Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் வருகிறது தடை

Print PDF

தினகரன்         26.05.2010

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் வருகிறது தடை

மதுரை, மே 26: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மண்டலத்திற்கு ஒரு நாள் வீதம் 4நாட்கள் தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி நேற்று வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் 2 ஆயிரம் பணியாளர்கள் ஒரே நேரத்தில் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

இதனை பீபிகுளம் 4 ரோடு சந்திப்பில் மாவட்ட கலெக்டர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

மேயர் தேன்மொழி, ஆணையாளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், மண்டல தலைவர் இசக்கிமுத்து, சுகாதார அதிகாரி சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை நகரில் இதன் மூலம் ஒரு நாளில் 400 மெட்ரிக் டன் குப்பை அள்ளப்படுகிறது.

மண்டலத்திற்கு ஒரு நாள் வீதம் 4 நாள் இந்த பணி நடைபெறும். தூங்கா நகரத்தை தூய்மையாக்கும் இந்த திட்டத்திற்கு பொது மக்கள் ஒத்துழைத்து குப்பையை தொட்டியில் கொட்ட வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. எனவே அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

தெருவில் கொட்டினால் அபராதம்

கலெக்டர் கூறும்போது, மாநகராட்சி குப்பை தொட்டிகளில் மட்டுமே குப்பை கொட்ட வேண்டும். இதை மீறும் ஓட்டல், கடைக்காரர்களுக்கு ரூ.500 முதல் 2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி இதுவரை ரூ.இரண்டரை லட்சம் வரை மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது, என்றார்.