Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

டெண்டர் முறையில் புதிய நடைமுறை சாலைப் பணிகள் முடக்கம்

Print PDF

தினமணி                       18.11.2010

டெண்டர் முறையில் புதிய நடைமுறை சாலைப் பணிகள் முடக்கம்

தென்காசி : கட்டுமானப் பொருள்களின் கடும் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, மணல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், சாலைப் பணிகளை டெண்டர் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. இதனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த மாதம் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலை அமைத்தல், சேதமடைந்த சாலைகளைச் சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக, தேவையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளுக்கு ரூ 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தச் சாலைப் பணிகளுக்கு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக மற்ற பணிகளைக் காட்டிலும், சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு இதுவரை இல்லாத வகையில் புதிய முறையில் டெண்டர் விடப்பட்டது, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு போன்றவையே இதற்குக் காரணமாகும்.

வழக்கமாக, ஒரு தெருவுக்கு சாலை அமைக்க வேண்டும் என்றால், அந்தத் தெருவுக்கு மட்டும் தனியாக டெண்டர் விடப்படும். உள்ளூர் ஒப்பந்ததாரர்களே இப் பணியைச் செய்துவிடமுடியும்.

ஆனால், இப்போது "பேக்கேஜ்' என்ற முறையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த முறையில் பணிகளைச் செய்ய பெரிய அளவிலான ஒப்பந்ததாரர்களால் மட்டுமே முடியும் என்ற நிலை நிலவுகிறது. சுடுகலவை இயந்திரம் (சிஎம்பி) போன்ற இயந்திரம் உள்ளவர்கள் மட்டுமே இந்த டெண்டர்களில் கலந்துகொள்வதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை இப்போது டெண்டர் விடப்பட்டுள்ள பணிகளைச் செய்வதற்கு சிலர் மட்டுமே தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால், அவர்களே மாவட்டம் முழுவதும் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதும் சாலைப் பணிகள் நடைபெறாததற்கு ஒரு காரணம்.

மேலும், தாமிரபரணி கரையோரம் செயல்படும் மணல்குவாரிகளைக் கருத்தில்கொண்டே இந்த டெண்டர்களை அரசு அறிவித்துள்ளது. ஒரு யூனிட் மணலுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ1340. ஆனால், சந்தையில் ஒரு யூனிட் மணலின் விலை ரூ 2800.

தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடைவிதித்துள்ளதால், சிவகாசி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் இருந்துதான் மணல் கொண்டுவர வேண்டும். இதனால் மணலின் விலை மேலும் அதிகரிக்கும்.

டெண்டரில் அரசு ஒரு மூட்டை சிமென்டுக்கு நிர்ணயித்துள்ள விலை ரூ 233. சந்தையில் விலை ரூ 265 முதல் ரூ 285 வரை உள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலையும், அரசு நிர்ணயித்துள்ளதைவிட அதிகமாகவே உள்ளது.

இதனால் முதல்கட்டமாக அறிவித்த டெண்டரில், திருநெல்வேலி மாவட்டத்தில் இலஞ்சி, சாம்பவர்வடகரை, மேலகரம், குற்றாலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் பணிகளை எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இப்போது இரண்டாவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த முறையும் பணிகளை எடுப்பதற்கு பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

எனவே, "பேக்கேஜ்' முறையில் பணிகளை டெண்டர்விடும் முறையை மாற்றி, சிறு சிறு பணிகளாக மாற்றியும், அரசு நிர்ணயித்துள்ள கட்டுமானப் பொருள்களின் விலையை அதிகரித்து, புதிய விலையை நிர்ணயித்தும் டெண்டர் விடவேண்டும் என ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டணமே தொடருமானால், பணிகளின் தரத்தை ஒப்பந்ததாரர்கள் குறைத்துவிடும் சூழ்நிலை ஏற்படும்.

 

கோபி நகராட்சியில் சிறப்பு கூட்டம்

Print PDF

தினமலர்                 18.11.2010

கோபி நகராட்சியில் சிறப்பு கூட்டம்

கோபிசெட்டிபாளையம்: இரண்டு மாதமாக எந்த தீர்மானமும் நிறைவேறாத நிலையில் இன்று காலை கோபி நகராட்சி சிறப்பு கூட்டம் நடக்கிறது. தமிழக சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கோபி நகராட்சி பகுதியில் உள்ள 30 வார்டுகளில் 18 வார்டுகளில் மட்டும் சாலைகள் அமைக்க நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் செய்த குளறுபடியால், .தி.மு.., கவுன்சிலர்கள் வார்டுகளுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி தி.மு.., மற்றும் காங்., கவுன்சிலர்கள் சென்ற செப்டம்பர் 29ம் தேதி நடந்த கூட்டத்தில் தீர்மானங்களை ஒத்தி வைக்ககோரினர். இதனால் ஏற்பட்ட அமளியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

சென்ற மாதம் 28ம் தேதி நடந்த கூட்டத்தில் நான்கு கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளில், ஊழல் நடந்திருப்பதாக கூறி தி.மு.., காங்., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்ற கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேறவில்லை. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நகராட்சி சிறப்பு கூட்டம் நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு சாலைகள் குறித்த தீர்மானம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. "தி.மு.., காங்., கவுன்சிலர்கள், சிறப்பு சாலைகள் குறித்து தமிழக அரசு ஒதுக்கிய நிதியை அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து வழங்க வேண்டும்' என கடந்த இரண்டு கூட்டத்திலும் கோரிக்கை வைத்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து வழங்கப்படவில்லை. இதனால் தி.மு.., காங்., கவுன்சிலர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று நடக்கவுள்ள நகராட்சி சிறப்பு கூட்டத்துக்கு, நேற்று மாலைதான் தீர்மான நகல்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பபட்டது. தீர்மானங்களை ஒத்திவைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடியாமல் தி.மு.., மற்றும் காங்., கவுன்சிலர்கள் தவித்தனர்.

 

சாலையில் நடமாட்டம் ஆடுகளுக்கு அபராதம்

Print PDF

தினகரன்                 18.11.2010

சாலையில் நடமாட்டம் ஆடுகளுக்கு அபராதம்

குன்னூர், நவ.18:போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆடுகளை நடமாடவிட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1250 அபராதம் விதிக்கப்பட்டது.போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சாலையில் நடமாட விடக்கூடாது என்று குன்னூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் நேற்று காலையில் 11 ஆடுகள் சாலையின் குறுக்கே அலைந்தன. இதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், ஞானசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், தண்டபாணி ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் ஆடுகள் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான தொண்டுபட்டியில் அடைக்க முயற்சி மேற்கொண்டனர்.அப்போது ஆட்டின் உரிமையாளர்கள் அங்கு வந்து நகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1250 அபராதம் விதிக்கப்பட்டது.

 


Page 309 of 841