Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

"திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம்'

Print PDF

தினமணி             06.02.2014

"திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம்'

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி சான்றிதழை தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலனிடம் வழங்குகிறார் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன். உடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன் மற்றும் உறுப்பினர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி சான்றிதழை தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலனிடம் வழங்குகிறார் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன். உடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ.கோபிநாதன் மற்றும் உறுப்பினர்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்று முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குநர் டி.சந்திரசேகரன் கூறினார்.

சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான திறனூட்டும் பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்தின. பயிற்சி முகாமில் வேலூர், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரகங்களுக்குள்பட்ட 38 நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 800 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள்,கடமைகள்,பொறுப்புகள்,நகராட்சிகளின் நிதி ஆதாரங்கள்,பெருகி வரும் நகர்ப்புறத் தேவை மற்றும் சேவை,நகர்ப்புறச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு,நகரமயமாகுதலின் போக்கும் அதன் தாக்கமும்,மனித உறவுகள் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் நகராட்சிகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும்,அதற்கான தீர்வுகள் குறித்தும் பயிற்சியாளர்களிடம் விளக்கம் கேட்டறிந்தனர். பயிற்சி முகாமில் முன்னாள் நகராட்சிகள் கூடுதல் நிர்வாக இயக்குனர் டி.சந்திரசேகரன் பேசியதாவது: நகர்மன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும். குடிநீர்வசதி, பாதாளச்சாக்கடை, கழிவுநீர், குப்பை மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்போது செலவினம் அதிகரித்து, வரி உள்ளிட்டவை கூடுதலாகுவது தவிர்க்க முடியாது.

அனைத்து மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சேவைகளை இலவசமாக வழங்குவது சாத்தியமல்ல. இவற்றை மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் மன்ற உறுப்பினர்கள் உரியமுறையில் பொதுமக்களுக்குப் புரிய வைப்பது அவசியம். தற்போது உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதிஆதாரங்களைப் பெறுவதில் சிரமம் இல்லை. ஆனால் முறையாகத் திட்டமிட்டு, சிறப்பாக நிறைவேற்றி, தொடர்ந்து செயல்படுத்துவதில் தான் குறைபாடுகள் உள்ளன.

நாட்டில் வேறு எந்த மாநகராட்சியும் செயல்படுத்த முடியாத சேவையை புனே அருகில் உள்ள பிம்ரி மாநகராட்சி செய்து வருகின்றது. பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது முதல் சொத்து, பட்டா, வாரிசு உள்ளிட்ட சுமார் 24 வகையான சேவைகளை வழங்கி, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் நகராட்சியில் "நம்ம டாய்லெட்',"நம்ம சமுதாய சமையல்கூடம்' , "குப்பையில்லா நகராட்சி' உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரித் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு,இதர நகர்மன்றங்களின் வழிகாட்டுதலாகத் திகழ்கிறது என்றார். நிறைவாக தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன் பேசும்போது,தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் வழிகாட்டுதலுடன்,அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவோடும்,ஒத்துழைப்போடும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பணிகளை நிறைவேற்றி வருவதால் தாம்பரம் இன்று அனைத்து நகராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகம் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி கண் பரிசோதனை முகாம்: 7-ஆம் தேதி தொடக்கம்

Print PDF

தினமணி             05.02.2014

மாநகராட்சி கண் பரிசோதனை முகாம்: 7-ஆம் தேதி தொடக்கம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. இம் முகாம் பிப். 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வரின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து வார்டுகளிலும் கண்பார்வை குறைபாடு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

முகாம்களில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பங்கேற்று, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதன் மூலம் 66 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனையும், தேவைப்படுவோருக்கு விலையில்லா கண் கண்ணாடியும் வழங்கப்படும். மேலும் கண்புரை கண்டறிதல் மற்றும் விழித்திரை நோய் கண்டறிதல் சேவைகளும் அளிக்கப்படும். இந்த முகாமை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பிப். 7-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடத்தை அறிய அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளரைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்

Print PDF

தினமலர்             04.02.2014

திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெயா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, துணை மேயர் ஆசிக் மீரா, நகர பொறியாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 10 மனுக்கள் பெறப்பட்டது. இதில் தெரு விளக்கு சரி செய்தல், கழிப்பிடம் பராமரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, மேயர் உத்தரவிட்டார்.

 


Page 24 of 841