Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமணி        26.05.2010

பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருக்கோவிலூர், மே 25: திருக்கோவிலூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக்கேடு என பல வகையான தீமைகளுக்கு காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் கைப்பை உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருக்கோவிலூர் பேரூராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் குப்பை கழிவுகள் எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றன. இவைகளால் இந்நகரத்தில் தூய்மைக்கேடு ஏற்படுவதோடு, வடிகால் மற்றும் கழிவுநீர் குழாய்களை அடைத்துக் கொள்வதுடன் நோய் பரப்பும் பூச்சிகள் பெருக வழிவகை செய்கின்றன.

இந்நகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலேயே தொடர்ந்து கொட்டப்படுவதோடு, முக்கிய வீதிகளில் உள்ள பெரும்பாலான குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.

குறிப்பாக இப்பகுதியில் தென்பெண்ணை ஆறு, செவலை ரோடு, கூட்டுறவு விற்பனைச் சங்க அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விதிமுறையை மீறி கொட்டப்பட்டு, விண்ணை முட்டும் அளவுக்கு மேடாக காட்சியளிக்கும் குப்பை மேடுகளின் அளவைக் குறைக்க அவ்வப்போது குப்பைகள் எரிக்கப்படுகின்றன.

இதனால் டையாக்சின் உள்ளிட்ட கொடிய நச்சு வாயுக்கள் வெளியாகுவதால் மக்களுக்கு புற்றுநோய், ஆண்மைக் குறைவு, நரம்பு மண்டல பாதிப்பு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆற்றில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் மாசடைந்து மக்களுக்கு பல்வேறு நோய் பரவும் நிலை உள்ளது.

இந்நிலையில் மழைக் காலங்களில் நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் போன்றவற்றை தடுக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்கி தந்துள்ளது.

மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற அரசின் விதிமுறை இருந்தும் கூட அதனை மீறும் அளவுக்கு இப்பேரூராட்சி நிர்வாகம் உள்ளது.

உதாரணமாக திருக்கோவிலூரை அடுத்த கனகனந்தல் ஊராட்சிப் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்காக பேரூராட்சி நிர்வாகம் அதற்கான இடத்தை வாங்கியது.

இருந்தும்கூட தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றிலேயே குப்பைகள் கொட்டப்படுவதே இதற்கு உதாரணமாகும். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்கும்போதெல்லாம் இன்னும் 15 தினங்களுக்குள் புதிதாக வாங்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் சொல்லளவில் நின்று போகிறது.

எனவே இந்நகரத்தில் மழைநீர் தேக்கம், குப்பை சிக்கல், தூய்மைக்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக் கேட்டுக்கு காரணமான பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதுடன், குப்பைக் கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுத்து, அவைகளை விரைவாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது நகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.