Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை மாநகராட்சியில் 711 காலிப்பணியிடங்கள்

Print PDF

தினமலர்                 27.07.2012

 நெல்லை மாநகராட்சியில் 711 காலிப்பணியிடங்கள்

திருநெல்வேலி : 711 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி கேட்டு நகராட்சி நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிப்பது சம்பந்தமான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் 30ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.

நெல்லை மாநகராட்சியில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இதில் 711 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. 4 உதவி ஆணையர் பதவிகள், 2 உதவி வருவாய் அலுவலர், 4 கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் 18 பணியிடங்கள், 36 வருவாய் உதவியாளர்கள், 55 துப்புரவு ஆய்வாளர்கள், 16 டிரைவர்கள், 6 உதவிப்பொறியாளர்கள், 6 துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 28 செயல் திறன் உதவியாளர்கள், 6 மருத்துவ அலுவலர்கள், 9 சுகாதார ஆய்வாளர்கள், 8 மருந்தாளுனர்கள், 10 சுகாதார பார்வையாளர்கள், 32 பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்கள், 18 அலுவலக உதவியாளர்கள், 28 வாட்ச்மேன்கள், 368 துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 35 பணியிடங்களுக்கு 711 நியமிக்கப்படவேண்டியுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்பக்கேட்டு மாமன்றத்தின் அனுமதியுடன் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் நெல்லை மாநகராட்சியில் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்படவுள்ளது.

Last Updated on Friday, 27 July 2012 05:52
 

மாநகராட்சி, நகராட்சிக்கு "முதல்வர்' விருது: தேர்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு

Print PDF

தினமலர்                 27.07.2012

மாநகராட்சி, நகராட்சிக்கு "முதல்வர்' விருது: தேர்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு

சென்னை:சிறப்பாக பணியாற்றும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு விருது வழங்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்டக்குழுவினை, முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார்.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவற்றுக்கிடையில் ஆக்கப்பூர்வமான போட்டி அவசியம். எனவே, சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று "முதல்வர் விருது' வழங்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.இதில், சிறந்த மாநகராட்சிக்கு, 25 லட்ச ரூபாய், சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக்கு, முறையே, 15, 10 மற்றும் ஐந்து லட்ச ரூபாயும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே, 10, ஐந்து மற்றும் மூன்று லட்ச ரூபாயும் மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்ய, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைவராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத் தலைவர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குனரை உறுப்பினர்- செயலராகவும் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவினை நியமித்தும், இதற்கென, 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், சாலை மேம்பாடு, மின்சார பயன்பாட்டில் சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளை தேவையான நேரங்களில் மட்டும் எரியச் செய்தல், திறம்பட்ட நிதி மேலாண்மை ஆகியவற்றை அளவுகோல்களாக கொண்டு, "முதல்வர் விருது'க்கான சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்யும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

கட்டுரைகள்: உள்ளாட்சியிலும் நல்லாட்சி தேவை

Print PDF

தினமணி          26.07.2012

கட்டுரைகள்: உள்ளாட்சியிலும் நல்லாட்சி தேவை

 நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்களே. அவற்றில்தான் நாட்டின் ஜீவன் வாழ்கிறது. ஆகவே கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான முன்னேற்றம்'' என்றார் அண்ணல் காந்தியடிகள். அத்தகைய கிராமங்களை மையமாக வைத்தே கிராம சுயராஜ்யத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 இதனடிப்படையிலே நமது அரசியல் தலைவர்களும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சட்டங்களை இயற்றி நாட்டின் முன்னேற்றத்துக்கு திட்டங்களையும் தீட்டினர். நாட்டின் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதரும் அனுபவிக்கும் வகையிலே குடியாட்சித் தத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 ஊராட்சிகள் என வருவாய்க்கு ஏற்ப உள்ளாட்சித் துறை பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 இதில் மாநகராட்சியில் 815 உறுப்பினர்களும், நகராட்சியில் 3,697 உறுப்பினர்களும், பேரூராட்சிகளில் 8,303 உறுப்பினர்களும், மாவட்ட ஊராட்சி மன்றங்களில் 655 உறுப்பினர்களும், ஊராட்சி ஒன்றியக்குழுவில் 6,470 உறுப்பினர்களும் உள்ளனர். ஊராட்சிகளில் 99 ஆயிரத்து 333 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த அமைப்புகளில் மேயர், தலைவர் ஆகியோர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கீழே அந்தந்த அமைப்புகளின் அன்றாட பணிகளைச் செயல்படுத்திட ஆயிரக்கணக்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 மாநகர் முதல் சிற்றூர் வரையில் மக்களே தங்களுக்கான தேவைகளை தங்களது பிரதிநிதிகள் மூலம் நேரடியாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த அமைப்புகளுக்கு ஆண்டுக்கு இவ்வளவு நிதி என மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கித் தரப்படுகிறது. அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் என கூடுதல் நிதிகளும் தொகுதித் திட்டங்களுக்கு செலவிடும் வகையில் சட்டங்கள் உள்ளன.

 நிர்வாக ரீதியில் பார்த்தோமானால், நமது கிராமங்கள்முதல் நகர்கள்வரை அனைத்து இடங்களிலும் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட மக்களுக்கான வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே அரசு நிதிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் நமது கிராம, நகர்ப்புற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியுள்ளனவா எனக் கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

 பல்லாங்குழிச் சாலைகளும், பாதுகாப்பற்ற குடிநீரும், வெட்டப்படாத முள்செடிகளும் அகற்றப்படாத குப்பைகளும் ஈ, கொசுத் தொல்லையும் தொடர்கின்றன. இதனால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவி, அப்பாவிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பலியாகி வருவது வாடிக்கையாகிறது.

 இதற்கெல்லாம் யார் பொறுப்பு? ஆளுங்கட்சியாக இருப்பவர்கள் என்று உடனடியாகக் கூறிவிடலாம். அது சரியல்ல.

 ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் செயல்படுவது அந்தந்தப் பகுதி மக்களும், அவர்களது பிரதிநிதிகளும்தான். ஆனால், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது பேச்சும், செயலும் அமைகிறது. உண்மையாக தமது பகுதிகள் மீதும், தமது உறவினர்கள் மீதும் அக்கறையுடன் ஊராட்சிப் பிரதிநிதிகள் செயல்படுவார்களேயானால், பகுதி மேம்பாட்டுக்கான நிதியை அவர்கள் முழுமையாக அல்லவா செலவிட்டிருப்பார்கள்? அப்படிச் செலவிடப்பட்டிருந்தால் நமது அடிப்படைத் தேவைகள் இந்நேரம் தீர்க்கப்பட்டிருக்குமே?

 முன்பெல்லாம் உள்ளாட்சிப் பொறுப்புக்கு வந்தவர் அந்தந்த பகுதியில் செயல்படுத்திய திட்டங்களை வைத்து அவரைப் பாராட்டுவதும், புகழ்வதும் பெருமையாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது பொறுப்பில் இருந்தவர் எந்த அளவுக்குச் சம்பாதித்தார் என்பதையே பெருமையாகப் பேசுவதும், அப்படி சம்பாதிக்கும் போக்கை சாமர்த்தியமாகக் கருதுவதும் அதிகரித்துவிட்டது.

 மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுத் தணிக்கை ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் பெரும்பாலான ஊராட்சிகளில் பொய்க் கணக்கெழுதி நிதியை அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

 மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஊராட்சிகளில் நிதி முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் மற்றும் எழுத்தர் எனப்படும் செயலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

 கட்டாத கட்டடங்கள், வெட்டாத குளங்கள், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், சீர்படுத்தப்படாத சுகாதாரம் என நிதிமுறைகேடு பலவழிகளில் நடந்துள்ளது. பள்ளி, கழிப்பறைகள் ஆகிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நிதியையும், குப்பைகளை அகற்றி, கழிவுநீரை வெளியேற்றி சுகாதாரத்தை மேம்படுத்தும் நிதிகளிலுமே பெரும்பாலான ஊராட்சித் தலைவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.

 தென் மாவட்டங்களில் சமீபகாலமாக டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருந்தத்தக்கது. அதைவிட வருத்தத்துக்குரியது எதுவென்றால், சுகாதாரத்தை சீர்படுத்த செலவிடவேண்டிய நிதியை அபகரித்திருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளது செயல்பாடுகள்தான். நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்போரின் ஊழல்களை வெளிச்சமிடும் ஊடகங்கள், நாட்டின் அடிமட்ட வேர்களாக விளங்கும் உள்ளாட்சியில் நடைபெறும் முறைகேடுகளை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. இதனால் உள்ளாட்சிகளில் ஊழல் செய்வோர் சமூகத்தின் பார்வையில் படாமல் தப்பியும் வருகின்றனர்.

 இந்நிலை மாறினாலே நமது எதிர்காலச் சந்ததியினர் ஓரளவாவது சுகாதாரக்காற்றை சுவாசிக்க முடியும்.

 


Page 262 of 841