Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போலீஸ் பாதுகாப்புடன் மழை நீரை வெளியேற்றிய அதிகாரிகள்

Print PDF

தினமணி          26.11.2010

போலீஸ் பாதுகாப்புடன் மழை நீரை வெளியேற்றிய அதிகாரிகள்

ராமநாதபுரம், நவ. 25: ராமநாதபுரத்திலிருந்து, கீழக்கரை செல்லும் சாலையில் பசும்பொன் நகர் பகுதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் தேங்கிய மழைநீரை கால்வாய் மூலமாக வியாழக்கிழமை வெளியேற்றினர்.

ராமநாதபுரத்தில், புளிக்காரத் தெரு, சின்னக்கடைத் தெரு,நாகநாதபுரம்,சிவஞானபுரம்,கண்ணன் கோயில் தெரு,குமரய்யா கோயில் பகுதி ஆகியனவற்றில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.

புதிய பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போலக்காணப்படுகிறது. நகரிலுள்ள துணை மின்நிலைய வளாகத்தில் மின்மாற்றிகள் இருக்கும் இடத்திலும் மழைநீர் தேங்கி அந்நீரை மின்வாரிய ஊழியர்கள் ஜெனரேட்டர் மூலமாக கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களின் வழியாக செல்லுமாறு செய்தனர்.

நகரில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் சூழ்ந்து விட்டதால் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அதனை ராமநாதபுரத்திலிருந்து, கீழக்கரை செல்லும் சாலையில் பசும்பொன் நகர் பகுதியில் உள்ள ஷட்டர் மூலமாக திறந்து சக்கரக்கோட்டை கண்மாய்க்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு பசும்பொன் நகரில் ஒரு சிலர் தங்களுக்குப் பாதிப்பு வந்து விடும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஷட்டரை திறந்து பசும்பொன் நகர் கால்வாய்கள் வழியாக நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடனும் ஜெ.சி.பி.மூலமாகவும் அத்தண்ணீரை சக்கரக்கோட்டை கண்மாயக்கு சென்று கடலில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர்.

ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் முஜ்புர் ரகுமான்,வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர் செய்யது,வருவாய் ஆய்வாளர் தமீம்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன்,சுபக்குமார்,நகராட்சி சுகாதார அலுவலர் சந்திரன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Friday, 26 November 2010 11:14
 

வீட்டுமனை அங்கீகாரம் குறித்த குறைதீர் கூட்டம்

Print PDF

தினமலர்               26.11.2010

வீட்டுமனை அங்கீகாரம் குறித்த குறைதீர் கூட்டம்

ஓசூர்: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கு எளிய முறையில் அங்கீகாரம் பெறுவது குறித்த குறைதீர் கூட்டம் இன்று (நவ.,26) நடக்கிறது.
கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்திற்குட்பட்ட நகராட்சி, மத்கிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் புறநகர் பஞ்சாயத்தில் வீட்டுமனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் அனுமதி பெறுவதில் பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பதாக பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த குறைகளை களைய ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் இன்று எளிய முறையில் வீட்டுமனைகளுக்கு, கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவது குறித்த குறைதீர் கூட்டம் நடக்கிறது. தமிழக நகரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் தலைமை வகித்து பொதுமக்கள் குறைகளை கேட்டறிகிறார். முகாமில், ஓசூர் நகராட்சி, மத்திகிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் புறநகர் பஞ்சாயத்து மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கட்டிடங்கள், பல மாடி கட்டங்கள், தொழிற்சாலைகள், வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெறுவதில் உள்ள குறைகளை தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்யலாம்.

 

நல்லூர் நகராட்சி பகுதிக்கென துணை மின் நிலையம் தேவை

Print PDF

தினமலர்               26.11.2010

நல்லூர் நகராட்சி பகுதிக்கென துணை மின் நிலையம் தேவை

திருப்பூர்: "நல்லூர் நகராட்சி பகுதிக்கென தனியாக துணை மின் நிலையம் அமைத்து, மின் வினியோக பிரச்னையை தீர்க்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் நகராட்சி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. மின் சப்ளை போதுமான அளவு இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றன. மின்சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாவதும் வாடிக்கையாகி விட்டது. 100 வாட்ஸ் திறன் கொண்ட பல்பு, 40 வாட்ஸ் போல் எரிகிறது. குண்டு பல்புகளின் பயன்பாடு குறைந்து, டியூப் லைட்டுகள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அவை, குறைந்த மின்சாரத்தில் எரிவதில்லை.

பேன், மிக்ஸி, கிரைண்டணர், எலக்ட்ரிக் ஸ்டவ், "டிவி', பிரிட்ஜ் என வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை உபயோகித்தே பயன்படுத்த முடியும். மின் வினியோக பிரச்னையால், இப்பொருட்கள் அடிக்கடி பழுதாவதால், பலர் வருத்தத்தில் உள்ளனர். பொதுமக்கள் கூறுகையில்,"குறைந்த வோல்டேஜ் இருப்பதால், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மின்வெட்டோடு, மின்வினியோக பிரச்னை பெரும் சிரமத்தை கொடுக்கிறது. இரவு 10.00 மணி வரை குறைந்த வோல்டேஜ் மின்சாரமே கிடைக்கிறது. திருப்பூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலமாக மாறும் நல்லூரில், புதிய துணை மின் நிலையம் உருவாக்க வேண்டும். விஜயாபுரம் அல்லது சென்னிமலை பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். நல்லூர் நகராட்சி பகுதி மட்டுமின்றி, அருகிலுள்ள படியூர், முதலிபாளையம், முத்தணம்பாளையம், பெருந்தொழுவு ஊராட்சி பகுதிகளும் பயனடையும் வாய்ப்புள்ளது. மேலும், நல்லூரில் இருந்து மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு பெறுவதற்கும் திருப்பூருக்கு செல்ல வேண்டும். நல்லூரில் மின் இணைப்பு மற்றும் பில் செலுத்தும் வசதி செய்ய வேண்டும்; இதற்கென அலுவலகம் உருவாக்க வேண்டும்,' என்றனர்.

 


Page 297 of 841