Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குப்பை அள்ளுவதில் தேக்கம்: நீல் மெட்டல் அதிகாரிகளுடன் விரைவில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்

Print PDF

தினமணி             01.12.2010

குப்பை அள்ளுவதில் தேக்கம்: நீல் மெட்டல் அதிகாரிகளுடன் விரைவில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம்

சென்னை, நவ. 30: குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் குறித்த புகார் தொடர்பாக, நீல் மெட்டல் நிறுவன அதிகாரிகளுடன், மாநகராட்சி மன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், நீல் மெட்டல் நிறுவன விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய மன்ற உறுப்பினர்கள், நீல் மெட்டல் நிறுவனம் சார்பில் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் நிலவி வருவதால், அந்நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியே அப்பணியை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய மேயர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

நீல் மெட்டல் நிறுவனத்தில் பணியாளர் குறைவு போன்ற காரணங்களால் குப்பை அள்ளுவதில் தேக்கம் நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து, நீல் மெட்டல் நிறுவனத்துக்கு 50-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், மாநகராட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

குப்பை அள்ளுவதில் ஏற்பட்ட தேக்க நிலையைத் தொடர்ந்து, நீல் மெட்டல் நிறுவனம் 4 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை நிறுத்த, மாநகராட்சி சார்பில் மே 24-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த 4 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பிலேயே குப்பைகளை அள்ள 5,800 தூய்மைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 17 ஆயிரம் பேரின் பெயர்கள் பெறப்பட்டன. இதில் மூப்பு அடிப்படையில் 11 ஆயிரம் பேர் நேர்காணலுக்கு வந்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, நீல் மெட்டல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில், தூய்மைப் பணியாளர்கள் நியமனம் குறித்து துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மேற்கண்ட 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணியை துரிதமாக நடத்திட உத்தரவிடப்பட்டது.

குப்பைகள் அள்ளுவதில் தேக்கம் குறித்து விரைவில் நீல் மெட்டல் நிறுவனத்தின் முடிவெடுக்கும் அதிகாரமுடைய அதிகாரிகளுடன், மாநகராட்சி சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அச்சமயத்தில், குப்பைகள் அள்ளுவதில் உள்ள குறைகளை தீர்க்க, நிறுவனத்தின் சார்பில் போதிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றார்.

 

ஆவின் நிலம் திருச்சி மாநகராட்சிக்கு விற்பனை: தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

Print PDF

தினமணி                   01.12.2010

ஆவின் நிலம் திருச்சி மாநகராட்சிக்கு விற்பனை: தடை கோரும் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

மதுரை,நவ. 30: திருச்சி ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மாநகராட்சிக்குக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தடை கோரிய மனுவுக்கு, ஆவின் பொது மேலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் திருச்சி மாவட்டம், முசிறி சடமங்கலத்தைச் சேர்ந்த மாநில இணைச் செயலர் கணேசன் தாக்கல் செய்த மனு:

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 750 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களில் இருந்து, திருச்சி பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) தினசரி 3.5 லட்சம் விட்டர் பால் கொள்முதல் செய்கிறது. ஒன்றியத்துக்குச் சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை, திருச்சி மாநகராட்சிக்கு மிகவும் குறைந்த விலையில் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விற்பனையால் ஆவின் நிறுவனத்துக்கு மிகவும் இழப்பு ஏற்படும். இதற்கான தீர்மானம் நிறைவேற்ற மகாசபைக் கூட்டம் 1.12.2010-ல் கூட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நில விற்பனை தொடர்பாக தீர்மானிக்கத் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், நிலம் குறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்த வழக்கின் இறுதி முடிவைப் பொறுத்தே அமையும். இந்த மனுவுக்கு, பால்வளத் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், ஆவின் பொதுமேலாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

"பேரூராட்சிப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

Print PDF

தினமணி                01.12.2010

"பேரூராட்சிப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

பெ.நா.பாளையம், நவ.27: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுகாதாரத்தைப் பேண கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

÷இப்பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

÷காமராஜ் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் மாரியப்பன் தனது வார்டில் பணிபுரிய பணியாளர்கள் சரியாக வருவதில்லை. திருவள்ளுவர் நகர் வார்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றார். இதனை மறுத்த திருவள்ளுவர் நகர் பகுதி கவுன்சிலர் சுப்பிரமணியம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தலைவர் அவர்களை சமாதானப்படுத்தினார்.

÷15வது வார்டு கவுன்சிலர் சிவராஜ், தொகுப்பூதிய அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை நிர்வாக ரீதியாக முறைப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர், சின்னவேடம்பட்டி பேரூராட்சியில் என்ன முறை பின்பற்றப்படுகிறதோ அதுவே இங்கும் பின்பற்றப்படுகிறது என்றார்.

÷தொடர்ந்து பேசிய பாரதிநகர் பகுதி கவுன்சிலர் கோவிந்தராஜ், பேரூராட்சியின் புதிய கட்டடத்தில் பெயர் பலகை திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். அண்ணா நகர் பகுதி கவுன்சிலர் பெ.அர.கணேசமூர்த்தி நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். புதிய கடைகளை திறக்கும்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைப்பு தருவதில்லை என குற்றம் சாட்டினார்.

÷இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 


Page 292 of 841