Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சிவகாசி நகராட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Print PDF

தினமணி     16.08.2012

சிவகாசி நகராட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகாசி, ஆக. 15: சிவகாசி நகராட்சியில் இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளதாக, நகர்மன்றத் தலைவர் வெ.க. கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவரது செய்திக் குறிப்பு: சிவகாசி நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலருக்கு தங்களது பிரச்னைகளை யாரிடம் கூறுவது எனத் தெரியாமல் இருந்து வருகின்றனர். நகராட்சி தொடர்பான குடிநீர் வசதி, சாலை, வாய்க்கால் ஆகிய வசதிகளுக்கும், வரி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நகர்மன்றத் தலைவர் அலுவலக அறையில் வெள்ளிக்கிழமைதோறும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, தங்களது குறைகளை மனுக்களாகக் கொடுத்து தீர்வு காண கோரப்படுகின்றனர். இதில், நகர்மன்றத் தலைவரை நேரில் சந்தித்து பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேரூராட்சி அதிகாரிக்கு ஆட்சியர் பாராட்டு

Print PDF

தினமணி                         16.08.2012

பேரூராட்சி அதிகாரிக்கு ஆட்சியர் பாராட்டு

கமுதி, ஆக 15: சொத்து வரி வசூல் சாதனையைப் பாராட்டி, அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு, புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் க.நந்தகுமார் விருது வழங்கினார்.கமுதி அருகே அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.ராஜாராம். இவர் 2011-2012-ம் ஆண்டிற்குரிய சொத்து வரி ரூ.16 லட்சம் முழுவதையும் ஓராண்டிற்குள் வசூல் செய்துள்ளார்.இதையொட்டி, செயல் அலுவலர் ராஜாராமை ஆட்சியர் நந்தகுமார் பாராட்டி, சுதந்திர தின விழாவில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

 

தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்

Print PDF

தினமணி                         16.08.2012

தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்

சென்னை, ஆக. 15: தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் முறையாக விருதுகள் வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா மேடையில் இந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்து ரொக்கப் பரிசு அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல் செயல்படுகிறது. அதன்படி, சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விருதைப் பெற்றவர்கள் விவரம்:

கோவை மாநகராட்சி-ரூ.25 லட்சம் பரிசு மற்றும் சான்றிதழ்-மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் ஆணையாளர் டி.கே.பொன்னுசாமி.

சிறந்த நகராட்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி-நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆணையாளர் சுந்தராம்பாள்.

தேனி-அல்லி நகராட்சி-நகராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் ஆணையாளர் ராஜாராமன்.

நாமக்கல் நகராட்சி-நகராட்சித் தலைவர் கரிகாலன் மற்றும் ஆணையாளர் செழியன்.

சிறந்த பேரூராட்சிகள்: சிறந்த பேரூராட்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவைகளுக்கு முறையே ரூ.10 லட்சம், 5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

தென்கரை பேரூராட்சி-தலைவர் வீரமுத்துராஜபாண்டியன்-செயல் அலுவலர் கணேசன்.

முசிறி பேரூராட்சி-தலைவர் மாணிக்கம்-செயல் அலுவலர் முத்துக்குமார்.

பெருந்துறை பேரூராட்சி-தலைவர் சரஸ்வதி-செயல் அலுவலர் தன்னாசி.

கடலோரக் காவல் படையினருக்கு விருதுகள்:

கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய அப்துல் காதர் அக்பர், ராகேஷ்குமார், பல்வந்த், ராஜ்குமார் டோக்காஸ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

 


Page 251 of 841