
தின மணி           27.02.2013

துப்புரவுப் பணி: ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்


ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த தில்லி மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் வலியுறுத்தினார்.

தில்லியில் "ஸ்வாபிமான் திவஸ்' (சுயமரியாதை தினம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தில்லி துப்புரவுத் தொழிலாளர் நல ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ஷீலா தீட்சித் பேசியதாவது:

இந்தியாவிலேயே, துப்புரவுப் பணிகளை கைகளால் மேற்கொள்வதற்கு தடை விதித்த முதல் மாநிலம் தில்லியாகும்.

பணி விதிகளின்படி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான வசதிகள், அவர்களது வேலை ஆகியவை நவீனப்படுத்தப்பட வேண்டும். அவர்களது பணிக்கு கௌரவமான ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

தில்லியில் துப்புரவுத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்து அவர்களது அந்தஸ்தை உயர்த்துவதற்கு தில்லி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

அவர்களுக்கான தேவைகள் குறித்து தில்லி துப்புரவுத் தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் அளித்துள்ள கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை அரசு பரிசீலிக்கும் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

ஆணையத்தின் தலைவர் கர்னம் சிங் பேசுகையில், "2007-ல் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆணையம், துப்புரவுத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவச தொலைபேசி உதவி எண் சேவை அளிக்கப்படுகிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி உதவிக்காக ஆணையம் மூலம் நிதியுதவியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தில்லியில் பல்வேறு மையங்களில், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழில்சார் படிப்புகளை இலவசமாக அளிக்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் தில்லி சட்டப்பேரவை தலைவர் யோகானந்த் சாஸ்திரி, போக்குவரத்து அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி, எஸ்.சி.,எஸ்.டி.,பிரிவினருக்கான தேசிய ஆணையத்தின்   துணைத் தலைவர் ராஜ்குமார் வர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Last Updated on Wednesday, 27 February 2013 10:42
 

மதுரை மாநகராட்சி நிர்வாகம் மீது தொடரும் புகார்கள்

Print PDF
தின மணி           27.02.2013

மதுரை மாநகராட்சி நிர்வாகம் மீது தொடரும் புகார்கள்


குண்டும் குழியுமான சாலைகள், சீரற்ற குடிநீர் விநியோகம், அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள், தெருக்களில் தேங்கும் கழிவு நீர், தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் பெருக்கம் என மக்கள் அவதிப்படும் நிலையில் அதைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, அதிகாரத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதில் அரசியல் பிரமுகர்களுடன், அதிகாரிகளும் புகாருக்கு ஆளாகினர்.

மாநகராட்சிப் பகுதியில் புதிதாகக் கட்டடம் கட்டுவோரிடம் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் வசூலித்ததாகப் புகார் கூறப்பட்டது. அப்போதைய ஆட்சியின் மீது மக்கள் அதிருப்திக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.   கடந்த பேரவைத் தேர்தலின்போது மதுரை பிரசாரக் கூட்டத்தில் பேசிய தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திமுகவினரிடமிருந்து மதுரையை மீட்போம் என்றார். அதன்படியே பேரவைத் தேர்தல் மட்டுமின்றி மாநகராட்சித் தேர்தலிலும் அதிமுகவின் பலம் ஓங்கியது.

தற்போது மாநகராட்சியில் அதிமுக சார்பிலான மேயரும், அதிகமான அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால், திமுக ஆட்சியின்போது இருந்த அதே அதிகாரிகள்தான் பெரும்பான்மையாக உள்ளனர். மாநகராட்சியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும், கடந்த ஆட்சியின்போது அனுபவித்த வேதனைகள்தான் இன்னும் தொடருகின்றன என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்க மாநகராட்சி அக்கறை செலுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். லாரிகளில் குடிநீர் விநியோகம் என்பது அறிவிப்பில் மட்டுமே இருக்கிறது. கொசு மருந்து தெளித்தல், குப்பை அகற்றம் ஆகியவற்றிலும் திருப்தியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் கட்டட வரைபட அனுமதிக்குப் பொதுமக்களிடம்  முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டது. அதைப்போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் மூலம், கட்டட வரைபட அனுமதி வழங்குவது செயல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.    ஆனால், தெற்கு மண்டலத்தில் ஆன்லைன் மூலம் வரைபட அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களிடம் பணம் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேபோல, அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே உள்ள பகுதியில் பொதுச் சாலைக்காக தனி நபர் ஒருவர், தனது இடத்தை தானமாக மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கு உதவுவதாகக் கூறி அதிகாரிகள் செயல்படுவதாக சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது.

2006 முதல் 2011 வரை வரி விதிப்பு செய்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. அதையடுத்து சில கட்டடங்களில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது, ரூ.4 கோடி முறைகேடு கண்டறியப்பட்டது.

ஆனால், அதன் மீதான தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மாநகராட்சி மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே, மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இடித்து அகற்றப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Last Updated on Wednesday, 27 February 2013 10:27
 

மாநகரில் காட்சி பொருளான சிக்னல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

Print PDF

தின மலர்                27.02.2013

மாநகரில் காட்சி பொருளான சிக்னல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

சென்னை: மாநகரில் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட சிக்னலில் பெரும்பாலானவை, செயல்படாமல் கிடப்பதால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நுழைவாயிலில், காளியம்மன் கோவில் சாலை - சந்தை சாலை சந்திப்பில், மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வழித்தடத்தில், மெட்ரோ ரயில் திட்டப் பணி மற்றும் கோயம்பேடு சந்தை சாலை உள்ளிட்ட பணிகளுக்காக, போக்குவரத்து மாற்றம் செய்து இருந்தனர்.இதன் காரணமாக, அப்பகுதியில் சிக்னலின் இயக்கம் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது, பணி முடிந்துள்ள நிலையில், இந்த சிக்னலை மீண்டும் இயக்காமல், அப்படியே விடப்பட்டு உள்ளது.இதே போல, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், அவிச்சி பள்ளி அருகே, பாதசாரிகள் சாலையை கடக்க அமைக்கப்பட்ட சிக்னல், இயக்கப்படாமல் உள்ளது. ஆண்டுக்கணக்கில் இயக்கப்படாமல் கிடக்கும், இந்த சிக்னல் பகுதியில், விபத்து பயத்துடனேயே பாதசாரிகள் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இதே போல், கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு முன்பாக, காவல் சேவை மையம் எதிரே, பாதசாரிகள் கடப்பதற்காக, போடப்பட்ட சிக்னலும் செயல்படுவதில்லை.இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறுகையில், "கோயம்பேட்டில் கேபிள்கள் பழுதால், பழுதை நீக்குவதற்கு, மின்வாரியத்திடம் கோரியுள்ளோம். பழுது சரி செய்த பின், சிக்னல் இயக்கப்படும். மற்றபடி, மாநகரில் பெரும்பாலான இடங்களில், பாதசாரிகள் கடப்பதற்காக போடப்பட்ட சிக்னல்கள், செயல்படாமல் தான் கிடக்கின்றன,'' என்றனர்.

Last Updated on Wednesday, 27 February 2013 10:10
 


Page 230 of 841