Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகள் உபயோகம் 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம்

Print PDF

தினமணி 04.06.2010

பிளாஸ்டிக் பைகள் உபயோகம் 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம்

நாகர்கோவில், ஜூன் 3: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கப்புகளை பயன்படுத்தியதாக 157 கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள கேரி பைகள் மற்றும் கப்புகளின் உபயோகத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில கடைகளில் இந்த பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து கடைகளில் திடீர் சோதனை நடத்த ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டார்.

இந்த சோதனையை மேற்கொள்ள 227 அலுவலர்களை உள்ளடக்கிய 94 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இக் குழுவினர் மாவட்டம் முழுவதும் 3200-க்கும் மேற்பட்ட கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினர்.

அப்போது 157 கடைகளில் இருந்து 294.55 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக இந்த கடைக்காரர்களுக்கு ரூ. 14,550 அபராதம் விதிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் மட்டும் 350 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 18 கடைகளில் இருந்து 41.43 கிலோ பிளாஸ்டிக் பைகளும், கப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்கும் பொதுமக்கள் மற்றும் 95 சதவிகித வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.