Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அடுத்த மாதம் தொடக்கம் மாநகராட்சி பூங்காக்களில் இலவச யோகா பயிற்சி

Print PDF

தினகரன்       17.12.2010

அடுத்த மாதம் தொடக்கம் மாநகராட்சி பூங்காக்களில் இலவச யோகா பயிற்சி

சென்னை, டிச.17: மாநகராட்சி பூங்காக்களில் அடுத்த மாதம் முதல், இலவசமாக யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோட்டூர்புரம், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு அருகே நவீன உடற்பயிற்சிக்கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை மேயர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசியதாவது:

மாநகராட்சி உடற்பயிற்சிக் கூடங்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் 70 உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று 71வது உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காக 228 விளையாட்டுத் திடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 1.74 கோடியில் உபகரணங்கள், கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் திடல்கள் ரூ. 52 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலகத்தரத்திற்கு இணையாக ரூ. 1.59 கோடியில் 2 நீச்சல் குளங்கள் பூங்கா நகரில் உள்ள மைலேடிஸ் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளன.

அந்தந்த பகுதியில் இளைஞர்கள் ஒன்றுகூடி சங்கம் அமைத்து உடற்பயிற்சிக்கூடங்களை பராமரிக்க வேண்டும். 26 மாநகராட்சி பூங்காக்களில் யோகா மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மாநகராட்சி பகுதி ஆசிரியர்கள் மூலம் இலவசமாக யோகா பயிற்சிகள் கற்றுத்தரப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது சென்னை மாநகராட்சி மட்டுமே. இந்த பயிற்சி ஜனவரி 20ம் தேதிக்குள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

 

மாநகராட்சி முடிவு குப்பை லாரிகளில் ஜிபிஎஸ் கருவி

Print PDF

தினகரன்       17.12.2010

மாநகராட்சி முடிவு குப்பை லாரிகளில் ஜிபிஎஸ் கருவி

சென்னை, டிச.17:

சென்னையில் தினமும் சுமார் 3,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி குப்பைகளை அகற்றி, அழுத்தி மற்றும் மூடி எடுத்துச் செல்லும் காம்பாக்டர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த லாரிகள் எந்தெந்த மண்டலத்தில் இருக்கிறது. எந்த தெருவில் இருந்து எந்த தெருவுக்கு சென்று குப்பைகளை அகற்றி எடுத்துச் செல்கிறது என்பதை அறிய காம்பாக்டர் லாரிகளில் சோதனை அடிப்படையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு ஆன் லைன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படி கண்காணிப்பதின் மூலம் குப்பைகளை விரைந்து அகற்றுவது மற்றும் தவறுகள் ஏதும் நடக்காமல் தடுக்க முடிகிறது. மேலும் 170க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கருவியை பொருத்துவதற்காக ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

 

நகராட்சி திட்டத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

Print PDF

தினமலர்      16.12.2010

நகராட்சி திட்டத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்


பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், நகராட்சியின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நகராட்சியின் திட்டமான "சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜர் யோஜனா' திட்டத்தின் கீழ் பிரிட்ஜ், "ஏசி' பழுது சரிபார்ப்பு மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விழாவில், இயந்திரவியல்துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் (கல்வி) விஜயரங்கன் தலைமை வகித்தார்.

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி பெற்ற 81 பயனாளிகளுக்கும், பிரிட்ஜ் மற்றும் "ஏசி' பழுது சரிபார்ப்பு பயிற்சி பெற்ற 12 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை ஆகிய மூன்று நகராட்சிகளை சேர்ந்த பயனாளிகளும், பொள்ளாச்சி நகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜ், சமுதாய மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.ஜெ.எஸ்.ஆர். ஒய்., திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

 


Page 281 of 841