Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெருக்களை தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளருக்கு பரிசு: ஆணையர்

Print PDF

தினமணி             13.08.2012

தெருக்களை தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளருக்கு பரிசு: ஆணையர்

திருச்சி, ஆக. 12: தெருக்களை தூய்மையாகப் பராமரிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் மூன்று பேருக்கு மாதந்தோறும் பரிசுகள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெளியிட்டார் அவர்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: ஆக. 15 முதல் தெருக்கள் தூய்மையாக இருப்பது குறித்த ஆய்வு தொடங்கும். இதற்காக துப்புரவுப் பணியாளர்களுக்கு தெருக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பாக    பணியாற்றும்    துப்புரவுப்   பணியாளர்களுக்கு    மேயர்   அ. ஜெயா     தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.அதே நேரத்தில்   தொடர்ந்து   விடுப்பில் உள்ளவர்களும்,      பணிக்கு         வராதவர்களும்   கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவர். தெருக்களில்  குப்பைகள்  தேங்கியுள்ளது  குறித்து   பொதுமக்கள்         செல்போன்     எண்களில் தெரிவிக்கலாம்.    செல்போன்    எண்கள் :  ஸ்ரீரங்கம்  கோட்டம்-   76395 11000,     அரியமங்கலம் கோட்டம்- 76395 22000,     கோ-அபிஷேகபுரம்  கோட்டம் -  76395 44000, பொன்மலைக் கோட்டம்- 76395 33000.   இந்த     எண்களில்      புகார்      தெரிவித்து     5      நாள்களுக்குள்       நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்      மாநகராட்சி   மைய  அலுவலக  செல்போன் எண்- 76395 66000-ல் புகார் அளிக்கலாம்' என்றார் தண்டபாணி. கூட்டத்தில், நகர்நல அலுவலர் (பொ) ந. ராஜேசுவரி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர்.

 

துப்புரவு பணி முகாம்

Print PDF

தினமலர்    13.08.2012

துப்புரவு பணி முகாம்

கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சி சார்பில், ஏரியை சுற்றி சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் பூங்கொடி, தலைவர் கோவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கலையரங்கத்தில் துவங்கி, சுற்றியுள்ள செடிகள், மண் அகற்றப்பட்டு நகராட்சி அலுவலம் எதிரே பணி முடிக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், துப்புரவு பணியாளர் உட்பட 50 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் அசன்அலிமுகம்மது, சாமுவேல், பாண்டியராஜ் செய்திருந்தனர்.
 

நாமக்கல் நகராட்சி வார்டுகளில் சனிக்கிழமைகளில் நேரடி ஆய்வு: நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி              12.08.2012

நாமக்கல் நகராட்சி வார்டுகளில் சனிக்கிழமைகளில் நேரடி ஆய்வு: நகர்மன்றத் தலைவர்

நாமக்கல், ஆக.11: மக்களை நோக்கி நகராட்சித் திட்டம் நாமக்கல் நகராட்சியில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமை வார்டுகளில் நேரடி ஆய்வுகள் செய்யப்பட்டு, மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் தெரிவித்தார்.

நகராட்சி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக அணுகி உடனுக்குடன் தீர்வு காணும் விதத்தில் நாமக்கல் நகராட்சியில் மக்களை நோக்கி நகராட்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழா ஏ.எஸ்.பேட்டை சில்ரன்ஸ் பார்க் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் திட்டத்தை தொடக்கிவைத்துப் பேசியது:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து நிவாரணம் வழங்கும் வகையில் மக்களை நோக்கி நகராட்சி நிர்வாகம் என்ற சீரிய திட்டம் நாமக்கல் நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 16, 19 ஆகிய இரு வார்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக நகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதோடு மட்டுமன்றி சொத்து வரி, பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குதல், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் இணைப்புக்கு பெயர்மாற்றம் செய்தல், புதை சாக்கடைத் திட்ட இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் அந்தந்த இடத்திலேயே ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்படும். இந்த சீரிய திட்டத்தை நகராட்சி மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளுக்கு நிவாரணம் பெற வேண்டும் என்றார்.

தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் கூறியது:

வாரந்தோறும் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்ட வார்டுகளுக்கு நகர்மன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர் மற்றும் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவர். அந்த குறைகள் மீது உடனுக்குடன் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனுக்கள் பெறுவதோடு மட்டுமன்றி வார்டு முழுவதும் நேரடி ஆய்வுகள் செய்து அந்த வார்டுகளில் நிலவும் குறைபாடுகளை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலர்கள் தங்கள் வார்டுகளுக்கு வரும் போது பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.

முன்னதாக, 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் சுழல் நிதியும், 15 பேருக்கு தலா ரூ.2000 ஈமச் சடங்கு மானியமும், 5 பேருக்கு நீண்ட கால நிலுவைத் தொகையாக ரூ.3.17 லட்சத்தையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.காந்தி முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் சேகர், ஆணையர் செழியயன், பொறியாளர் கமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 13 August 2012 09:40
 


Page 254 of 841