Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை மாநகராட்சி வார்டுகள் 200 ஆக உயர்த்தி அவசர சட்டம்

Print PDF

தினமலர்     22.12.2010

சென்னை மாநகராட்சி வார்டுகள் 200 ஆக உயர்த்தி அவசர சட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி யில், தற்போது 155 வார்டுகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சட்டத்திலும், 155 வார்டுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இணைக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, சென்னையை ஒட்டி யுள்ள கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம், ஆலந்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய நகராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைத்து உத்தரவிடப்பட்டது. இதேபோல, சின்ன சேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளி கரணை, சோழிங்கநல்லூர் ஆகிய பேரூராட்சிகளையும், 25 ஊராட்சிகளையும் சென்னை மாநகராட்சியுடன் இணைத்து உத்தரவிடப்பட்டது.

எனினும், புதிதாக இணைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் பிரிப்பு, அடுத்து நடக்கும் உள்ளாட்சி பொதுத்தேர்தலின் போது தான் அமலுக்கு வரும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தனை உள்ளாட்சிகளை இணைப்பதால், அதற்கேற்ப வார்டுகளின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.மிக அதிகளவில் வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தினால், கவுன்சில் கூட்டம் நடத்துவதில் சிக்கல் மட்டுமன்றி, நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கருதப்பட்டது.

இதையடுத்து, ஒட்டுமொத்த வார்டுகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கேற்ப, அவசர சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சட்டத்தில், வார்டுகளின் எண்ணிக்கை 155 என்று இருப்பதற்கு பதிலாக, 200 என்று மாற்றம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை மாநகராட்சியில் தற்போதுள்ள வார்டுகளின் அளவில் மாற்றம் ஏற்படும். தற்போது 155 வார்டுகள் உள்ள நிலையில், இவற்றில் பல வார்டுகளை இணைத்து, 75 முதல் 80 வார்டுகளாக குறைக்கப்படும்.இதுதவிர, சென்னையுடன் இணைக்கப்படும் இதர நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் வார்டுகளிலும் மாற்றம் செய்யப்படும். இதன்படி, தற்போது போரூர், மீனம்பாக்கம், சோழிங்நல்லூர் போன்ற பேரூராட்சிகள் ஒவ்வொன்றிலும் 20 வார்டுகள் வரையுள்ள நிலை மாறி, ஒரு பேரூராட்சிக்கு ஒரு வார்டு என்ற நிலை ஏற்படும்.சென்னையுடன் இணைக்கப்படும் மாநகராட்சிக்கு, பேரூராட்சியில் இருந்து ஒரு கவுன்சிலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்.ஊராட்சிகளை பொறுத்தவரை, மூன்று அல்லது நான்கு ஊராட்சிகளுக்கு ஒரு கவுன்சிலர் வீதம் தான் இடம் பெற முடியும்.தற்போது மாதவரம், மணலி, அம்பத்தூர் போன்ற மிகப்பெரிய நகராட்சிகளில் உள்ள கவுன்சிலர்கள் எண்ணிக்கை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் நிலையில், ஒரு நகராட்சிக்கு அதிகபட்சம் இரண்டு கவுன்சிலர்கள் தான் இடம் பெறுவர். இதற்கேற்ப, வார்டுகளை பிரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.வார்டுகள் பிரிப்பது பற்றிய வரைவு அறிக்கையும் அரசிடம் தயாராக உள்ளது. எனினும், அடுத்தாண்டு நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு தான், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

 

மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் எதிரொலி போலீஸ் பாதுகாப்புடன் வரி வசூலிக்க முடிவு

Print PDF
தினமலர்         22.12.2010

மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் எதிரொலி போலீஸ் பாதுகாப்புடன் வரி வசூலிக்க முடிவு

மதுரை:மதுரை மாட்டுத்தாவணி விறகு பேட்டையில், வரி செலுத்தாததால் "சீல்' வைக்கப்பட்ட கடையை திறக்க கோரி, மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் விறகு பேட்டையில், வரி செலுத்தாத 26 கடைகளுக்கு மாநகராட்சி "சீல்' வைத்தது. இதைதொடர்ந்து, நேற்று வரி வசூலிக்க சென்ற ஊழியர் விஸ்வநாத்திடம்(31), "சீல்' வைத்த கடையை திறக்குமாறு கோவிந்தராஜ் என்பவரும், அவரது மகனும் வாக்குவாதம் செய்தனர். பின், விஸ்வநாத் கன்னத்தில் அவர்கள் அறைந்ததால், காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கோவிந்தராஜ், அவரது மகன் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் முகமது ரபீக் கூறுகையில், ""அதிகாலை 6 மணி, இரவு 8.30 மணிக்கு வரி வசூலிக்க செல்வதால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வசூல் பணத்தை கொண்டு செல்லும்போது யாராவது வழிப்பறி செய்தால் என்ன செய்வது? இனி, "போலீஸ் பாதுகாப்பு இருந்தால்தான் வரி வசூலிக்க செல்வோம்' என மாநகராட்சி கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.
 

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு பணிகள்

Print PDF

தினமலர்       17.12.2010

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு பணிகள்

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி மூலம்  மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை  மேயர், கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராபத்து என்று கொண்டாடப்படுகிறது. இவ்விழா கடந்த ஆறாம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. விழாவுக்காக மாநகராட்சி மூலம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மாமண்டபம் படித்துறை மற்றும் மண்டபத்தின் நடைபாதை ரெங்கநாதர் பஸ் ஸ்டாப், புலி மண்டபம் சாலை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மா மண்டபம் சாலை குடிநீர் தொட்டி அருகே, அம்மா மண்டபம் எஸ்.என்., திருமண மண்டபம் அருகே மற்றும் ரெங்கநாதர் கோவில் உள்புறம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. கீழ உத்தரவீதி, வடக்கு உத்தரவீதி ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க 200 சிறப்பு துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், மாநகராட்சி இதர கோட்டங்களில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை சிறப்பு பணியாக பணியமர்த்தி தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகை நாளான்று வெளியூர் பக்தர்கள் அதிகமாக வருவதையொட்டி ஸ்ரீரங்கம் பகுதியை தவிர மாநகரின் முக்கிய பகுதிகளான ரயில்வே ஜங்ஷன் வெளிப்புற பகுதி, மத்திய பஸ் ஸ்டாண்டு, சத்திரம் பஸ் ஸ்டாண்டு மற்றும் நகரின் முக்கிய சாலைகளையும் தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களால் சாலையோரங்களில் போடப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற துப்புரவுப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தி குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். கோட்டத் தலைவர் குமரேசன், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, கனகராஜ், விஜயலட்சுமி, உதவி கமிஷனர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

 


Page 279 of 841