Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

Print PDF

தினமணி             01.02.2014

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

சிதம்பரம் நகர புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து,  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்தில் புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

  கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:  ஜி.செல்வராஜ் (மூமுக)- ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதை குழாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

 ஆ.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): புதை குழாய் திட்டத்தை காரணம் காட்டி நகராட்சி நிர்வாகம் மக்கள் மீது எந்த வரியையும் சுமத்தக் கூடாது. புதிய இணைப்பிற்கு புதிய வரி விதிப்பு கூடாது. பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தை புதுப்பித்துத் தர வேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.  வக்காரமாரி நீர் தேக்கத்தில் உள்ள குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி அதிகளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ்: 2014-15 ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. எனவே நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுக்குத் தேவையான பணிகள் குறித்து மார்ச் 3-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

 பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நிற்க முடியவில்லை. மேலும் இலவச கழிப்பறை செயல்பாடின்றி உள்ளது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 தலைவர்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பஸ் நிலையத்தில் புதிய இலவச கழிப்பறை கட்டப்படும்.

 அப்புசந்திரசேகரன் (திமுக): சிதம்பரம் மேலவீதி நீர்த் தேக்க தொட்டி 1915-ம் ஆண்டு திவான் பகதூர் ராமசாமி செட்டியாரால் கட்டப்பட்டது. தற்போது இந்த ஆண்டு நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், ராமசாமி செட்டியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். நகரில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும்.

 கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், மின் கண்காணிப்பாளர் ஷேக்மொகைதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

நீடாமங்கலம் முதல் நிலைப் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், செயல் அலுவலர் த. நாராயணமூர்த்தி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2014-2015-ம் ஆண்டிற்கு குத்தகை இனங்கள், கடைகள் ஏலம் விடுவது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது, தெருமின் விளக்குகள் புதிதாக பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

பல்லடம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, ஆணையாளர் நாராயணன், பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

சின்னசாமி: நகரில் கொசு மருந்து அடிக்காததால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. ஆழ்குழாய்க் கிணறு அமைத்தும் மின் இணைப்புக் கொடுக்காததால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.

கிருஷ்ணகுமார்: நகரில், அத்திக்கடவு குடிநீர் குறைவாக வருகிறது. நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலைய பகுதியில் இ-டாய்லெட் அமைக்கப்படவில்லை. பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க வேண்டும்.

பொன்னுசாமி: குப்பை கொட்ட இடம் இல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

நாராயணன் (ஆணையாளர்): ஆழ்குழாய்க் கிணற்று தண்ணீர் விநியோகம் செய்ய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொசு மருந்து காலை 6 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரையும் அடிக்கப்படும். ஒடையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்லடத்தில் எரிவாயு மற்றும் மின் மயானம் அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் 4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் எரிவாயு மயானம் அமைக்கலாம்.

மின்வாரிய உதவிப் பொறியாளர் (நகரம்): 15 நாட்களுக்குள் ஆழ்குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

சேகர் (தலைவர்): பல்லடத்திற்கு வரும் அத்திக்கடவு குடிநீர்க் குழாயில் நீர்க் கசிவால் தண்ணீர் குறைந்துள்ளது. மேலும், இரண்டாவது திட்டத்திற்கு இருகூர் பிரிவு வரை குழாய் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப் பணி 6 மாதத்தில் முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

 


Page 26 of 841