Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கவுன்சிலர்கள் காரசார விவாதம் மேயர் வார்டில் பூங்காவை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

Print PDF

தினகரன்            01.12.2010

கவுன்சிலர்கள் காரசார விவாதம் மேயர் வார்டில் பூங்காவை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேயர் வார்டு பூங்காவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து கல்விக்குழு ஒப்புதல் பெறாதது ஏன் என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

கோவை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி 62வது வார்டில் எஸ்.கே.வி நகர், மணியம் காளியப்பன் வீதி, கணபதி லே அவுட் பூங்காக்கள் அபிவிருத்தி செய்வதற்கு ரூ14.50 லட்சம் ஒதுக்கீடு செய்வதை அனுமதிப்பது குறித்த தீர்மானம் பார்வைக்கு வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் பேசுகையில், "ஏற்கனவே இந்த பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டுள்ளன.

மாநகரின் மற்ற பகுதிகளில் பூங்காக்களை செப்பனிட பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பான எந்த தகவலும் கல்விக்குழுவுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் செய்யப்படும் பணிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கவேண்டும்," என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர் வெங்கடாச்சலம், கல்விக்குழுவுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அங்கு நிலுவையாக உள்ள பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்றார். மேயரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் மீனா லோகநாதன், பிரபாகரன், கண்ணதாசன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மேயர் வார்டில் மட்டும் பொது நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமாக இல்லை.

மற்ற வார்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன. மாநகரில் பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு பொது நிதி தேவைப்படும் சூழலில் பூங்காவுக்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்தது நியாயமில்லை," என காரசாரமாக வாதிட்டனர்.

ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரங்களை மாநகராட்சி பொறியாளர் தெரிவித்தார். இதையடுத்து பிரச்னை கை விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் பெரம்பூர் லோகோ மேம்பாலம் 20ம் தேதிக்குள் முதல்வர் திறப்பு

Print PDF

தினகரன்              01.12.2010

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் கட்டப்படும் பெரம்பூர் லோகோ மேம்பாலம் 20ம் தேதிக்குள் முதல்வர் திறப்பு

சென்னை, டிச.1: மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அப்போது உறுப்பினர்கள் பேசியதாவது:

மீனாட்சி வெங்கட்ராமன் (காங்கிரஸ்): வேளச்சேரி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு (சுயேச்சை): மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் குடிசையில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். இவர்களை பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, பட்டா வழங்குவதற்கான தீர்மானம் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சுசிலா கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்): மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென வீடுவீடாக சென்று குடியிருப்புகளை அளக்கிறார்கள். இதனால் சொத்து வரி உயர்த்தப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

மேயர்: நான்கரை ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. அரசு சொத்து வரி உயர்த்த வாய்ப்பு அளித்தும் மாநகராட்சி உயர்த்தவில்லை. கடந்த சில ஆண்டுகளில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்கும் நடவடிக்கையில் மாநக ராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு ரூ380 கோடியும், இந்த ஆண்டு ரூ400 கோடியை தாண்டியும் வருவாய் அதிகரித்துள்ளது.

தேவி (மார்க்சிஸ்ட்): பெரம்பூரில் தனியார் பள்ளியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சைக்கிள் பார்க்கிங் அமைத்து அதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பூர் லோகோ மேம்பாலம் மற்றும் வில்லிவாக்கம் பாலத்தை விரைவில் திறக்க வேண்டும்.

மேயர்: மத்திய சென்னை எம்பியும் மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் பெரம்பூர் லோகோ மேம்பாலத்தை வரும் 20ம் தேதிக்குள் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். துணை முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதற்கான தேதியை முதல்வரிடமும், துணை முதல்வரிடமும் கேட்டுள்ளோம்.

இந்த பாலம் திறக்கப்பட்டால் பெரம்பூர், ஐசிஎப், வில்லிவாக்கம் மற்றும் வியாசர்பாடி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 

நடைபாதை கடைகளுக்கு கட்டணம் நிதிக்குழு மீண்டும் ஒத்திவைப்பு

Print PDF

தினகரன்           30.11.2010

நடைபாதை கடைகளுக்கு கட்டணம் நிதிக்குழு மீண்டும் ஒத்திவைப்பு

கோவை, நவ.30: கோவை மாநகராட்சி நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நிதிக்குழு தலைவர் நந்தகுமார், உதவி கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், லோகநாதன், துரைராஜ், உதவி செயற்பொறியாளர் ஞானவேல், கவுன்சிலர்கள் சிவமுருகேசன், அசோக்குமார், ராஜேந்திரபிரபு, கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கோவை நகரில் நடைபாதை வியாபாரிகள் மேம்பாட்டு திட்டத்தில், தனியார் அமைப்பு நடத்திய சர்வேயில் சுமார் 3 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு நடைபாதையோரம் கடை ஒதுக்கீடு செய்தல், கட்டணம் நிர்ணயம் செய்தல், குடிநீர், கழிப்பிட வசதி செய்து தருவது குறித்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒரு கடைக்கு தினமும் 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என ஏற்கனவே நடந்த வியாபாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடை ஒதுக்கீடு கட்டணம் குறித்து, கூட்டத்தில் எவ்வித முடிவு எடுக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 19ம் தேதி நடந்த வரி விதிப்பு கூட்டத்திலும் இந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆரம்ப பள்ளி, உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வாட்சுமேன், துப்புரவு தொழிலாளர்கள், குழாய் பொருத்துநர்கள், மின் கம்பியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் ஒரு ஆண்டிற்கு தூய்மை பணி நடத்த 43.70 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கான பணியை நடத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வணிக வளாக கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு முடிந்தது.

அரசாணையின் படி, உரிம காலம் முடிந்த கடைகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு முந்தைய வாடகை தொகையிலிருந்து 15 சதவீதம் கூடுதல் வாடகை உயர்வு பெற்று வசூலிக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது

 


Page 294 of 841