Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குறை தீர்க்கும் கூட்டத்தில் 45 மனு மீது உடனடி தீர்வு

Print PDF

தினகரன்              29.11.2010

குறை தீர்க்கும் கூட்டத்தில் 45 மனு மீது உடனடி தீர்வு

செங்கல்பட்டு, நவ.29: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், கூடலூர், கடம்பூர், காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறைமலைநகர் சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது.

திருப்போரூர் எம்எல்ஏ மூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சோபியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், கங்காதரன், ஜோஸ்வா, ஆர்.. லோகநாதன், கவுன்சிலர் ரவிகிருஷ்ணன், பாமக இளைஞரணி செயலாளர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், புதிய ரேஷன் கார்டு கேட்டு 255 பேரும், முதியோர் உதவித்தொகை கேட்டு 130 பேரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி கேட்டு 5 பேரும், கலப்பு திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி போன்றவை கேட்டு மொத்தம் 421 பேரும் மனு கொடுத்தனர். 45 மனுக்களை உடனே பரிசீலித்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

மூர்த்தி எம்எல்ஏ கூறுகையில், "அடுத்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் 15 நாளில் நடக்கும். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்" என்றார்.

 

குப்பை, கழிவுநீர் அகற்ற முடியவில்லை நகராட்சி வளாகத்தில் நகராத வாகனங்கள்

Print PDF

தினகரன்                  29.11.2010

குப்பை, கழிவுநீர் அகற்ற முடியவில்லை நகராட்சி வளாகத்தில் நகராத வாகனங்கள்

பூந்தமல்லி, நவ.29: பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 45,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலை மற்றும் தெருக்களில் தினமும் 6 டன் குப்பை சேருகிறது. நகராட்சியில் குப்பை சேகரிக்கும் 6 லாரிகளும் பழுதாகி உள்ளன. மாத கணக்கில் பழுதுபார்க்காமல் நகராட்சி வளாகத்தில் காட்சி பொருளாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒர்க் ஷாப்பில் சர்வீசுக்கு விடப்பட்டுள்ள லாரிகளும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் அகற்றுவதற்கு 2 லாரிகள் உள்ளன. அதில் ஒரு லாரி பழுதாகி விட்டது. கழிவுநீர் அகற்றுவதற்கு பணம் செலுத்தி, ஒரு மாதம் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் செப்டிக் டேங்க் நிரம்பி சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு மருந்து தெளிப்பதற்காக ரூ3 லட்சத்தில் வாகனம் வாங்கப்பட்டது. ஆனால், 6 மாதமாக கொசு மருந்தே தெளிக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது கொசு தெளிப்பான் வாகனமும் பயனற்று கிடக்கிறது.

நகராட்சி பகுதியில் சேருகிற குப்பையை குளக்கரைத் தெரு, குமணன்சாவடி&மாங்காடு சாலை மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலையையொட்டி கொட்டுகின்றனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆவடி பைபாஸ் சாலையில் குளம்போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மேலும் பூந்தமல்லி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிறிய பூங்கா முழுவதும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பழுதான லாரிகளை சரி செய்து சாலைகளில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

"தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை'

Print PDF

தினமணி            26.11.2010

"தேங்கிய மழைநீரை அகற்ற தீவிர நடவடிக்கை'

மதுரை, நவ. 25: மதுரை நகரில் தேங்கியுள்ள நீரை டீசல் என்ஜின்கள் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

பருவமழை காரணமாக, மதுரை நகரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாநகராட்சி அலுவலர்களுடன் ஆணையர் எஸ். செபாஸ்டின் வியாழக்கிழமை காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஆணையர் தெரிவித்த தகவல்கள்:

மழைநீர் அதிகம் தேங்கியுள்ள இடங்களில் டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போடி லைன், செல்லூர் கேடிகே தங்கமணி நகர் 1-வது தெரு, துரைச்சாமி நகர் போன்ற பகுதிகளில் இப்பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இப்பணியில் தனியார் ஜேசிபி வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் என 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4 மண்டலங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போடி-லைன், பூக்காரத் தெரு ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான 3 வேளை உணவு, உடைகள் தனியார் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

கிருதுமால் வாய்க்கால், அவனியாபுரம், பந்தல்குடி, சாத்தையார் ஓடை, திருமலைராயர் படித்துறை உள்ளிட்ட 9 வாய்க்கால்களில் அடைப்பு எடுக்கப்பட்டு, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழை நீர் மூலம் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

வைகை ஆற்றின் கரையோரம் வரும் குப்பைகள் அகற்றப்பட்டு, வெள்ளக்கல் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

மழை நீர் வடிகால் பகுதிகளில் அடைப்பு காரணமாக தேக்கம் ஏற்பட்டு இருந்தால், உடனடியாக அடைப்பை அகற்றுமாறும், தண்ணீர் அதிகமாகத் தேங்கியிருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்கள், ஆணையர்கள் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அவர் அறிவுறுத்தினார்.

 


Page 296 of 841