Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தென்காசி நகராட்சியில் வீட்டு வரி குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Print PDF
தின மலர்                26.02.2013

தென்காசி நகராட்சியில் வீட்டு வரி குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும் துணைத் தலைவர் வலியுறுத்தல்


தென்காசி:தென்காசி நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட வீட்டு வரி குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் பானு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுடலை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

நாகூர்மீரான்: நகராட்சி பகுதியில் இறைச்சிக்காக மாடு வெட்டுவதற்கு தனியே இடம் ஒதுக்கப்பட்டும் அதனை பலர் பயன்படுத்தாமல் ரோட்டின் ஓரத்தில் மாடுகளை வெட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ரகுமத்துல்லா, சலீம்: டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்திற்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லை. நகராட்சி சுகாதார துறை மூலம் புதிதாக வாங்கப்பட்ட லாரிகள் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லையே!

தலைவர்: மக்கள் நலன் கருதி உடனடியாக லாரிகள் இயக்கப்பட்டது. இனி வரும் கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு முறையாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

அதிகாரி: அபே மருந்து தெளிப்பது குறித்து நகராட்சி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம்தான் நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றார்.

நாகூர்மீரான்: நகராட்சி வீட்டு வரி வசூல் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இறப்பு சான்றிதழ் பதிவு செய்து கேட்பதற்கு 50 ரூபாய் கொடுத்தால் கவுன்டரில் பாக்கி 20 ரூபாய் கொடுப்பதில்லை. இது லஞ்சமா?

துணைத் தலைவர்: நகராட்சி பில் கலெக்டர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எவ்வித தவறும் செய்யவில்லை என சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அவரைத்தான் விஜிலென்ஸ் போலீசார் லஞ்சம் பெறும் போது கைது செய்தனர். உரிய முறையில் விசாரணை செய்யாமல் எப்படி பில் கலெக்டருக்கு நற்சான்றிதழ் அளிக்க முடிந்தது.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வீட்டு வரி வசூல், பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு வசூலிக்கப்பட்ட பணம் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஒரு சதுர அடிக்கு எவ்வளவு பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். ஒவ்வொரு ரசீதிற்கும் 10 ஆயிரத்திற்கு குறையாமல் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தலைவர்: பில் கலெக்டரை மாற்ற வேண்டும் என எழுதி கொடுத்தேன். அதற்கு ஏப்ரல் மாதம் வரை யாரையும் மாற்ற முடியாது என கூறி விட்டனர். அதிகாரிகள் மெத்தனப் போக்கால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

சலீம்: குடிநீர் இணைப்பு பெற டிபாசிட் தொகை செலுத்தி பல மாதங்கள் ஆகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

ரகுமத்துல்லா: நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக பொய்யாக தலைவர் பத்திரிகையில் பேட்டி கொடுத்ததை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். (இக்கருத்தை வலியுறுத்தி கவுன்சிலர்கள் சலீம், சாமி, மணிமாலா, மாரிச்செல்வி, வெங்கட்ராமன், செய்யது ஆபில் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.)

தலைவர்: காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவினை இந்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Last Updated on Tuesday, 26 February 2013 11:47
 

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

Print PDF
தின மணி            25.02.2013

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சோதனை ஓட்டம்

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள டபுள் டெக்கர் ரயிலின் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை-பெங்களூர் இடையே இரண்டடுக்கு (டபுள் டெக்கர்) ரயில் இயக்கப்படும் என கடந்த 2012-13-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கான பிரத்யேக பெட்டிகள்

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஆர்.சி.எஃப்.) தயாரிக்கப்பட்டு கடந்த 2 நாள்களுக்கு முன் சென்னை வந்தடைந்தது.

இதைடுத்து இந்த ரயில் சோதனை ஒட்டமாக 11 பெட்டிகளுடன் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் புறப்பட்டது. அந்த ரயில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை வரும் என்று தெரிகிறது.

சென்னையில் மேலும் சில சோதனைகள் நடத்தப்பட்ட பின்பே சென்னை -பெங்களூர் இடையேயான டபுள்டெக்கர் ரயில் தேதி குறிக்கப்பட்டு முழு அளவிலான சேவையைத் தொடங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் முதல் டபுள் டெக்கர் ரயில்சேவை கொல்கத்தா மாநிலம் ஹெüரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில்நிலையங்களுக்கு இடையே கடந்த 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அதேபோல கடந்த மாதம் தில்லி - ஜெய்ப்பூர் இடையே டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

சென்னை - பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள டபுள் டெக்கர் ரயில் சேவை தென்னிந்தியாவில் முதல் முறை என்ற பெருமையை பெறும்.

சிறப்பு அம்சங்கள்: இந்த டபுள் டெக்கர் ரயிலில் முழுக்க இருக்கை வசதி மட்டுமே இருக்கும். மேலும் இந்த ரயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திலும் குளுகுளு வசதி செய்யப்பட்டிருக்கும்.

சென்னை-பெங்களூர் டபுள் டெக்கர் ரயில், 13 பெட்டிகளின் தொகுப்பாக இருக்கும். 11 பெட்டிகள் பயணிகளுக்காகவும், 2 பெட்டிகள் சரக்கு மற்றும் பிரேக் வேனாகவும் இருக்கும்.

அதிகமான பயணிகள்: வழக்கமான ரயில் பெட்டிகளைவிட இந்த ரயிலில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். இப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியில் 78 பேர் பயணிக்க முடியும். ஆனால், டபுள் டெக்கர் ரயிலில் ஒரு பெட்டியில் 120 பேர் வரை பயணம் செய்ய முடியும். சென்னை- பெங்களூர் இடையே 6 மணி நேர பயணம்.

உத்தேச கட்டணம்: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒருவருக்கு ரூ.510-ம் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேர் கார் பெட்டியில் ரூ.386-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டபுள் டெக்கர் ரயிலில் ஒருவருக்கு ரூ.370 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. எனினும் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் கட்டணத்தில் மாறுதல் இருக்கலாம்.

பாதுகாப்பு அம்சம்: இந்த ரயில் பெட்டிகளில் சிவப்பு, மஞ்சள் நிற வண்ணம் பூசப்பட்டிருக்கும். நவீன முறையில் தயாரிக்கப்படுவதால், விபத்து ஏற்படும் போது, ஒரு பெட்டியின் மீது மற்றொரு பெட்டி மோதாது என ரயில் பெட்டி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கே.ஆர்.புரம், பெங்களூர் கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கல்வீச்சு: ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற போது வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மர்ம நபர்கள் சிலர், ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.

எனினும் உள்ளே பயணம் செய்த அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Last Updated on Tuesday, 26 February 2013 07:01
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF
தின மணி          23.02.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் எம். கோதண்டபாணி தலைமை தாங்கி பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வ.மணி, துணைத் தலைவர் பொ.தேவேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கங்கை கொண்டான் மண்டபத்தில் இருந்து பேரணி தொடங்கி பஸ் நிலையம், சுற்றுலாத்தலமாக விளங்கும் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக நடைபெற்றது.

இதில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் ஒழிப்பால் ஏற்படும் மக்களின் சுகாதாரம், ஆரோக்கியமான வாழ்வு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும் பிளாஸ்டிக்கின் நன்மை தீமைகள் குறிந்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
Last Updated on Monday, 25 February 2013 11:36
 


Page 232 of 841