Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேஸ்வரத்தில் பாலித்தீன் பயன்படுத்த தடை அபராதம் எவ்வளவு?

Print PDF

தினகரன் 21.06.2010

ராமேஸ்வரத்தில் பாலித்தீன் பயன்படுத்த தடை அபராதம் எவ்வளவு?

"ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள், பொருட்கள் தயாரிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரையும், பையும் & கையுமாக செல்லும் பொதுமக்களுக்கு ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்," என தாசில்தார் அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரம், ஜூன் 21: ராமேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் சுற்றுச்சூழல், சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. இவற்றை தீயிட்டு எரிக்கும் போது கிளம்பும் நச்சுப்புகை, தொற்றுநோய்கள் பரவக் காரணமாக அமைகின்றது. முக்கியமாக, இவற்றை சாப்பிடும் வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

நாடு முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் சர்வ சாதாரணமாக மிதந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அங்கு பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து ராமேஸ்வரம் தாசில்தார் ராஜேந்திரன் கூறியதாவது: ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளால் சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயமும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கடந்த ஜனவரி மாதம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடையை அரசு உறுதிப்படுத்தி தற்போது, அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளில் இனி பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பயன்பாட்டுக்கு இனி முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதமும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்தத் தடையை பொருள் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்ரமணியன், தாசில்தார் ராஜேந்திரன், நுகர்வோர் இயக்கத்தினர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேவஸ்தான கேண்டீன் உள்ளிட்ட உணவு விடுதிகள், கடை களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு, தடை குறித்த விதியை கூறி, இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.