Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேண்டாமே பிளாஸ்டிக் பொருட்கள் : இருந்தால் நடவடிக்கை இருக்கும்

Print PDF

தினமலர் 22.07.2010

வேண்டாமே பிளாஸ்டிக் பொருட்கள் : இருந்தால் நடவடிக்கை இருக்கும்

ஊட்டி : "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் அப்புறப்படுத்த வேண்டும்; தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், 20 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களில், உணவுப் பொருட்களை அடைத்து விற்பனை செய்யவும், பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர், தட்டு போன்ற பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரியில் தற்போது, இப்பொருட்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது. பொதுமக்கள், பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர், தட்டு போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம்; பயன்படுத்துவோர் குறித்த தகவலை, மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அறிவிப்பை மீறி பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால், ஒவ்வொரு முறையும் 1,500, மொத்த விற்பனையாளருக்கு 500, சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்தால் 200, நகரில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தினால் 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள், வியாபாரிகள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அறவே அப்புறப்படுத்த வேண்டும். இதைக் கண்டறிய, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது; குழுவினர், 15 நாட்களுக்கு பின் ஆய்வை தொடங்கும் முன், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். திடீர் ஆய்வின் போது இப்பொருட்கள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.