Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவை நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு தடைக்கல்! உள்ளாட்சிகளில் முறைகேடு அதிகரிப்பு

Print PDF

தினமலர்              09.12.2010

கோவை நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு தடைக்கல்! உள்ளாட்சிகளில் முறைகேடு அதிகரிப்பு

பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளின் செயல் அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால் கோவை மாநகராட்சியின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.

கோவை நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 107 சதுர கி.மீ., பரப்புள்ள கோவை மாநகராட்சியை எல்லை விரிவாக்கம் செய்து, தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்தது. குறிச்சி, குனியமுத்தூர் மற்றும் கவுண் டம்பாளையம் நகராட்சிகளும், வடவள்ளி, வீரகேரளம், பேரூர், காளப்பட்டி, துடியலூர், சரவணம்பட்டி, வெள்ளலூர் பேரூராட்சிகளும், சின்னியம்பாளையம், விளாங்குறிச்சி ஊராட்சிகளும் கோவையில் இணைகின்றன.

385 சதுர கி.மீ., பரப்புள்ள பெரு நகரமாக கோவை விரைவில் மாறவுள்ளது. கோவை மாநகராட்சியுடன் இந்த உள்ளாட்சி அமைப்புகள் இணைவதால், நகரங்களுக்கு இணையான வளர்ச்சித் திட்டங்கள் அங்கும் செயல் படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான சூழல் உருவாகும் முன்பே, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் உச்சக்கட்ட முறைகேடுகளால், கோவை நகரின் எதிர்கால வளர்ச்சி, கேள்விக்குறியாகி வருகிறது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்களும், நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து "லே-அவுட்' முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இது, நகர வளர்ச்சிக்கு தடைக்கல்லாக மாறி வருகிறது. கடந்த 2006ல் அனுமதியற்ற லே-அவுட்களை வரன்முறைப்படுத்த போடப்பட்ட அரசாணையே இந்த முறைகேடுகளுக்கு அடித்தளம்.

அந்த அரசாணையின்படி, அது வெளியிடப்பட்ட 2006 ஜூலை 25க்கு முந்தைய நாள் வரையிலும், விற்பனை செய்யப்பட்ட மனையிடங்கள் மட்டுமே வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான கால அவகாசமும், 2007 டிச.31 உடன் முடிவடைந்தது. இந்த அரசாணையைப் பயன்படுத்தி, தற்போதும் மனையிடங்கள், வரன்முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கேற்ப, ஆவணங்களையும் அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர். கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள பேரூராட்சிகளில்தான் இத்தகைய முறைகேடு அதிகளவில் நடப்பதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்குப் பின், சமீபத்தில் விற்பனை செய்த மனையிடம் வரையிலும், பழைய தேதிகளையிட்டு வரன்முறைப்படுத்திக் கொடுக்கின்றனர்.

இது தொடர்பான ஆவணங்களை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அதிகாரிகளோ, நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகளோ ஆய்வு செய்வதேயில்லை. இடத்தின் மதிப்புக்கு ஏற்ப, மனையிடத்தை வரன் முறைப்படுத்த பேரம் பேசுகின்றனர். இம்முறையில் மட்டுமின்றி, நில உபயோக மாற்றம் செய்யாமல், முறையான அங்கீகாரம் பெறாமல், ரோடு, ரிசர்வ் சைட் இடங்களை ஒப்படைக்காமல் முறைகேடாக உருவாக்கப்படும் லே-அவுட்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆதரவளித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில்தான் வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட சில பேரூராட்சிகளில் "பங்காளி தகராறு' ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சிகளில் மட்டுமின்றி, குனியமுத்தூர் உள்ளிட்ட மூன்றாம் நிலை நகராட்சிகளும் இத்தகைய செயல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அங்கும் இவ்விரு தரப்பினரும் கை கோர்த்து களம் இறங்கியுள்ளனர். அங்கீகாரமற்ற லே-அவுட்களை உருவாக்கி வருவதால், கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும்போது, ஏராளமான அங்கீகாரமற்ற லே-அவுட்கள், கோவை நகரில் இருப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அரசுக்கு எவ்வித தொகையும் செலுத்தாமல், ரோடு, ரிசர்வ் சைட்களை ஒப்படைக்காமல், முறையான அணுகுசாலை இல்லாமல் உருவாக்கப்படும் இத்தகைய லே-அவுட்களில் வசிக்கும் மக்கள், எதிர்காலத்தில் போராடப்போவது நிச்சயம். அவற்றைச் சமாளிக்க, பெரும் தொகையை அந்த இடங்களுக்காகச் செலவிட வேண்டிய கட்டாயமும் வரும்.

எனவே, கோவை மாநகராட்சியுடன் இணையவுள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும், சமீபகாலத்தில் உருவாகியுள்ள லே-அவுட் களை ஆய்வு செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்புக் குழுவை நியமித்து, இந்த உள்ளாட்சிகளில் நடந்துள்ள லே-அவுட் முறைகேடுகளைக் கண்டறிந்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத்துறையினரும் விசாரித்தால், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலத்துக்கு வரும். இவற்றைச் செய்யாமல், காகிதத்தில் அரசாணையைப் பிறப்பிப்பதால் மட்டும், கோவை நகரை பெரு நகரமாக மாற்றி விட முடியாது.

 

மிசோரம் மாநில நகராட்சி உறுப்பினர்கள் பெங்களூர் வருகை

Print PDF

தினமணி                      09.12.2010

மிசோரம் மாநில நகராட்சி உறுப்பினர்கள் பெங்களூர் வருகை

பெங்களூர், டிச. 8: மிசோரம் மாநில ஆஜாவெல் நகராட்சி உறுப்பினர்கள், பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.

÷கடந்த நவம்பர் 3-ல் நடைபெற்ற மிசோரம் மாநில நகராட்சி தேர்தலில் ஆஜாவெல் நகராட்சியில் 18 பேர் வெற்றி பெற்றனர்.

÷முதன்முறையாக நகராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர்கள் மாநகராட்சியின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காக சி.டி.ஜகுமா தலைமையில் 3 அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் புதன்கிழமை பெங்களூர் வந்தனர்.

÷துணை மேயர் தயானந்த் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொழில்நுட்ப ஆலோசகர் ராஜசிம்மா மாநகராட்சியின் செயல்பாடுகளை விளக்கினார்.

÷மாநகர சமூக நீதி குழுத் தலைவர் ரங்கண்ணா, உறுப்பினர்கள் சாந்தகுமாரி, நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது

Print PDF

தினமணி            09.12.2010

மாநகராட்சியை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது

கோவை, டிச. 8: கோவை மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட மீன் கடைகளை ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினர், வெளியாட்கள் தலையிட்டுள்ளதாகக் கூறி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மீன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

கோவை உக்கடம் பகுதியில் மீன் சந்தை உள்ளது. மீன் வியாபாரிகளுக்கான கட்டடம் பழுதடைந்துள்ளதால் அதன் அருகில் பேரூர் செல்லும் புறவழிச் சாலையில் மாநகராட்சி சார்பில் இறைச்சிக் கடைகளுக்காக புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு 68 கடைகள் உள்ளன. இவற்றை ஏலம் விட முடிவு செய்து அதற்காக வைப்புத் தொகையுடன் விண்ணப்பிக்க மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து, கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், புதிதாக கட்டப்பட்ட இடத்தில் கடைகளை எடுப்பதற்காக மீன் வியாபாரிகள் ஒன்றாக இணைந்து, தனித்தனிப் பெயர்களில் வைப்புத் தொகை ரூ. 50 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன் ஏலத்தில் பங்கேற்க மாநகராட்சிக்கு விண்ணப்பித்தனர்.

புதிதாக கட்டப்பட்ட கடைகளில், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்துக்கு இரு கடைகள் தவிர, மீதமுள்ள கடைகளில் 10 கடைகளை கருவாடு வியாபாரிகளுக்கும், 10 கடைகளை இறைச்சிக் கடைகளுக்கும், 46 கடைகளை மீன் வியாபாரிகளுக்கும் என ஒதுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்க மீன் வியாபாரிகள் அல்லாதவர்களும், நிதி நிறுவனம் நடத்தி வரும் சிலரும் வைப்புத் தொகையுடன் விண்ணப்பித்துள்ளதாகவும், அரசியல் தலையீடு உள்ளதாகவும் கூறி மீன் வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மீன் வியாபாரிகள் குடும்பத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ராவை மீன் வியாபாரிகள் நல சங்கத் தலைவர் எம்.பி.சுபேர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். கோரிக்கை ஏற்கப்படாததால் மீன் வியாபாரிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மீன் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் சுபேர் கூறியது:

உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மீன் கடைகளை, பழைய கட்டத்தில் இருக்கும் மீன் வியாபாரிகளுக்குத் தான் தரவேண்டும். மீன் வியாபாரம் செய்யாதவர்களும் அரசியல் தலையீட்டால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். இதுபற்றி முறையிட்டும் நியாயம் கிடைக்கவில்லை.

ஏலத்தில் பங்கேற்பதற்காக மீன் வியாபாரிகள் விண்ணப்பித்துள்ள வைப்புத் தொகை வங்கி வரைவோலையை திரும்ப வழங்குமாறு கேட்டோம். ஏலம் முடிந்த பின்னர் தான் தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீன் வியாபாரிகள், பழைய கட்டடத்திலேயே மீன் வியாபாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீஸôர் கைது செய்தனர். இவர்கள் சுங்கம் பகுதி திருமண மண்டத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 


Page 285 of 841