Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

523 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்: 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி      04.01.2011

523 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல்: 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பேர் போட்டியின்றித் தேர்வு


சென்னை, ஜன.3: தமிழகத்தில் காலியாக உள்ள 523 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தலில் 10 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 13 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 319 பதவியிடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள 137 பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 26 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட 103 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

 இதில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 44 பேர் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 10 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 16 இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 69 பஞ்சாயத்துத் தலைவர் பதவி: 69 பஞ்சாயத்துத் தலைவர் பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில் 254 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

 இதில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 88 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 13 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 8 இடங்களுக்கான தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை. 48 இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 376 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்: 376 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 561 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 145 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 274 பதவியிடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 52 இடங்களுக்கு யாரும் போட்டியிடவில்லை. 50 இடங்களுக்கான தேர்தலில் 123 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 சென்னையில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: சென்னை, மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் காலியாக உள்ள தலா ஒரு பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில், சென்னை மாநகராட்சி 93-வது வார்டு உறுப்பினராக திமுகவை சேர்ந்த அருண்மொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 சென்னை நீங்கலாக, மதுரை மாநகராட்சியில் 45-வது வார்டு, ஈரோடு மாநகராட்சியில் 5-வது வார்டு ஆகியவற்றுக்கான தேர்தலில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 4 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதற்கான தேர்தலில் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி: 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 3 இடங்களுக்கான தேர்தலில் 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 மூன்றாம் நிலை நகராட்சி: மூன்றாம் நிலை நகராட்சிகளில் 7 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில், 16 மனுக்கள் தாக்கலாயின. இதில் 1 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 6 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 1 இடத்துக்கான வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

 யாரும் போட்டியிடாததால் 3 இடங்களுக்கான தேர்தல் நடைபெறாது. எஞ்சிய 3 இடங்களுக்கான தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 பேரூராட்சி: பேரூராட்சிகளில் காலியாக உள்ள 36 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதில் 90 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 27 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர். 17 இடங்களுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 4 இடங்களுக்கு யாரும் போட்டியிடவில்லை.

 இதையடுத்து 15 இடங்களுக்கான தேர்தலில் 42 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 ஊரகம், நகர்ப்புறம் இரண்டிலும் சேர்த்து 137 இடங்களுக்கு வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான தேர்தலில் 372 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

மின்பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

Print PDF

தினகரன்      03.01.2011

மின்பராமரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

குன்னூர், ஜன.3:

குன்னூர் நகராட்சி நிர்வாகம் சுகாதாரத்தை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சியிலுள்ள முக்கிய சுகாதார பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மின் பராமரிப்பு பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் தற்போது 2463 தெரு விளக்குகள் உள்ளன.

இதனை முறையாக பராமரிக்க மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் தலா 4 பேர் வீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 மின் கம்பியாளர், 2 மின் கம்பி உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதால் சீரான பணியை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க மின் விளக்கு பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரப்பகுதியில் ஏற்படும் மின் பழுதுகளை அவ்வப்போது களைந்து பொது மக்களுக்கு உதவிட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நகர் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

நாய் பிடிக்க ரூ.25; மாடு பிடிக்க ரூ.150 மாநகராட்சி அழைப்பு

Print PDF

தினமலர்      03.01.2011

நாய் பிடிக்க ரூ.25; மாடு பிடிக்க ரூ.150 மாநகராட்சி அழைப்பு

சென்னை : சாலைகளில் திரிந்த 1, 470 மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு, 21 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை நகர சாலைகளில் ஆங்காங்கு மாடுகள் திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு சாலைகளில் திரியும் மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து,சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம், அபராதம் வசூலித்து, எச்சரித்து விடுவிப்பது வழக்கம். இந்தாண்டு, இதுவரை 1,470 மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளர்களிடம் இருந்து 20 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.தெரு நாய்கள் தொல்லையை தடுக்க மாநகராட்சியில், நாய் பிடிக்க, ஆறு வாகனங்கள் உள்ளன. இதில், 15 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்தாண்டு, இதுவரை 22 ஆயிரத்து 210 நாய்கள் பிடிக்கப்பட்டு, இன விருத்தி தடுப்பு அறுவை சிசிச்சை செய்து, பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடப்பட்டுள்ளது.தற்போது, தெருவில் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க, பணியாளர்களை நியமனம் செய்ய மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது. சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க 150 ரூபாயும், நாய் பிடிக்க 25 ரூபாயும் கொடுக்கப்படுகிறது. இப்பணி செய்ய விருப்பமுள்ளவர்கள் மாநகராட்சியின் சுகாதாரத் துறை, கால்நடை அதிகாரியை அணுக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 04 January 2011 10:13
 


Page 274 of 841