Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தூய்மையான நகரமாக தில்லி மாற்றப்படும்: முதல்வர் ஷீலா தீட்சித்

Print PDF

தினமணி                         16.08.2012

தூய்மையான நகரமாக தில்லி மாற்றப்படும்: முதல்வர் ஷீலா தீட்சித்

புது தில்லி, ஆக. 15: சுத்தமான நகரமாக தில்லி மாற்றப்படும் என்றும் அதற்கு தில்லிவாசிகளின் பங்களிப்பு அவசியம் என்றும் சுதந்திர தின உரையில் முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

தொடர்ந்து 14-வது ஆண்டாக தில்லியின் முதல்வர் பதவியை வகித்துவரும் ஷீலா தீட்சித், சத்ரசல் ஸ்டேடியத்தில் சுதந்திர தின விழாவை ஒட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்று தேசிய மாணவர்கள் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

விழாவில் ஷீலா தீட்சித் பேசியது:

கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மூலம் சர்வதேச நகரம் என்ற தரத்திற்கு தில்லி உயர்ந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடியாத பகுதிகளில் மோனோ ரயில் சேவை அமைக்கப்படும்.

முதல்கட்டமாக சாஸ்திரி பார்க்-திருலோக்புரி பகுதியில் மோனோ ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்படும். யமுனை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும் சிக்னேச்சர் பாலம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.

அனுமதியில்லா 900 காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். தில்லி பசுமை மிக்க நகரமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி மாணவர்களின் சேவை இன்றியமையாதது.  தலைநகரை சுத்தமான நகராக மாற்ற வேண்டும். அதில், பள்ளி மாணவர்கள், தில்லி வாசிகள் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். குடிசைகள் இல்லாத நகரமாக மாற்ற, குறைந்த விலை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் அளிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தில்லி திகழ்கிறது.

தில்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் அவர் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார். தில்லியில் விளையாட்டு வீரர்களுக்கு நவீன பயிற்சிகள் அளிப்பதற்கு தேவைப்படும் நிதியை மாநில அரசு வழங்கும்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக உயர்நதுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் அதிகரிக்கப்படும். கெரசின் பயன்படுத்தாத மாநிலமாக தில்லி மாற்றப்படும். அதற்காக 2 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படும்.

அன்னஸ்ரீ திட்டம் மூலம் சுமார் 1.75 லட்சம் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள வாங்க மாதம் ரூ. 600 வீதம் நிதி வழங்கப்படும். இதன் மூலம் தில்லி பசி இல்லாத மாநிலமாகும்.

மக்களுக்காக மாநில அரசு நிறைவேற்றும் ஏராளமான திட்டங்கள் குறித்த விவரம் மக்களுக்கு சரிவர சென்றடையவில்லை. ஆகையால் அனைத்து மாநில அரசு அலுவலகங்களிலும் தில்லி அரசின் திட்டங்களின் விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும் என்று ஷீலா தீட்சித் கூறினார்.

பேரூராட்சி அதிகாரிக்கு ஆட்சியர் பாராட்டுகமுதி, ஆக 15: சொத்து வரி வசூல் சாதனையைப் பாராட்டி, அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு, புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் க.நந்தகுமார் விருது வழங்கினார்.

கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம். இவர் 2011-2012-ம் ஆண்டிற்குரிய சொத்து வரி ரூ.16 லட்சம் முழுவதையும் ஓராண்டிற்குள் வசூல் செய்துள்ளார்.
இதையொட்டி, செயல் அலுவலர் ராஜாராமை ஆட்சியர் நந்தகுமார் பாராட்டி, சுதந்திர தின விழாவில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

 

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர நாள் விழா

Print PDF

தினமணி     16.08.2012

திருச்சி மாநகராட்சியில் சுதந்திர நாள் விழா

திருச்சி, ஆக. 15: இந்திய சுதந்திர நாளையொட்டி புதன்கிழமை காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அ. ஜெயா கொடியேற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் 14 பேருக்கு தங்க நாணயம், தையல் பயிற்சி பெற்ற 40 மகளிருக்கு சான்றிதழ்கள் மற்றும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்கள் 9 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இந்த விழாவில், கீழரண் சாலை மாநகராட்சிப் பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் ஜெ, சீனிவாசன், என். மனோகரன், ஆர். ஞானசேகர், எம். லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ராஜபாளையம் நகராட்சியில் சுதந்திர தின விழா

Print PDF

தினமணி     16.08.2012

ராஜபாளையம் நகராட்சியில் சுதந்திர தின விழா

ராஜபாளையம், ஆக. 15: ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், புதன்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர், ராஜபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.

துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.பி. செல்வசுப்பிரமணியராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் யோகசேகரன், பாஸ்கரன் உள்பட பலர் பேசினர்.

நகராட்சி ஆணையர் சுல்தானா பேசுகையில், ராஜபாளையம் நகராட்சியில் தரமானசாலை வசதி, மின்விளக்கு வசதி உள்பட மக்களுக்குத் தேவையான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டில் வார்டுகளில் தரமான சாலை வசதி, வடிநீர் வாருகால் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தித் தர, சுமார் ரூ. 5 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இருப்பினும், பல இடங்களில் தெருக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பொதுக் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்படுவது வேதனையாக உள்ளது. தங்களது வீட்டைப் போல், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், கன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஆதிமூலம் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் கே. கோபால்சாமி தேசியக் கொடியேற்றி வைத்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியத் தலைவர் எ.எஸ். பொன்னுத்தாய் தேசியக் கொடியேற்றி வைத்தார். துணைத் தலைவர் ஊ.கி. குட்டி, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மெர்சி எஸ்தர் ராணி, மேலாளர் முத்து, மேலப்பாட்டக்கரிசல்குளம் ஊராட்சித் தலைவர் அழகாபுரியான் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், அனைவருக்கும் சுதந்திர தின சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் நிர்மலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

ராஜபாளையத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சி ஆகிய இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றிவைத்து, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதேபோன்று, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியேற்றி வைத்து, கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி, சிதம்பராபுரத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் கிராமசபைக் கூட்டத்தின்போது முற்றுகையிட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர்.

 


Page 250 of 841