Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF

தினமணி 17.06.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

பண்ருட்டி, ஜூன் 16: பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்கங்களின் சம்மெüனம் மற்றும் அனைத்து பள்ளிகளும் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகரப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பான தீர்மானம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நகர மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் படி ஜூன் 16-ம் தேதி முதல் நகரப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை (மறுசுழற்சிக்கு உதவாதவை) விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை பிரம்மாண்டமான பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சியை வந்தடைந்தது. பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கி.கோதண்டபாணி முன்னிலை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பேரணியைத் தொடங்கி வைத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரிடம், திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க அமைச்சர் தெரிவித்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது, நூலகத்துக்கு சொந்த கட்டடம் கட்ட ரூ.1 கோடி ஒதுக்கியும் இடம் தேர்வு செய்யப்படவில்லை. ரயில்வே மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்ததுடன் சரி; மேற்கொண்டு நடவடிக்கை இல்லை, விழமங்கலத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்சேய் நல விடுதியில் பணியாளர் இல்லை, பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு தொந்தரவு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்காமையால் விபத்தால் உயிரிழப்பு, கெடில நதியில் குப்பை கொட்டுதல் சுற்றுச்சூழல் பாதிப்பு, செயல்படாத உழவர் சந்தை, கடலூர்-சித்தூர் சாலையில் பைபாஸ் வசதி, கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், பண்ருட்டியில் ஷேர் ஆட்டோ இயக்க வேண்டுதல் உள்ளிட்ட குறைகளை எம்எல்ஏ தி.வேல்முருகனும், செய்தியாளர்களும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியர், உழவர் சந்தை குறித்த பிரச்னைக்கு நகராட்சியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யும்படி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வத்திடம் கூறினார். குப்பை கொட்ட இடம் தேர்வு செய்துள்ளனர். இடத்தை வாங்க மாவட்ட வருவாய் அலுவலர் விலை நிர்ணயித்துள்ளார். திருவதிகையில் மண்ணெண்ணெய் பங்க் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்வதால் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி கூறியதற்கு நகராட்சி பூங்காவுக்கு ஓதுக்கப்பட்ட பகுதியில் இடம் ஒதுக்க ஆவண செய்யும்படியும், தொகுப்பு ஊதியத்தில் தாய்சேய் நல விடுதியில் பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் பெ.சீதாராமன் கூறினார். தொடர்ந்து பண்ருட்டியில் அரசு பெண்கள் பள்ளி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் மங்கலம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வி.வடிவேலு, திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் ஆர்.சேரன், வியாபாரிகள் சங்க பொது செயலர் சி.ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.