Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துறையூர் நகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்எதிர்ப்பின்றி நிறைவேறிய தீர்மானங்கள்

Print PDF

தினமலர்                       20.08.2012

துறையூர் நகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்எதிர்ப்பின்றி நிறைவேறிய தீர்மானங்கள்

துறையூர்: துறையூர் நகராட்சியில் கவுன்சிலர்கள் "அபூர்வமாக' ஒற்றுமையுடன் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை, அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்பு தந்து செயல்படுத்துவார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.துறையூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. 1970க்கு முன் துறையூரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். நான்கரை லட்சம் கொள்ளளவுடன் இரண்டு டேங்க் கட்டி காசிகுளம், பெரிய ஏரி, சின்ன ஏரியில் போர்வெல் மூலம் நீரை ஏற்றி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, அப்போதைய எம்.எல்.ஏ., அழகமுத்து நடவடிக்கை எடுத்தார். அப்போதே காவிரி குடிநீரை முசிறியிலிருந்து கொண்டு வர ஆய்வு செய்யப்பட்டது.அந்த ஆய்வின்படி 2001ல் துறையூர் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பழைய இணைப்பு பெற்றிருந்த இரண்டாயிரம் பேருக்கு உடனடியாக காவிரி குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது குடிநீர் மீட்டர் முறை நீக்கி மாதத்துக்கு 80 ரூபாய் குடிநீர் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு இணைப்பிலிருந்து எவ்வளவு நீர் பிடித்தாலும் 80 ரூபாய் தான் செலுத்த வேண்டும் என்பதால், சிலர் குழிவெட்டி, மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்ச துவங்கினர்.இதனால் மேடான பகுதியில் உள்ள இணைப்புகளுக்கு போதிய குடிநீர் வராத நிலை ஏற்பட்டதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கவுன்சிலர்கள் சிலரும் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இந்நிலையில் புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டது. தற்போது நான்காயிரம் இணைப்பு உள்ளது.இதில் 60 சதவீத இணைப்பு குழிவெட்டியும், மோட்டார் வைத்து உறிஞ்சியும் குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் மீதமுள்ள இணைப்புகளில் குடிநீர் வருவதில்லையென மக்கள் அடிக்கடி நகராட்சிக்கு வந்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்காததற்கு, கவுன்சிலர்கள் சிபாரிசுக்கு வருவதாக அதிகாரிகள் கூறினர்.தற்போதைய நகராட்சியில் தலைவராக முரளி (தி.மு.க.,), திவ்யா (அ.தி.மு.க.,) துணைத்தலைவராகவும் அ.தி.மு.க., ஆறு, தே.மு.தி.க., ஒன்று, சுயேட்சை ஒன்று, காங்கிரஸ் இரண்டு தவிர 13 பேர் தி.மு.க., கவுன்சிலராக இருந்தும் கூட எந்த கூட்டமும் அமைதியாக நடந்ததில்லை. சுமூகமாக தீர்மானமும் நிறைவேற்றியதில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் குடிநீர் குழாய்களை தரைக்கு மேல் தூக்கி போடவும், பழுதான குப்பை லாரியை சரிசெய்யவும், குடிநீர் டேங்கர் லாரி புதிதாக வாங்கவும் தலைவர், துணைத்தலைவர் அனைத்து கவுன்சிலர்கள் "அபூர்வ' ஒற்றுமையுடன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இத்தீர்மானத்தை அதிகாரிகள், மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். இதேபோல் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரமான பஸ்ஸ்டாண்ட், ஆக்ரமிப்பு அகற்றம், தினமும் குப்பை அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தெரு விளக்கு பராமரிப்பில் இதே ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

Last Updated on Tuesday, 21 August 2012 05:37
 

மண்டல அலுவலகங்கள் மூலம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனம் மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினகரன்              17.08.2012

மண்டல அலுவலகங்கள் மூலம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நியமனம் மாநகராட்சி உத்தரவு

சென்னை, : மண்டல அலுவலகங்கள் மூலம், தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில், தேனாம்பேட்டை(மண்டலம் 9 ), கோடம்பாக்கம்( மண்டலம் 10), அடையாறு(மண்டலம் 13) ஆகிய 3 மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் சாலைகளில் குப்பை தொட்டிகள் அமைத்தும், 3 சக்கர சைக்கிளில் வீடு-வீடாக சென்றும் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.  முக்கிய இடங்களில் குப்பை சேகரிக்கும் வளாகங்கள்  அமைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.
 
பணியாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் குப்பை அள்ளும் பணியில் பல வார்டுகளில் தேக்கம் உள்ளது. இப்பிரச்னைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் புதிதாக 2,000 குப்பை தொட்டிகள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்க மாநகராட்சி ரூ.3 கோடியில் டெண்டர் கோரியுள்ளது. இந்த டெண்டர் வரும் 31ம் தேதி திறக்கப்படுகிறது.

மேலும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க அந்தந்த மண்டலங்களிலேயே தேவையான அளவுக்கு தற்காலிக ஊழியர்களை தேர்ந்தெடுத்து துப்புரவு பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 17 August 2012 11:05
 

சிறந்த பேரூராட்சி திருப்பத்தூர்: ஆட்சியர் பாராட்டு

Print PDF

தினமணி             17.08.2012

சிறந்த பேரூராட்சி திருப்பத்தூர்: ஆட்சியர் பாராட்டு

திருப்பத்தூர், ஆக. 16: சிவகங்கையில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பத்தூர் பேரூராட்சிக்கு ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 12 பேரூராட்சிகளின் நிர்வாகத் திறன் அடிப்படையில் சிறந்த பேரூராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 5 திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் குப்பைகளை ஒருங்கிணைத்து அதை மட்கும் மட்காத குப்பைகளாக பிரித்து உரம் தயாரித்து விவசாயப்பணிக்கு வழங்க, குடிதண்ணீர் தூய்மை, முழு சுகாதாரம், சாலைகள் முழுமையாக அமைத்து கண்காணித்தல், தெருவிளக்கு மற்றும் சூரிய ஒளியில் எரியும் விளக்குகள் பராமரித்தல் போன்ற திட்டங்களுக்காக இப்பேரூராட்சியை தேர்வுக் குழு பரிந்துரை செய்தது.அரசு உத்தரவுப்படி திருப்பத்தூர் பேரூராட்சிக்கு மாவட்டத் தலைவர் கேடயம் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் எம்.பன்னீர் செல்வம், மாநில பிற்பட்டோர் ஆணைய உறுப்பினர் முருகானந்தம், ஊராட்சிக் குழுத் தலைவர் சிவதேவ்குமார், துணைத் தலைவர் சின்னையா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் தெய்வநாயகம் மற்றும் திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 17 August 2012 10:48
 


Page 247 of 841