Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடும்ப திருமண விழாவிற்கு மாநகராட்சி "ஜீப் 'புதிய சர்ச்சையில் மாநகராட்சி கல்வி ஆய்வாளர்

Print PDF

தினமலர்              10.11.2010

குடும்ப திருமண விழாவிற்கு மாநகராட்சி "ஜீப் 'புதிய சர்ச்சையில் மாநகராட்சி கல்வி ஆய்வாளர்

கோவை:குடும்ப திருமண விழாவிற்கு மாநகராட்சி ஜீப்பை கடந்த ஒரு மாதகாலமாக "மாநகராட்சி கல்வி ஆய்வாளர்' பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப் போவதாக மாநகராட்சி துணை கமிஷனர் கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சி கல்வித்துறையில், கல்வி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சோமசுந்தரி. இவர் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே பணிபுரிந்த கல்வி ஆய்வாளர் ராஜூ மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சோமசுந்தரி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

மாநகராட்சி கல்வித்துறைக்கு ஆய்வாளராக வரும் ஒவ்வொரு தலைமையாசிரியரும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கியோ, விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டோ, வகித்து வரும் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அதில் தற்போது பணிபுரியும் பெண் கல்வி ஆய்வாளரும் தப்பவில்லை.

கோவை மாநகராட்சி வசம் 16 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், 13 நடுநிலைப்பள்ளிகள், 42 ஆரம்பப்பள்ளிகள், ஒரு காதுகேளாதோருக்கான பள்ளி ஆகியன உள்ளன. இங்கு 28 ஆயிரத்து 397 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி மேம்பாடு, மாணவ, மாணவியரின் கல்வி தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது, பள்ளி மேம்பாட்டிற்கு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அழைத்து ஆலோசனை மேற்கொள்வது, மாநகராட்சி மன்ற கூட்டம், கல்விக்குழு கூட்டம் போன்றவற்றில் பங்கேற்று பள்ளி மேம்பாடு குறித்து ஆலோசனைகளை தெரிவித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றிற்கு கல்வி ஆய்வாளராக தலைமையாசிரியர் ஒருவரை மாநகராட்சி நிர்வாகம் பணி நியமனம் செய்கிறது.

மாநகராட்சி கல்வி ஆய்வாளராக பணிபுரியும் சோமசுந்தரியின் மகனுக்கு சென்னையில் திருமணம் நடைபெறுகிறது. கோவையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான திருமண அழைப்பு கொடுப்பது முதல் மற்ற பணிகளை கவனிப்பது வரை, மாநகராட்சி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்களையும், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள ஜீப் பையும் கல்வி ஆய்வாளர் சோமசுந்தரி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. கல்வித்துறையில் பணிபுரியும் சக பணியாளர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் என்று பலரும் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பிரபாகரனிடம் கேட்ட போது, புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 

மாநகராட்சி பணியாளர் சஸ்பெண்ட்

Print PDF

தினகரன்                    10.11.2010

மாநகராட்சி பணியாளர் சஸ்பெண்ட்

திருச்சி, நவ 10: பணியில் மெத்தனமாக இருந்ததாக மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் நாகராஜன். இவர் துப்புரவு பணிகளை சரியாக மேற்பார்வையிடாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை செய்தும் அலட்சியமாக இருந்த காரணத்தால் நாகராஜனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாநகராட்சி கமிஷனர் பால்சாமி உத்தரவிட்டார். மேலும் துப்புரவு பணி மற்றும் துப்புரவு மேற்பார்வை பணியில் மெத்தனமாக இருக்கும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

அரசு மீது மாநகராட்சி குற்றச்சாட்டு நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் முடக்கம்

Print PDF

தினகரன்               10.09.2010

அரசு மீது மாநகராட்சி குற்றச்சாட்டு நிதி பற்றாக்குறையால் வளர்ச்சி பணிகள் முடக்கம்

புதுடெல்லி, நவ. 10: மாநகராட்சிக்கு அரசு நிதி ஒது க்காததால், நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்று மாநகராட்சி பணிகள் குழு தலைவர் ஜகதீஷ் மம்கெயின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மாநகராட்சிக்கு தேவையான நிதி ஒதுக்குவதில் மாநில அரசு மெத்தனமாக உள்ளது. அரசின் இந்தப் போக்கால் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. பல்வேறு சமுதாயக் கூடங்கள், பள்ளி கட்டிடங்கள், சாலைப் பணிகள் என பல பணிகள் முடங்கியுள்ளன.

வளர்ச்சிப் பணிகளுக்காக மாநில அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், இதுவரையில் மாநில அரசிடம் இருந்து ரூ.500 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கவே இந்த பணம் போதவில்லை. அடுத்ததாக பணிகளை மேற்கொள்ள புதிதாக நிதி வந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், மாநில அரசு இதை கண்டுக்கொள்ளாமல் உள்ளது.

மாநகராட்சிக்கு நிதி ஒதுக்குவதில், மாநில அரசு தேவையில்லாமல் தாமதம் செய்கிறது. மேலும், நிதியாண்டு இறுதியில் நிதியை ஒதுக்குவதை மாநில அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த சமயத்தில் எந்த பணிகளையும் எடுத்து செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி இருக்கும்.

பணிகள் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்களும் பணிகள் முடங்கிப் போயுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களிடம் மாநில அரசு நிதி ஒதுக்காததாலேயே பணிகள் முடங்கியுள்ளதை விளக்கி, அரசிடம் கூறி மாநகராட்சிக்கு நிதி ஒதுக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு ஜகதீஷ் மம்கெயின் கூறினார்.

 


Page 316 of 841