Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருச்சி மாநகராட்சி புது மேயரின் புதிய திட்டம் :புகார்தாரருக்கு பதில் கடிதம் அனுப்பி அசத்தல்

Print PDF

தினமலர்         12.12.2011

திருச்சி மாநகராட்சி புது மேயரின் புதிய திட்டம் :புகார்தாரருக்கு பதில் கடிதம் அனுப்பி அசத்தல்

திருச்சி: திருச்சி மாநகராட்சி மேயர் திங்கட்கிழமைதோறும் நடத்தும் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் புகார் குறித்த நடவடிக்கை விவரங்கள் மனுதாரருக்கு கடிதம் மூலம், மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து வருவது வரவேற்கதக்க அணுகுமுறையாக உள்ளது. திருச்சி மாநகராட்சி மேயராக ஜெயா கடந்த ஒரு மாதத்துக்கு முன் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் திங்கட்கிழமைதோறும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார். கடந்த காலங்களிலேயே திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் மனுவாங்குவது அமலில் இருந்தாலும், முன்பு இருந்த மேயர் அதை சரிவர கடைபிடிக்கவில்லை. ஆனால் பதவியேற்றது முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்களிடம் மேயர் ஜெயா, துணைமேயர் ஆசிக்மீரா, மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து தவறாது பொதுமக்களிடம் மனு வாங்கி வருகிறார். மேயர் ஜெயா பதவியேற்ற பின் முதல் வாரம் திங்கட்கிழமை பொதுமக்களிடம் மனுவாங்கியபோது, எவ்வித முன்னேற்பாடும் இல்லை என்பதால், புகார் மனுவை பெற்றதுக்கான மனுரசீது கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கு அடுத்த வாரங்களில் மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் ஏற்பாட்டின் பேரில், பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கான மனுரசீதும் வழங்கப்பட்டது. மனுவை பெறும்போதே புகார்தாரரின் பிரச்னைக்கு எவ்வளவு நாளில் தீர்வு காணப்படும் என்பதை மேயர் ஜெயா அதிகாரிகளை தெரிவிக்க சொல்கிறார். அவர்களும் குறிப்பிட்ட தேதிக்குள் பிரச்னை தீர்க்கப்படும் என்று கூறுகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக திங்கட்கிழமைதோறும் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை, சாக்கடை, குடிநீர், குப்பை அகற்றுதல், நீர்தேங்கி நிற்பது உள்ளிட்ட பிரச்னைகளை உள்ளடக்கியதாகும். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேயர் ஜெயாவும், மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தனர். இதையடுத்து அதிகாரிகளும் அளிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீர்வு காணப்பட்ட பிரச்னை குறித்த, புகார்தாரருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது பதில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை, இதுவரை அளிக்கப்பட்ட எந்த புகாருக்கும் தீர்வு காணப்பட்டது குறித்து பதில் கடிதம் அனுப்பியது இல்லை. தற்போது தான் முதல்முறையாக புகார்தாரருக்கு தீர்வு காணப்பட்டது குறித்து பதில் கடிதம் அனுப்பும் முறையை, தற்போது தான் மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. இந்த முறைக்கு மாநகர மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அனுப்பும் பதில் கடிதத்தை பார்த்து, மகிழ்ச்சியில் புகார்தாரர்கள் நன்றி தெரிவித்து மேயருக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பதில் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். திருச்சி மாநகராட்சியின் புதிய பதில் கடித அணுகுமுறை தொடர்ந்தால், மாநகர மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும். பதில் கடிதம் அனுப்பும் முறையில் காட்டும் அக்கறையை, பிரச்னைகள் குறித்த புகார் மீதும் அதிகாரிகள் காட்ட வேண்டும். மனுக்கள் எவ்வளவு?: இதுகுறித்து மேயர் ஜெயாவிடம் கேட்டபோது, ""இதுவரை நடந்த குறைதீர் கூட்டம் மூலம் 103 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 85 சதவீதம் மனுக்கள் மீதான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளது. மீதியுள்ள மனுக்கள் மீதான பிரச்னையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது குறித்து புகார்தாரருக்கு பதில் கடிதம் அனுப்பி வருகிறோம். இந்த முறைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்,'' என்று கூறினார்.
 

மேற்கு மண்டலத்தில் ரோடு, குடிநீர் பிரச்னை: ரூ.1.15 கோடி ஒதுக்க முடிவு

Print PDF

தினமலர்            07.12.2011

மேற்கு மண்டலத்தில் ரோடு, குடிநீர் பிரச்னை: ரூ.1.15 கோடி ஒதுக்க முடிவு

கோவை : "ரூ. ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வது' என, மேற்குமண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேற்குமண்டல ஆபீசில் நடந்த கூட்டத்துக்கு மண்டல தலைவர் சாவித்திரி தலைமை வகித்தார்; உதவிகமிஷனர் முத்துசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மண்டலத் தலைவர் சாவித்திரி பேசுகையில்,""மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 17ம் வார்டில், மருதமலை கோவிலின் திருப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. முதல்வரை அழைத்து, இக்கோவில் கும்பாபிஷேக விழா நடத்தவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார். வீரகேரளம், சொக்கம்புதூர், தடாகம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வார்டிலுள்ள ரோடு, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.மேற்குமண்டலத்துக்கு உட்பட்ட 20 வார்டுகளில் குடிநீர், ரோடு சீரமைப்பு, மழை நீர்வடிகால் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வளர்ச்சிப் பணிக்காக, ரூ. 1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில், வீரகேரளம்பகுதி கவுன்சிலர் மயில்சாமி, சுண்டப்பாளையம் பகுதி கவுன்சிலர் குணசுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

நகரமயமாதலில் தமிழகம் முதல் இடம் : நகரங்களில் 48.45 சதவீத மக்கள்

Print PDF
தினமலர்           21.07.2011

நகரமயமாதலில் தமிழகம் முதல் இடம் : நகரங்களில் 48.45 சதவீத மக்கள்

சென்னை: தமிழகத்தில், நகரமயமாதல் மிக வேகமாக நடந்து வருவது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 4.45 சதவீத வளர்ச்சியில் நகரமயமாதல் இருந்துள்ளது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்போது, நகர்ப் பகுதிகளில் வசிப்போரின் சதவீதத்தில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு நகர்ப் பகுதிகளில், 48.45 சதவீதம் மக்கள் வசிக்கின்றனர். 2001 மக்கள் கணக்கெடுப்பில், 44.04 சதவீதம் மக்கள் நகர்ப் பகுதிகளில் வசித்தனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை நகரங்களைச் சுற்றிய பகுதிகளில் நகரமயமாதல் இருந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நகரமயமாதல் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், கரூர், வேலூர் நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நகரமயமாதல் வேகமாக நடந்து வருகிறது. தமிழகத்தில், கடலோர மாவட்டங்கள் நகரமயமாதலில் பின்தங்கி உள்ளன. ஆனால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்கள், இதற்கு விதிவிலக்காக உள்ளன. அப்பகுதிகளில் உள்ள சிறிய துறைமுகங்களும், சுற்றுலாவும் நகரமயமாதலுக்கு காரணங்களாக உள்ளன என, மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

சட்டமும் ஒரு காரணம் : தமிழகத்தில், நகரமயமாதல் பரவலாக இருப்பதற்கு, 1991 மற்றும் 96ல் செய்யப்பட்ட, அரசியல் அமைப்பு சட்டத்தின் 74வது சட்டத் திருத்தமே காரணமாக உள்ளது. இந்த சட்டத் திருத்தம் மூலம், கிராமப்புறப் பகுதிகள் மறு சீரமைக்கப்பட்டு, நகர்ப் பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம், படிப்பறிவு குறைவாக இருந்தாலும், ஒரு பகுதியைச் சேர்ந்த 5,000 பேர் வேளாண்மை அல்லாத தொழிலை செய்பவர்களாக இருந்தால், அப்பகுதி நகர்ப்பகுதியாக வரையறுக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த நகர்ப் பகுதிகளாக இவை அறியப்படுகின்றன. இப்பகுதிகளில், சதுர கி.மீ.,க்கு 400 பேர் வசிப்பதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூறப்படுகிறது.

வேளாண் தொழில் வீழ்ச்சி : தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், வேளாண் தொழில் குறைந்து வருகிறது. அதே நேரம், தொழிற்சாலைகளின் வளர்ச்சியால், விவசாய தொழிலாளர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதால், நகரமயமாதல் வேகமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 74 லட்சம் பேர் நகர்ப் பகுதிகளில் அதிகரித்ததற்கு இவர்களே காரணம் என, மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சேவை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, நகரங்களை நோக்கி மக்களை ஈர்க்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இத்துறைகளுக்கு, படித்த இளைஞர்கள் அதிகம் வந்து கொண்டிருக்கும் வேளையில், அத்துறைகளைச் சார்ந்து இருக்கும் தொழில்களில் படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருவது நகரமயமாக்கலுக்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 48.45 சதவீத மக்கள் நகர்ப்பகுதிகளில் இருப்பதற்கு, இதுவும் காரணமாகச் சொல்லப்படுகிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் நகரமயமாதல் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அம்மாநிலங்களுடன் தமிழகமும் சேர்ந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 50 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் இருக்கும் நிலையில், அதன் உள் கட்டமைப்பு சீராக இருக்க வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம், செம்மையாக இருக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Last Updated on Thursday, 21 July 2011 09:27
 


Page 265 of 841