Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் இல்லாத நகராக போடியை மாற்ற நடவடிக்கை

Print PDF

தினமணி 14.06.2010

பிளாஸ்டிக் இல்லாத நகராக போடியை மாற்ற நடவடிக்கை

போடி, ஜூன், 13: தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நகராக போடி நகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்தார்.

போடி நகரில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்ற பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கான விழிப்புணர்வு அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த நகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆணையர் க.சரவணக்குமார் கூறியதாவது:

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சுழலுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தினமணி நாளிதழிலும் விழிப்புணர்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. நகரில் குப்பைகளுடன் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் காணப்படுகிறது. இதனால் குப்பைகளை மக்கச் செய்து உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

தமிழகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான நகரமாக போடி நகராட்சியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நகரில் உள்ள ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பை, டம்ளர்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

நகரில் 10 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடகம், கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டு அவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் பேரணி, மனிதச் சங்கிலி போன்றவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை வீட்டில் சேகரிக்கும்போது பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகச் சேகரித்து பின்னர் நகராட்சிப் பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஆட்சியர் தலைமையில் பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக மாற்றுவதற்கான தொடக்க நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட்டு, பிளாஸ்டிக் ஒழிப்பில் போடி நகராட்சி முன்மாதிரியாக மாற்றப்படும் என்றார்.