Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் தள்ளிவைப்பு

Print PDF

தினமலர்         31.12.2010

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் தள்ளிவைப்பு

சென்னை : "புறநகர் பகுதிகளை இணைத்து, சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் திட்டம், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின், பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில், புறநகர் பகுதிகளில் உள்ள, 25 ஊராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், ஒன்பது நகராட்சிகளை இணைத்து 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கருத்து கேட்க தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு, கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரிக்கப்பட்ட வார்டுகளின் தெருக்கள் விவரம், முழுமையாக குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால், நேற்று மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும், மேயர் சுப்ரமணியன் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்க தீர்மானம் தள்ளி வைக்கப்படுவதாக, தெரிவித்தார். தொடர்ந்து, மேயர் கூறியதாவது: தற்போது சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 173 சதுர கி.மீ., இந்தியாவில் உள்ள டில்லி, மும்பை போன்ற மாநகராட்சியுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவான பரப்பளவை கொண்ட நகரமாக சென்னை இருப்பதால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையக் கூடாது என்ற வகையில், புறநகர் பகுதிகளை இணைத்து சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட உள்ளது. புதிதாக மாநகராட்சியில், இணைக்கப்படும் பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 3,871 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, கவுன்சிலர்கள் சிலர், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சியில் பிரிக்கப்பட்டுள்ள வார்டுகளின் எல்லை விவரம் தெருக்களின் விவரத்தை, முழுமையாக தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதில், குளறுபடி இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, விரிவாக்க திட்டம் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. மீண்டும், கவுன்சிலர்களின் கருத்து கேட்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இவ்வாறு சுப்ரமணியன் தெரிவித்தார். பா..., எதிர்ப்பு: சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவது குறித்து மாநகராட்சி பா..., தலைவர் ஜெயராமன் கூறியதாவது: சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்துவதை தவிர்த்து, புறநகர் பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் உள்ள அம்பத்தூர், தாம்பரம், திருவொற்றியூர், ஆகிய இடங்களை தலைமை இடமாக கொண்டு மாநகராட்சிகளை உருவாக்க வேண்டும். சென்னை மாநகராட்சி புதிதாக இணைக்கும் பகுதிகளிலும், தற்போது 800 மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால், 200 மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். இதனால், திட்டப் பணிகள் மேற்கொள்வதில், நிர்வாக சிக்கல்கள் ஏற்படும். இவ்வாறு ஜெயராமன் கூறினார். சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்டம், பொதுத்தேர்தலுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. பல வார்டுகளை இணைத்து புதிய வார்டுகளை உருவாக்கியிருப்பதால், தற்போதைய சென்னை மாநகராட்சியில் மட்டும், 48 வார்டுகள் குறைந்துள்ளன. அது போல், புறநகர் பகுதிகளில், வார்டுகளை இணைப்பதால், 500க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பு ஏற்படுகிறது. சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதால், ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் குழப்பம் ஏற்படும். தேர்தல் பணியில் சரி வர ஈடுபடமாட்டார்கள் என்பதால், விரிவாக்க திட்டத்தை தள்ளி வைக்கும் படி, மேலிடத்தில் இருந்து, மேயருக்கு உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இன்று பரிசீலனை : உள்ளாட்சி இடைத்தேர்தல் 1053 பேர் வேட்புமனு

Print PDF

தினகரன்      30.12.2010

இன்று பரிசீலனை : உள்ளாட்சி இடைத்தேர்தல் 1053 பேர் வேட்புமனு

சென்னை, டிச. 30:

தமிழகம் முழுவதும் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 1053 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி வார்டு 93, மதுரை மாநகராட்சி வார்டு 45, ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 5 உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 இடங்கள் காலியாக உள்ளன.

காலியிடங்களுக்கான தேர்தல் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் சுயேட்சைகள் அதிக அளவில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். திமுகவை தவிர இதுவரை எந்த கட்சியினரும், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனை முன்னிட்டு நேற்று சென்னையில் 1 வேட்பாளரும், மதுரையில் 4 வேட்பாளர்களும், ஈரோட்டில் 7 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தமுள்ள 523 இடங்களின் நேற்று மட்டும் 587 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை இந்த 523 இடங்களுக்கும் 1,053 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பரிசீலனைக்கு பின்னர் ஜனவரி 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனவரி 3ம் தேதி வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள். தேர்தல் பணிகளை கவனிக்க சென்னை, மதுரை வார்டுகளுக்கு மட்டும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், ஈரோடு மாநகராட்சிக்கு மாவட்ட வரு வாய் அலுவலர் ஒருவரையும் தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

போட்டியின்றி தேர்வு?

சென்னையில் நேற்று 93 வது வார்டுக்கு திமுக பெண் வேட்பாளர் அருண்மொழி வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 93வது வார்டில் உறுப்பினராக இருந்து மறைந்த சேரனின் மனைவி ஆவார். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுதான் கடைசி நாள். 93வது வார்டுக்கு அருண்மொழி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

200 வார்டுகளுடன் பெருநகரமாக மாறுகிறது சென்னை மாநகராட்சி

Print PDF

தினகரன்       30.12.2010

200 வார்டுகளுடன் பெருநகரமாக மாறுகிறது சென்னை மாநகராட்சி


சென்னை, டிச.30:

புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளை சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.

சென்னை மாநகராட்சி 10 மண்டலமாக பிரிக்கப்பட்டு, 155 வார்டுகளாக செயல்படுகிறது. இதை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதியில் உள்ள 9 நகராட்சிகளும், 25 பஞ்சாயத்துகளும் இணைக்கப்பட உள்ளன. இதனால் சென்னை 430 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பெருநகரமாக மாறுகிறது.

இதில், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம், திருவொற்றியூர், மணலி, கத்திவாக்கம் ஆகிய 9 நகராட்சிகளும். இடையஞ்சாவடி, கடையான்குப்பம், கடப்பாக்கம், தீயப்பாக்கம் உள்ளிட்ட 25 பஞ்சாயத்துகள் அடங்கும்.

இதனால் சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள 155 வார்டுகள் இனி 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே, 155 வார்டுகள் 107 வார்டுகளாகவும், மீதமுள்ள 93வார்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் இருக்கும் வகையில் பிரிக்கப்படுகிறது. வார்டுகள் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டது. புறநகர் பகுதியில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகள் முறைப்படி இணைக்கப்பட்டதும் சென்னை மாநகராட்சி வார்டுகளாக அறிவிக்கப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மற்றும் புதிய வார்டுகள் குறித்த அனுமதி பெறுவதற்கான தீர்மானம் இன்று நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் கொண்டுவரப்படுகிறது.

 


Page 275 of 841