Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆக்கிரமிப்பால் மாசுபடுகிறது பாளையங்கால்வாய் ரூ.47 கோடி திட்டத்தை துவங்க வேண்டும்?

Print PDF

தினகரன் 23.07.2010

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆக்கிரமிப்பால் மாசுபடுகிறது பாளையங்கால்வாய் ரூ.47 கோடி திட்டத்தை துவங்க வேண்டும்?

எஸ்.சீனிவாசன்

நெல்லை, ஜூலை 23: நெல்லை மாநகர பகுதியில் கழிவுநீர் கலப்பதாலும், பிளாஸ்டிக் கழிவு மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் பாளையங்கால்வாய் மாசுபட்டு நோய் கிருமிகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாசன தேவையை பூர்த்தி செய்வதில் 43 கி.மீ நீள முள்ள பாளையங்கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. தாமிரபரணி நதியிலிருந்து விவசாய தேவைக்காக மேலச்செவல் அருகே உள்ள பழவூர் கிராம பகுதியில் பாளையங்கால்வாய்க்கு தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.

இந்த கால்வாயிலிருந்து கார் மற்றும் பிசான சாகுபடிகளுக்கு விவசாய பணிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதனை பொதுமக்கள் குளிக்கவும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். பழவூரிலிருந்து கோபாலசமுத்திரம், தருவை, முன்னீர்பள்ளம் பகுதிகளில் கால்வாய் தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. ஆனால் மாநகராட்சி பகுதிகளான மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியாகும் அதிகப்படி யான கழிவு நீர், கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கால் வாயில் கொட்டப்படுவ தால் தண்ணீர் அசுத்தமாகிறது.

இக்கால்வாய் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன. கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் விளை நிலங்கள் பாழ்பட்டு விளைச்சலுக்கு உதவாத நிலமாக மாறிவருகின்றன.

கால்வாய் மாசுபடுவதை தவிர்க்க மாநகராட்சி மூலம் பல கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டத் தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே வீடுகளின் கழிவுநீர் பாளையங்கால்வாயில் கலந்து தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கிறது.

இதனால் சிக்குன்குனி யா, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களை பரப் பும் கிருமிகளும், கொடிய நச்சுதன்மையுள்ள பீக்கல் கோலிபார்ம் போன்ற வைரஸ் கிருமிகளின் பிறப்பிடமாகவும் பாளையங்கால்வாய் உள்ளது.

பாளையங்கால்வாய் கழிவுநீர் தாமிரபரணியில் கலப்பதால் ஆற்று நீரின் தன்மையும் மாறுபடுகிறது.

இதனால் ஆற்றில் குளிக்கும் மக்கள் தோல் நோய், முடிஉதிர்தல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய் களால் பாதிக்கப்படுகின்றனர். கால்வாய் மற்றும் ஆற்று நீரை குடிக்கும் கால்நடைகளும் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன.

கடந்த 2008ம் ஆண்டு சட்டபை குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது நெல்லை, பாளையம் கால்வாய்கள் மாசுபடுவதை தடுக்க ரூ.47 கோடி செலவில் திட்டம் தீட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் கழிந்தும் இதற்கான பணிகள் தொடங்காததால் பாளையங்கால்வாயில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதே நிலைநீடித்தால் பாளையங்கால்வாய் கூவமாக மாறி விடும் என சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சேவை பாரதி கணேசன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு செய்துள்ளார்.

மாசுகட்டுப்பாட்டு வாரியம் மனது வைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படாது. வருங்கால சந்ததியினரின் நலன் கருதி பொதுமக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். வீட்டு கழிவுகள் பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் விதமாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மாநகராட்சியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே பாளையங்கால்வாயை பாதுகாக்க முடியும்.