Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தாம்பரத்தில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் 330 பேருக்கு மாற்று இடம் வழங்க ஆய்வு

Print PDF

தினமணி               10.11.2010

தாம்பரத்தில் சாலையோர சிறுகடை வியாபாரிகள் 330 பேருக்கு மாற்று இடம் வழங்க ஆய்வு

தாம்பரம் நவ. 9: சென்னை தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர சிறுகடைகளுக்கு மாற்று இடம் வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நகர்மன்ற அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர்ப்புற சிறுகடை வியாபாரிகளின் நலன் கருதி வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக் கோட்பாட்டின்படி, தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சண்முகம் சாலை உள்ளிட்ட 8 சாலைகளில் சாலையோரக் கடை நடத்தி வரும் சுமார் 330 பேருக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற சிறுகடை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிய மாற்று இடங்களை நகர்மன்றத் தலைவர் இ.மணி மற்றும் ஆணையர் என்.எஸ்.பிரேமா விரைவில் பரிசீலித்து இடஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.

கடைகளுக்கான வரைபடம் மற்றும் உறுப்பினர் பட்டியலை ஓரிரு நாட்களில் வழங்க வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டனர்.

இதுபற்றி அன்னை இந்திரா சிறுவியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.எம். யூசுப் கூறியதாவது:

தாம்பரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரங்களில் சிறுகடைகள் வைத்து வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 330 பேருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் நிலையாக இருந்து வியாபாரம் செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்றார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் தாம்பரம் நகர்மன்றத் தலைவர் இ.மணி, ஆணையர் என்.எஸ்.பிரேமா, காவல்துறை உதவி ஆணையர் முத்தமிழ்மணி, சிறுகடை வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

Print PDF

தினமணி               10.11.2010

துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

திருச்சி, நவ. 8: திருச்சி மாநகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"திருச்சி மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்டத்தின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் கு. நாகராஜன்.

இவர் உயர் அலுவலர்களின் அறிவரைப்படி துப்புரவுப் பணியை மேற்கொள்ளவில்லை. பல முறை அதிகாரிகள் எச்சரித்தும் பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தால் நாகராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துப்புரவுப் பணி, துப்புரவு மேற்பார்வைப் பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் அவர்.

 

நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் சாதனை விளக்க சிறப்பு படக்காட்சி

Print PDF

தினமணி             10.11.2010

நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் சாதனை விளக்க சிறப்பு படக்காட்சி

திண்டுக்கல், நவ. 9: அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர் நடவடிக்கையாக நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொது மக்கள் பார்க்கும் வகையில் சிறப்பு படக் காட்சியாக அரசின் சாதனைகள், தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழா, திரைப்பட நலவாரியம் சார்பில் தாயுமானவர் போன்ற படங்கள் வெளியிடப்பட உள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதி காளனம்பட்டி, காளனம்பட்டி புதூர், 11 ஆம் தேதி சத்திரப்பட்டி, கருங்கல்பட்டி, 12 ஆம் தேதி மேல்கரைபுதூர், ஆவாரம்பட்டி, நவம்பர் 15 ஆம் தேதி சுக்காம்பட்டி, கொண்டசமுத்திரபட்டி, 16 ஆம் தேதி ரெட்டியபட்டி, சேடபட்டி ஆகிய கிராமங்களிலும், நவம்பர்18 ஆம் தேதி முதல் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யம்பாளையம், தாயார்புரம், 19 ஆம் தேதி பூசாரிக்கவுண்டனூர், சித்தையகவுண்டனூர், 20 ஆம் தேதி உண்டார்பட்டி, பள்ளபட்டி, 21 ஆம் தேதி பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டி, 22 ஆம் தேதி காமாட்சிபுரம், 23 ஆம் தேதி பிறகரை, இன்னாசிபுரம், 24 ஆம் தேதி மைக்கேல்பாளையம், மூக்கையகவுண்டனூர், 25 ஆம் தேதி நாகம்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, 26 ஆம் தேதி மாரம்பாடி, சின்னமுத்தனம்பட்டி, 29 ஆம் தேதி மல்வார்பட்டி, சவேரியார்பட்டி, நவ. 30 ஆம் தேதி ஸ்ரீராமபுரம், மண்டபம்புதூர் ஆகிய இடங்களிலும் சிறப்பு படக்காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளன. பொது மக்கள் இந்தப் படக்காட்சியைப் பார்த்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.வள்ளலார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 315 of 841