Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சேலம் மாநகராட்சியில் நாளை முதல்மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

Print PDF

தினமலர்      08.02.2011

சேலம் மாநகராட்சியில் நாளை முதல்மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் நாளை முதல், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது. மாநகரில், 1,287 ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.நாடு முழுவதும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, புதிய திட்டங்களை தீட்டுவது உள்ளிட்டவற்றுக்கு, மக்கள் தொகை புள்ளி விபரம் அவசியம்.நடப்பு, 2011ம் ஆண்டு, 14 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும், 1,287 ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 27 முதல், 2011ம் ஆண்டு ஜனவரி 25 வரை, 188 மேற்பார்வையாளர்கள் மூலம், மண்டலம் வாரியாக கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயிற்சி முகாம் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் வீடு வீடாக சென்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும், அதற்கான விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, புள்ளி விபரங்கள் விடுபடாமலும், துல்லியமாகவும் இருக்கு வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், தனிப்பட்ட நபரின் பெயர், குடும்ப தலைவருக்கு உறவு முறை, இனம், பிறந்த தேதி மற்றும் வயது, தற்போதைய திருமண நிலை, திருமணத்தின் போது வயது, மதம், மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, கல்வி நிலையம் செல்பவரின் நிலை, அதிகபட்ச கல்வி நிலை, வேலை செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்களின் பண்புகள், இடப்பெயர்ச்சியின் பண்புகள், இனவிருத்தி விபரங்கள் உள்ளிட்ட, 29 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி ஃபிப்ரவரி 28ம் தேதி நிறைவடைகிறது. கணக்கெடுப்பு பணிக்கு பின், புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் இறந்தவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் பணி மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு மிக முக்கியமானது. எனவே, பொதுமக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 

சென்னையில் திருவொற்றியூருக்கு 12 வார்டுகள்

Print PDF

தினமலர்       02.02.2011

சென்னையில் திருவொற்றியூருக்கு 12 வார்டுகள்

ஆர். குமார்/திருவொற்றியூர் : திருவொற்றியூர் நகராட்சியில் தற்போதுள்ள 48 வார்டுகள், சென்னை மாநகராட்சியுடன் இணைவதால், சடையங்குப்பம் ஊராட்சியின் சில பகுதிகளையும் சேர்த்து 12 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஏரியாக்கள், எந்த வார்டுகளில் வருகிறது என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைந்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. 155 வார்டுகள் 200 வார்டுகளாக உயர்த்தப்படுகிறது. திருவொற்றியூர் நகராட்சி, சென்னையுடன் இணைகிறது. தற்போது நகராட்சியில் உள்ள 48 வார்டுகள், மாநகராட்சியில் இணைவதால் 12 வார்டுகளாவது பிரிக்கப்படுகிறது. சடையங்குப்பம் ஊராட்சியின் சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.தற்போதைய திட்டப்படி சென்னை மாநகராட்சியின் மூன்றாவது வார்டு முதல் 14வது வார்டு வரை திருவொற்றியூர் பகுதியில் வருகிறது. புதிய மாநகராட்சி வார்டுகள், அதில் வரும் ஏரியாக்கள் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.மாநகராட்சியின் மூன்றாவது வார்டில் 1,2,3,4, நான்காவது வார்டில் 46,47,48ம், ஐந்தாவது வார்டில் 5, 6, 7, 8, 9 வார்டுகளும் அமைகின்றன. ஆறாவது வார்டில் 43,44,45, ஏழாவது வார்டில் 40,41,42, எட்டாவது வார்டில் 10,11,12 வது வார்டுகளும், ஒன்பதாவது வார்டில் 17,18,19,20 வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.நகராட்சியின் 31,32,33,34 வார்டுகள் மாநகராட்சியின் 10வது வார்டாகவும், 35,36,37, 38,39 வார்டுகள் 11வது வார்டிலும், 26, 27, 28, 29, 30 வார்டுகளும் 12 வது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள 35, 36, 37,38, 39 வார்டுகள் மாநகராட்சியின் 13வது வார்டிலும், 26, 27, 28, 29 வது வார்டுகள் மாநகராட்சியின் 14 வது வார்டையும் உள்ளடக்கியதாக பிரிக்கப்பட்டுள்ளன. நகராட்சி முதன்மைச் செயலரின் அறிவுரைப்படி, புதிய வார்டுகளுக்கு நகராட்சி ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியுள்ளது.திருவொற்றியூர் நகராட்சியில் தற்போது 48 கவுன்சிலர்கள் உள்ளனர். வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது, திருவொற்றியூரிலிருந்து மாநகராட்சிக்கு 12 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவர்.திருவொற்றியூர் நகராட்சி, மாநகராட்சியில் இணைவதன் மூலம், அடிப்படை வசதி அனைத்தும் பெற முடியும் என, பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

துப்புரவு பணியை ஆய்வு செய்ய குழு: மேயர் தகவல்

Print PDF

தினமலர்     03.02.2011

துப்புரவு பணியை ஆய்வு செய்ய குழு: மேயர் தகவல்

சென்னை : ""ஐகோர்ட் உத்தரவுப்படி, இந்த ஆண்டு இறுதி வரை, "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும். இதை ஆய்வு செய்ய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி கூட்டம் முடிந்த பின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியின் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில், "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம் துப்புரவு பணி செய்கிறது. மாநகராட்சியுடனான ஒப்பந்தப்படி, இந்நிறுவனம் ஏழு ஆண்டுகள் துப்புரவு பணி செய்ய வேண்டும். ஆனால், அந்நிறுவனம் சரியாக துப்புரவு பணியை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.அந்த நிறுவனம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை, அவர்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளலாம்.


அடுத்த ஆண்டு, வேறு நிறுவனத்திற்கு மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கலாம்' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.ஏற்கனவே, அந்நிறுவனத்துடன் மாநகராட்சி, அனைத்து கட்சி தலைவர்கள் பேச்சு நடத்திய போது, அந்நிறுவனம் கொடுத்த உறுதிமொழியை பின்பற்றவில்லை. மண்டலத்திற்கு 100 தொழிலாளர்கள் புதிதாக நியமிக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் இதுவரை 80 தொழிலாளர்களை மட்டுமே நியமித்துள்ளனர்."மாநகராட்சியால், பிடித்தம் செய்துள்ள பணத்தை அந்நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிக்கு செலவிட வேண்டும்' என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.அந்நிறுவனம் எவ்வாறு பணிபுரிகிறது; மாநகராட்சியில் பெறப்படும் பணத்தை, முறையாக செலவிடுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து கட்சி கவுன்சிலர்கள் 10 பேர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.இந்த ஆண்டு இறுதியில், "நீல் மெட்டல் பனால்கா' நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுற்றால், அடுத்த ஆண்டு துப்புரவு பணி செய்ய புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய அரசின் அனுமதி பெறுவதற்காகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தென் சென்னையில் ஆதம்பாக்கத்தில் 800 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம், வில்லிவாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை ரயில்வே சுரங்கப் பாதைகள் கட்டுமானப் பணி மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.மாநகரை, அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 12 கோடியே 23 லட்ச ரூபாய் செலவில், பேருந்து சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வண்ண அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். பள்ளி, கோவில்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். இந்த பணிகள் இரு மாதத்தில் முடியும்.இவ்வாறு மேயர் கூறினார்.கணக்கு சரியா வர்லயே...: மேயர் கூறும்போது, "2001ம் ஆண்டு சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 41 லட்சம் பேர் இருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில், 41 லட்சத்து 50 ஆயிரம் பேர் என தெரியவந்தது. 10 ஆண்டில், 50 ஆயிரம் பேர் தான் அதிகரித்து இருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கணக்கெடுப்பு பணியில் பல இடங்கள் விடுபட்டுள்ளது தெரியவந்ததால், பிப்ரவரி 9ம் தேதி முதல் மீண்டும் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடத்தப்படும். இதில், 9,505 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என்றார்.


 


Page 267 of 841