Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்

Print PDF

தினமணி 09.06.2010

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்

தூத்துக்குடி, ஜூன் 8: எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என, தூத்துக்குடியில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுவை வெகுவாக குறைக்க முடியும். சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றார் அவர்.

சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ். சாமூவேல் ஆசீர்ராஜ் பேசியதாவது:

எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீரை பாதுகாக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை சேமிக்க ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். தண்ணீர் ஆதாரங்களை பாதுகாக்க குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

தண்ணீர் வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் அதிகப்படியான வெப்பநிலையை உணருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் பணிக்கட்டிகள் உருகி வருகின்றன.

கணினி உதிரி பாகங்கள் போன்ற மின்னணு கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்யும் யுக்திகளை கண்டுபிடிக்க வேண்டும். காற்று மற்றும் ஒலி மாசுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களில் இருந்து வரும் புகையை குறைக்க வேண்டும். இவைகளின் மூலம் சிறிதளவாவது வெப்பநிலையை குறைக்க முடியும் என்றார் அவர்.